பாட்டொன்று கேட்டேன் 14
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுவோம்
ஜி. சிவக்குமார்

பாடல் : மயக்கமா, கலக்கமா?
பாடல் : கண்ணதாசன்
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : பி. பி. ஸ்ரீனிவாஸ்
திரைப்படம் : சுமைதாங்கி
இயக்கம் : ஸ்ரீதர்
ஆசையே மனிதனின் துன்பத்திற்குக் காரணம் என்றான் கௌதமன். குடும்பம் என்னும் சிலந்தி வலைக்குள் சிக்கியிருக்கும் மனிதனின் துன்பங்களுக்கு எத்தனை எத்தனையோ காரணங்கள்.
கண்ணதாசனின் வரிகள் நினைவில் மின்னி மறைகின்றன.
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரைத் தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வாழ்க்கையில் ஒரு முறை கூட வராத மனிதன் யாருமில்லை என்று சொல்கிறார்கள். அந்த அளவு கொடுந்துயரங்கள் மனித வாழ்வைக் கருமேகங்கள் போல் சூழ்ந்திருக்கின்றன.
தொடர் துயரங்களை அனுபவித்து வரும் நண்பர் ஒரு முறை சொன்னார்.
கஷ்டமெல்லாம் வந்தா ரெண்டு நாள் தங்கிட்டுக் கௌம்பற விருந்தாளி மாதிரி இருக்கணும். அப்பத்தான் அதயும் இதயும் விதவிதமா சமைச்சு போடுவோம். வருஷக்கணக்குல தங்குனா, நாம சாப்பிடற பழய சோத்துல ஒரு கை அள்ளித்தான் வைப்போம்.
இப்படி இடுக்கண் வருங்கால் அவர் நகுந்தாலும், வேதனையை அவர்தானே அனுபவிக்க வேண்டும்.
தாள முடியாத துயரில் செய்வதறியாது, எதற்காக வாழ வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் மரணத்தைத் தேடிச் சென்று தழுவியவர்கள் எத்தனை பேர்?
ஒரு சினிமாப் பாடல் என்ன செய்து விடும்? என்கிற கேள்விக்கு வாழ்கின்ற பதிலாக இருந்த ஒரு பிரபலமானவரைப் பற்றிச் சொல்கிறேன்.
திரைப்படங்களில் பாடல்கள் எழுதி புகழும், வசதியும் அடைய வேண்டுமென்ற எண்ணத்துடன் சென்னைக்கு வரும் ஏராளமான பேர்களில் ஒருவராக ஶ்ரீரங்கத்திலிருந்து வந்து வெகுநாட்களாகியும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தந்தையின் மரணம், தாயாரின் நோய்மை, பசி, பட்டினி அத்தனையும் சூழ, இனி சென்னையை நம்பிப் பயனில்லை என்று மதுரையில் டிவிஎஸ் அலுவலகத்தில் நண்பர் ஏற்பாடு செய்த வேலையில் சேர மதுரை புறப்படத் தயாராகிறார்.
நாகேசும், இவரும், வறுமையும் தங்கியிருந்த அறைக்கு வழக்கம் போல பாடகர் பி. பி. ஶ்ரீனிவாஸ் வருகிறார். அன்று தான் பாடிப் பதிவு செய்த கண்ணதாசனின் பாடலைப் பாடிக் காட்டுகிறார். அந்தப் பாடலைக் கேட்டதும், தன் மதுரைப் பயணத்தைக் கை விடுகிறார். அந்த நேரத்து உணர்வுகளை அவரே சொல்வதைக் கேட்போம்.
“அந்தப் பாடலே என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராணவாயுவை நிரப்பி, எனக்கு உயிர்பிச்சை கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது.”
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 15,000 பாடல்களை எழுதிய அந்த மனிதர், டி. எஸ். ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட, கவிஞர் வாலி. அந்தப் பாடல் சுமைதாங்கி திரைப்படத்தில் இடம் பெற்ற மயக்கமா? கலக்கமா? வாழ்க்கையில் குழப்பமா? என்ற அற்புதமான பாடல்.
பின்னாட்களில் கண்ணதாசனிடம், உங்களுக்கு ஒரு போட்டியாக திரைப்படத்துறைக்கு நான் வந்ததற்குக் காரணமே நீங்கள்தான் என்று சொல்லி, இந்தச் சம்பவத்தைச் சொல்லியிருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் இன்னொரு பாடலான,
மனமிருந்தால் பறவைக் கூட்டில்
மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே
மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில்
எந்த சுமையும் தாங்கலாம்
என்கிற அழகான வரிகளைக் கொண்ட, மனிதன் என்பவன் தெய்வமாகலாம் பாடலோடு தொடர்புடைய சம்பவமும் உண்டு.
தன் பதினாறாவது வயதில் சென்னையில் வாழ வழி தேடி வந்த கண்ணதாசனுக்கு, மண்ணடியில் உள்ள நகரத்தார் விடுதிக்குச் செல்ல முடியவில்லை. இரவு, நேரமாகி விட்டதால் கடற்கரையில் ஓரிரவு தங்க முடிவு செய்கிறார். நாலணா கையூட்டுத் தராததால் போலீஸ்காரர் அவரைத் தங்க விடாமல் விரட்டுகிறார். பின்னாட்களில் விசாலி ஃபிலிம்ஸ் என்ற பெயரில் சுமைதாங்கி திரைப்படத்தைத் தயாரித்த கண்ணதாசன், மயக்கமா? கலக்கமா? பாடலை கடற்கரையில், தான் விரட்டியடிக்கப்பட்ட அதே இடத்தில் ஜெமினிகணேசனை நடக்க வைத்துப் படமாக்கினார். அந்தப் பாடல் காட்சியில் இடம் பெற்ற அத்தனை கார்களும் கண்ணதாசனுடையவை.
துயரச் சுனாமியில் சிக்கி அலைக்கழியும் ஒருவனை நோக்கிப் பாடப்படும் பாடல்தான் மயக்கமா? கலக்கமா? வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும். என்னவொரு எதார்த்தமான, ஆழமான வரி.
நீண்ட காலமெல்லாம் வேண்டாம். உங்கள் வாழ்வின் கடந்த ஐந்து வருடங்களை மட்டும் நினைத்துப் பாருங்கள். இன்னும் எதற்காக வாழ வேண்டும்? என்ற உச்ச வேதனையில் தவித்திருப்பீர்கள். பரவசத்தில் திளைத்திருப்பீர்கள். சம்பவங்கள் ஏதும் நிகழாமல் வெறுமனே இருந்திருப்பீர்கள். எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை என்ற இந்த எளிய உண்மையை அறியாமல், இன்றைய தினத்தில் கெட்டது ஏதும் நிகழக் கூடாது என்கிற எண்ணத்தில், கடவுள்களையும், சாமியார்களையும் தேடி ஓடுகிறீர்கள்.
இப்போது அந்த வரியைத் திரும்பக் கேளுங்கள்.
வாசல்தோறும் வேதனை இருக்கும்
ஆம். அவரவர்க்கு அவரவர் துயரங்கள்.
அடுத்த வரியைக் கேளுங்கள்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
உண்மையில் ஒரு துயரத்தால் அல்ல, அந்தத் துயரத்தின் தொடர் நிகழ்வுகளைக் கற்பனை செய்துதான் நாம் துயரங்களின் அடர்த்தியைக் கூட்டிக் கொள்கிறோம்.
ஆம்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
பிறகு என்னதான் செய்வது? அடுத்த வரிகள் நம்மை மேலும் ஆற்றுப்படுத்துகின்றன.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
அடுத்தவர்களுக்குச் சொல்வதற்கு எளிதாக இருக்கும். அனுபவிக்கிறவனுக்குத்தானே வேதனை தெரியும் என்பீர்கள். வேறு என்ன செய்ய? இறுதி வரைக்கும் அமைதி வேண்டுமென்றால், எதையும் தாங்கும் இதயத்தைப் பெறும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்தப் பாடலின் உன்னதமாக நான் கருதுவது, வேதனையில் உழலும் ஒருவனுக்கு வெற்று ஆறுதலாக இல்லாமல், அந்த வேதனையிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் காட்டுவதுதான்.
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
குடிசை மாளிகையாவதும், மாளிகை குடிசையாவதும் அவரவர் மனதைப் பொறுத்ததுதானே? அதனால்தான் சொல்கிறார். இன்றைய உன் நிலையை ஏற்றுக் கொண்டு, உன் மனதைத் தயார் செய்து மகிழ்வாக வாழ முயற்சி செய் என்கிறார்.
மரணத்தை நோக்கி நகரும் வாழ்வில், எல்லாமே நம் விருப்பப்படி நடக்காது என்பதையும், நடக்கிற எந்த நிகழ்வையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் என்று உணர்கிறோமோ அன்றுதான் நம் மனது அமைதியடையும். நாளை என்ன நடக்குமோ? என்று குழம்புவதையும், அஞ்சுவதையும் விட்டு, நாளைய நிகழ்வுகளை இறைவன் வசம் ஒப்படைத்து விட்டு இன்றைய பொழுதை மகிழ்வாக வாழச் சொல்கிற இந்த வரிகளைக் கேளுங்கள்.
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு.
இந்தப் பாடலின் உச்சம் கடைசி இரு வரிகள்தான்.
வாழ்வில் எத்தனை முறை நான் நினைத்துக் கொண்டதும், ஏன் நீங்கள் நினைத்துக் கொண்டதும், நாம் நினைத்துக் கொள்ள வேண்டியதும் இந்த வைர வரிகளைத்தான்.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
நிம்மதியான வாழ்வுக்கான ஒரு பாதையை, இதை விட எளிமையாக யாரால் காட்டித் தர முடியும்?
இயக்குனர் ஸ்ரீதர், ஒளிப்பதிவாளர் வின்சென்ட் இணைப்பில் உருவான மற்றுமொரு அற்புதம் இந்தப் பாடல் காட்சி.
துயரில் உழலும் ஜெமினியுடன் அவரது மனசாட்சி உரையாடுவது போல் அமைந்த காட்சியிது.
இருளும், ஒளியும் சரி பாதியாக ஜெமினி மேல் படர்ந்திருக்க மெல்லிசை மன்னரின் இசை, நம்மை ஒரு பேரனுபவத்திற்குத் தயார் செய்கிறது.
மனதிலே குழப்பமா? என்கிற வரிகளின் போது ஜெமினியின் பாதி முகம் கலங்கி மங்கியிருப்தைக் கவனிக்கிறோம்.
கண்ணாடிக்குள்ளிருந்து மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா? என்று ஜெமினியின் முகம் மேலெழுகிறது. ஸ்ரீதரின் திரைப்பாடல் உருவாக்கத்தில், கண்ணாடியும் அதில் தெரியும் உருவங்களும் ஒளிப்பதிவாளர் வின்சென்டின் முத்திரையல்லவா?
பாடல் காட்சி முழுவதும் ஒளியும் இருளும் பல அற்புதங்களை நிகழ்த்திய வண்ணமிருக்கின்றன. துயரில் மூழ்கியிருக்கும் ஜெமினியின் மீது இருளும் ஒளியும் மாறி மாறி படர்கையில், ஆற்றுப்படுத்திப் பாடுகிற ஜெமினி பிரகாசமான வெளிச்சத்திலேயே இருக்கிறார். குழப்பத்திலும் தெளிவிலும் தடுமாறுகிற மனதிற்கும், தெளிவான மனதிற்கும் ஒளியும் இருளும் பொருத்தமான குறியீடுகளாகின்றன.
துயர் சூழும் நேரங்களில் நாமும் நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுவோம்.

Leave a comment