அத்தியாயம் 1

கௌதம புத்தர்
அல்லது
அஞ்ஞான இருளகற்ற வந்த மெய்ஞ்ஞான ஜோதி.

அத்தியாயம் – 1

சுத்தோதனன் மனக்குறை

சுத்தோதனரும் மாயாதேவியும் உப்பரிகையில்


லகிலுள்ள மலைகள் அனைத்தினும் உயரிய சிகரத்தையுடைய இமாலயம் என்னும் உன்னதப் பனிமலை முடி கவிக்க, கங்கையும் யமுனையும் முகந்துடைக்க, கன்னியுங் குமரியும் அடி நனைக்க, கடலரசி2யின் பாதுகாப்பில் கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்திய மாதாவின் திருமுக மண்டலம்போலச் சிறந்து விளங்குவது உத்தரகோசலதேசம். கங்கை என்னும் பேராற்றிற் கிளைத்த உரோகிணி நதி அத் தேசத்தூடே பாய்ந்து அதற்கு அழகும் வளமும் கொடுத்துச் செல்கிறது. அதன் கரையில்,

மறந்து மழைமா மகதநன் னாட்டுக்(கு) ஒருபெருந் திலகமென் றுரவோர் உரைக்கும் காவரும் பெருமைக் கபிலையம் பதி 3
உள்ளது. அந்நகரில் இற்றைக்குச் சற்றேறக்குறைய ஈராயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முன்னே சுத்தோதனன் என்னும் அரசன் இருந்து அரசு செலுத்தி வந்தான்.
ஒருநாள் பொழுது புலர்ந்து இரண்டு மூன்று நாழிகையிருக்கும். சுத்தோதனன் தன் அரண்மனை மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். கார்காலத் துவக்கமானதால், ஆகாயம் அதிக வெப்பமாகவாவது அதிக குளிர்ச்சியாகவாவது இல்லாமல் நடுத்தரமாயிருந்தது. அரசன் சாளரத்தின் வழியாகக் கண்ணிற்பட்ட அரண்மனைத் தோட்டத்தைப் பார்க்க விரும்பி, நின்றான். தோட்டம் பணியாளர் உழைப்பாலும், பருவத்தின் இயல்பாலும், நீரும் நிழலும் நிறைந்து, பார்க்கப் பார்க்க இன்பம் பயக்கத்தக்கதாயிருந்தது. முல்லை முதலிய பருவமலர்கள், இதழ் விரித்துத் தேன் சொரிந்து, வண்டினங்களை ‘வம்மின்’ என்று வாய் விட்டு அழைப்பதுபோல, நறுமணத்தை நாற்றிசையும் பரப்பின. கொய்யா மா முதலிய கனிதரு மரங்களில், அணில்களும் கிளிகளும், சுவை மிகுந்த பழங்களாய்ப் பார்த்து, முறையே கடித்தும் கோதியும் தின்று, தம் இச்சைப்படி ஓடியும் பறந்தும் குதூஹலித்தன. வாழைகள் தாம் ஈன்ற குலைச் சுமையைத் தாங்கமாட்டாமல் தளர்ந்து தள்ளாடித் தலைசாய்த்து நின்றன. பச்சைக் கம்பளங்கள் பலவற்றைப் பற்பல விடங்களில் பரவ விரித்தாற் போல இடையிடையே பச்சென்று பரந்திருந்த புற்றரையில், அரண்மனை மயில்கள் சில, தம் கோலக்கலாபம் விரித்து அழகாய் ஆடிக்கொண்டிருந்தன. கள்ளமற்ற புள்ளிமான் ஒன்று, புல்லைக் கறிப்பதும், சற்றுத் துள்ளி ஓடுவதும், மீட்டும் நின்று புல்லைக் கறிப்பதுமாய், செல்வச் சிறுகுழந்தை போல விசாரமற்று விளையாடியது.
இவைகளையெல்லாம் கண்டு இன்பமுற்று மலர்ந்த அரசன் திருமுகம், திடீரென்று நீராவிபட்ட கண்ணாடி மண்டலம் போலவும், இராகுவாற் பற்றப்பட்ட சந்திரன் போலவும், வெயிலால் வெதுப்பப்பட்ட தாமரை போலவும் ஒளி குறைந்து, பொலிவிழந்து, வாட்டமுற்றது அவன் பார்வை அரண்மனைத் தோட்டத்தை விட்டு அகலவில்லையாயினும், சற்று முன் தோற்றிய இனிய காட்சி அச் சமயம் அவனுக்குத் தோற்றவில்லை. தோட்டத்தை நோக்கி நின்றும், அவன் கண்கள் வெட்ட வெறுவெளியையே கண்டன. அவன் சிந்தை மரத்திற் கனிந்த கனிகளிலும் இல்லை; கொடியில் மலர்ந்த மலர்களிலும் இல்லை; ஓடும் அணில்களிடத்தும் இல்லை: பறக்கும் கிளிகளிடத்தும் இல்லை; துள்ளும் மானின் மாட்டும் இல்லை; உலவும் மயில்கள் மாட்டும் இல்லை; இவைகளையெல்லாம் விட்டு வேறெதிலோ ஆழ்ந்திருந்தது
இந்நிலையில் சுத்தோதனன் சுமார் ஐந்து நிமிஷ நேரம் நின்றிருக்கலாம். அப்பால் மாடிப் படிக்கட்டேறி வந்த ஒரு பெண்மகளின் காற்சிலம்போசையால் அவன் சிந்தனை கலைந்தது ஆயினும், அவன் நின்றவிடத்தை விட்டுப் பெயராமலே, வருவது யாரென்று திரும்பிப் பார்த்தான்: தன் காதற்குரிய பட்டத்தரசி மாயாதேவி என்பாள் தன்னருகே வந்து செவ்விய மெல்லிதழ்களிற் புன்னகை தவழ முகமலர்ந்து நிற்பதைக் கண்டான். உடனே தானும் புன்னகை புரிந்தான் ஆனால், அவன் முகம், புன்னகைக்கேற்ப அலர்ந்து விளங்கிற்றில்லை. மாயாதேவி அதைக் கவனித்தாள்; அரசன் மனம் ஏதோ கவலைக்குள்ளாயிருக்கிறதென்பதை எளிதில் உணர்ந்தாள். உடனே, அக் கவலையாதென்று அரசனைக் கேட்க எண்ணிய அவள், வேறெதையோ நினைவுகூர்ந்து, மாடிப்படிக் கட்டை எட்டிப் பார்த்தாள். ஊழியக்காரி ஒருத்தி, அப்பொழுதுதான், வெண்பட்டால் மூடப்பட்ட தங்கப் பலகாரத்தட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு படிக்கட்டேறி வந்தாள். மற்றொரு வேலைக்காரி, நீர் நிறைந்த வெள்ளிச் செம்பொன்றைக் கையில் ஏந்தி அவளைத் தொடர்ந்து வந்தாள்.
பட்டத்தரசி. அவர்கள் இருவரும் மாடிமேல் வரும் வரையில் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்து, அவர்கள் மேல் வந்த பிறகு. முன் வந்தவளை நோக்கி, “பங்கஜம், தட்டை ஊஞ்சலின்மேல் வை” என்று கூறிவிட்டு மற்றவளை நோக்கி, “அடி, காமாக்ஷி, நீ செம்பை அப்படிக் கீழே வை” என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினாள். இருவரும் அரசியின் கட்டளையை நிறைவேற்றிவிட்டு, ஒருபுறமாய் ஒதுங்கி, மேல் உத்தரவை எதிர்பார்த்துப் பணிவுடன் நின்றார்கள். அப்பால் அரசி அவர்களைப் பார்த்து “சரி, நீங்கள் போகலாம்” என்றாள். பணிவிடைக்காரிகள் இருவரும், தலைவணங்கி, அரசியை நோக்கிய வண்ணமே கீழிறங்கிச் சென்றுவிட்டார்கள்.
அவர்கள் கண்ணுக்கு மறைந்த பிறகு, மாயாதேவி, அரசன் இடத்தோளைத் தன் வலக்கரத்தாற்பற்றி, அவனை முடிமுதல் அடிகாறும் ஏற இறங்கப் பார்த்துச் சிறுநகை செய்தாள். அரசன், தோட்டத்தை நோக்கி, வெளிக்குச் செய்த புன்னகையால் இதழ்கள் சற்றே அகன்றபடி, மௌனமாய் நின்றான். மன்னனும் தேவியும் அங்கனம் நின்ற நிலை சித்திரத்தில் எழுதத்தக்க சிங்காரம் வாய்ந்திருந்தது.
அவன் சுத்தோதனன் நெடிய பெரிய உருவினன். சிரம், ராஜகிரீடத்தைச் சிறக்க வகிப்பதற்கென்றே அமைந்ததுபோல, வன்மையும் பெருமையும் வடிவும் வனப்பும் பொருந்தி விளங்கியது. உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் ஒவ்வொரு அவயவத்திலும் நிறைந்து வழிந்த லக்ஷணத்துக்கெல்லாம் ஊற்றிடம் இவைதாமோ என்று கருதுமாறு அவன் கண்கள் இரண்டும் அகன்று நீண்டு கருணையும் வீரமும கம்பீரமும் தெளிவும் பொருந்தித் திகழ்ந்தன . அவன் முகம் இளஞாயிறுபோல, பார்த்தவர் உள்ளத்தில் பக்தியும் பணிவும் உண்டாக்கத்தக்க பேரழகும் பிரகாசமும் வாய்ந்திருந்தது; தோள்கள் திரண்டுருண்டு எடுப்பாயிருந்தன; மார்பகம் அகன்று விளங்கியது அள்ளி அளிப்பதன்றி, ஏந்தி ஏற்பதறியாத அவன் கரங்கள் முழந்தாளளவும் நீண்டிருந்தன.
இங்ஙனம் அழகெல்லாம் சேர்ந்து ஓர் ஆண் வடிவம் எடுத்ததுபோல விளங்கினான் சுத்தோதனன் என்றால், அழகின் பெண்வடிவம் என்னுமாறு விளங்கினாள் மாய தேவி. கருமையும் மென்மையும் அடர்த்தியும் வாய்ந்த தன் கூந்தலை, அவள் வகிர்ந்து வாரிக் கோதி எடுத்து முடிந்திருந்தாளாயினும், அதை அவிழ்த்து விட்டால் அதன் முனை அவள் காலைத் தொடும். அவள் வட்டமுகம் அன்றலர்ந்த செந்தாமரைபோல் அழகும் செழுமையும் பொருந்தியிருந்தது; கண்கள் தோட்டத்தில் விளையாடும் மானுக்குப் பார்வை கற்றுக் கொடுப்பனபோன்று கள்ளங் கபடமின்றி, உள்ளத்தில் அமைந்த கற்பும் கருணையும் பொறுமையும் பெருமிதமும் அறிவும் அடக்கமும் வெளித் தோற்ற வைத்த பலகணிகள் என்னத் திகழ்ந்தன; புருவங்கள் கறுத்தடர்ந்து வேப்பிலை வடிவாயிருந்தன; நெற்றி அர்த்த சந்திரன்போல் விளங்கியது; கன்னங்கள் இரண்டும் கண்ணாடியைப் பழித்தன; இதழ்கள் மென்மையும் செம்மையுமுடையனவாய், பவளத் துண்டங்கள் இரண்டைக் கடைந்து திருத்திப் பதித்தாற்போல் காணப்பட்டன: பற்கள் முத்துக் கோத்தாற்போல் வெள்ளையாயும் ஒழுங்காயுமிருந்தன. செம்பஞ்சுக் குழம்பூட்டப்பெற்ற அவள் பாதங்கள், விவாக காலத்தில் சுத்தோதனன் காத்தாற்பற்றி அம்மி மீது வைக்கப்பட்டபோது எவ்வாறு கூசினவோ என்று எண்ணு மாறு அவ்வளவு மெல்லியவாய், பூவிதழ்கள் போன்றிருந்தன. அவள் உருத்தோற்றம், ராஜமகிஷிக்குரிய கம்பீரம் வாய்ந்திருந்தது. உயரத்தில், அவள் சுத்தோதனனுக்கு ஒரு பிடிதான் குறைந்திருந்தாள்.
மாயாதேவியிடம் சுத்தோதனன் கொண்டிருந்த காதல் பூரணமானது. அவள் தன் அருகிருக்க அவன் கவனம் அவளைவிட்டு வேறெதிலும் சென்றது இதற்குமுன் எக்காலும் இல்லை. ஆதலால், இப்பொழுது அவன் தன்னோடு உரையாடாமலும். தன்னைக் கவனியாமலும். வேறெதிலோ நாட்ட முற்றிருந்தது மாயாதேவிக்குப புதுமையாய்த் தோற்றியது. ஆனால், அவள், பிற மாதர்கள் பலரைப்போல எடுத்ததற் கெல்லாம் முகங்கோணிப் பிணங்குபவள் அல்லள். பாரம் சாமானியமானதன்றே. எந்த ராஜகாரியம் அவர் மனத்தைக் கவர்ந்து கவற்சிக்குக் காரணமாயிருக்கிறதோ’ என்று எண்ணி அவள் உள்ளுக்குள் கலங்கி, ஆனால் அதை வெளிக்காடடாமல், அரசன் மனக் கவலையை மாற்றுவதொன்றையே கருதி, இன்பப் புன்னகை செய்து, அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “காதல, அடியாள்மீது கொண்ட கோபம் யாதோ?” என்றாள்.
அப்பொழுதுதான் அரசன் திருமுகம் அலர்ந்தது அவன் தன் காதற்றேவியைத் திரும்பிப்பார்த்து, ” மாயா, நான் உன் மீது கோபிப்பேன் என்று நீ கனவிலும் கருதலாமோ? என் உயிருக்கு உயிரான உன் மீது கோபிக்க எனக்கு மனந்தான் வருமோ?” என்றான்.
“பின்னை யார் மீது கோபம்’ என்ன வருத்தம்? நான் வந்தபோது ஏன் அவ்வாறு முகம்வாடியிருந்தீர்கள்? முக மலர்ச்சியில்லாமல் தாங்கள் செய்த வெள்ளைப் புன்னகை என் மனத்தைக் கலக்கிவிட்டதே!” என்றாள் மாயாதேவி.
சுத்தோதனன் சிறிது நேரம் அவள் முகத்தைப் பார்த்து மௌனமாய் நின்றான். சற்று முன் அவன்கொண்ட முக மலர்ச்சி, அந்தச் சிறிது நேரத்தில் கொஞ்சம கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து மறைந்துவிட்டது. அப்பால் அவன் மாயாதேவியைத் தன் இடக்கரத்தால் வளைத்தணைத்துக்கொண்டு, வலக்கரத்தை நீட்டித் தோட்டத்தில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி, “காதலி! அதோ பார். வாழைகள் வளர்ந்து முற்றிக் குலை சாய்த்திருக்கின்றன இனி அவை அழிய வேண்டியவைதாம். ஆனால், அவற்றின் வர்க்கம் அவற்றோடு அழியாமல், அவை ஈன்ற கன்றுகள் தலை கிளப்பி வளர்கின்றன. அவ்வாறு, வாழையடி வாழையாய் நம் அரச குலம் விளங்க நமக்கு ஒரு புத்திரன் இல்லையே என்பதை” நினைவுகூர்ந்தேன். அதுதான் என் வாட்டத்துக்குக் காரணம்” என்றான்.
இம் மொழிகளைக் கேட்கவும் மாயாதேவியின் முகமும் சிறிது வாடியது. அவள், ” ஆருயிர் நாயக, தாங்கள் கவற்சியுறுவது நியாயந்தான். எனக்கும் அவ்விஷயத்தில் கவலையுண்டு. ஆனால், கடவுள் அருளால் நமக்கு ஒரு புத்திரன் இனியாவது பிறப்பான் என்ற நம்பிக்கை எனக்குப் பூரண மாயிருக்கிறது” என்றாள்.
சுத்தோதனன் புன்னகை புரிந்து, “மாயா, அந்த மட்டும் நீ அதிர்ஷ்டசாலிதான் எனக்கு அந்த நம்பிக்கை கூட இல்லையே” என்றான்
மாயாதேவி தலையை அசைத்து ” அப்படி நினைக்கவேண்டா. என் வயிற்றில் புத்திரன் பிறக்கா விட்டாலும் என் தங்கை கௌதமி வயிற்றில் ஒரு புத்திரன் பிறப்பான் என்பது நிச்சயம், சிறு வயதில் ஒரு சோதிடன் எங்கள் கைரேகைகளைப் பார்த்துவிட்டு, எனக்குப் புத்திரப்பேறு கிடைப்பது அரிது, கிடைத்தாலும் நான் அதை அனுபவிக்கமாட்டேன் என்றும், கௌதமிக்குப் பிள்ளைப் பாக்கியம் பூரணமாயிருக்கிறதென்றும் கூறினான் ஆதலால், எனக்கில்லாவிட்டாலும் என் தங்கைக்கு நம் குலம் விளங்க ஒரு புத்திரன் பிறப்பான் என்பதில் சந்தேகமில்லை. அவளும் தங்களை அக்கினி சாக்ஷியாய் விவாகஞ் செய்துகொண்டவள்தானே, அவளால் தங்கள் மனக்குறையும் என் மனக்குறையும் அகலக் கூடும் அன்றோ?” என்றாள்.
“கடவுள் அருளால் எனக்கு இனிப் புத்திரப்பேறு கிடைக்குமானால் அப்புத்திரன் உன் வயிற்றிலேயே பிறக்கட்டும்” என்றான் அரசன்.
மாயாதேவி இளநகை செய்து, “ஏன், கௌதமி வயிற்றில் பிறந்தால் ஆகாதோ?” என்றாள்.
“அதைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ? கௌதமி வயதில் மட்டும் உனக்குத் தாழ்நதவளாயிருந்தால் சரிதான்: அழகிலும் தாழ்ந்தவளாயிருக்கிறாள் ; குணத்திலும தாழ்ந்தவளாயிருக்கிறாளே! இல்லையாயின் எனக்கேன் அவளிடத்தில் வெறுப்புண்டாகிறது? உடன்பிறந்த சகோதரியாதலால் அவள் குற்றங்கள் உன் கண்ணுக்குத் தெரியவில்லை. அதனால்தான் நீ அடிக்கடி அவளுக்காகப் பரிந்துபேச வந்துவிடுகிறாய்” என்றான் சுத்தோதனன்.
“அப்படியன்று பிராணேசா கௌதமி குற்றமேயில்லாதவள் என்று நான் சொல்ல வரவில்லை. களங்க சகிதமான பரம்பொருள் ஒன்றைத் தவிர, வேறு யாரே குற்றமில்லாதவர்கள்?, நான்தான் என்ன, குற்றமேயில்லாதவளோ? என்னையும் அறியாமல் எத்தனையோ குற்றங்கள் என்னிடம் குடி கொண்டிருக்கலாம். அவை பிறர்க்குத் தெரியும் : தங்களுக்கும் தெரியும். ஆனால். தாங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு, என் குற்றங்களையெல்லாம் தங்கள் கண்ணுக்குத் தெரியவொட்டாமல் மறைத்து விடுகிறது. என்பால் அன்பு பாராட்டுவது போலவே, என் தங்கையிடமும் தாங்கள் அன்பு காட்டுவீர்களானால், அவள் குற்றம் எதுவும் தங்களுக்குத் தெரியாது” என்றாள் நற்குண நாயகியான மாயா தேவி.
அரசன் கொல்லென்று சிரித்து, “பேஷ்! மாயா, உன் பேருக்கேற்ப மாயாவிசித்திரமாகப் பேசுகிறாயே. உன் தங்கையை நல்லவளாக்க என்னைக் குற்றவாளியாக்கி விட்டாய் போலிருக்கிறது!” என்றான்.
மாயாதேவி இன்னகை செய்து “அப்படியும் சொல்வேனோ, நாதா! கௌதமிபால் அன்பு பாராட்டி அவள் மனக் குறையை அகற்றி அவளைத் திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேனேயொழிய வேறில்லை. அதெல்லாம் இருக்கட்டும். நாழிகை ஆகிறது. சிற்றுண்டிகொள்ள வாருங்கள்” என்று கூறி அரசன் கரத்தைப்பற்றி அவனை அழைத்துக்கொண்டு ஊஞ்சலருகே சென்றாள். அரசன் ஊஞ்சலின் ஒருபுறத்தே வைத்திருந்த பசும்பட்டுறையிட்ட பஞ்சணையிற் சார்ந்து உட்கார்ந்தான், மாயாதேவி அவனெதிரே அமர்ந்து சிற்றுண்டியைத் தன் பூங்கரத்தால் சிறிது சிறிதாக எடுத்து அரசனுக்கு அளிப்பாளாயினள்.

சுத்தோதனருக்கு உணவு கொணரும் பணிமகளிர்

1 கடலரசி என்பது, இந்துமகா சமுத்திரத்தையும், ஆங்கில அரசாட்சியையும் சிலேடையாகக் குறிக்கும் மகதகாடு என்றும் கூறுவதுண்டு. மணிமேகலை உ௬-ஆம் காதை 42-44.
“இந்நகர் கபிலை என்றும், கபிலபுரம் என்றும், கபில வாஸ்து என்றுங் கூறப்படுவதுண்டு.

Leave a comment

Trending