மொழிபெயர் சிறுகதை
மீடியம் வேவ்
மலையாளப் படைப்பு : சிவதாசன் மடத்தில்
தமிழாக்கம் : சு. பாத்திமா

அவன் வழக்கம் போல் துருப்பிடித்த தையல் மெஷின் சத்தத்தைக் கேட்டு எழுந்தான். முணுக்முணுக்கென்று எரிகின்ற ராந்தல் விளக்கின் வெளிச்சத்தில் தையல் மெஷினை மிதிக்கின்ற தோய்ந்து போன அவனது சகோதரியின் கால்கள் மங்கலாகத் தெரிந்தன.
தாழ்வான கூரைக்குள் வெளிச்சம் ஊடுருவ இன்னும் சற்று நேரம் ஆகும். பக்கத்து வீட்டின் தாய்க்கோழியும் அதன் குஞ்சுகளும் வாசலுக்கு வந்துவிட்டன. வாழைமரத்தடியில் உள்ள சேற்றிலிருந்து சோற்றுப்பருக்கையைக் கொத்தித் தின்ன வந்த காகத்தை விரட்டுவதற்காகவே தாய்க்கோழி சீறிப்பாய்ந்து வந்திருந்தது. இத்தனை நாட்கள் காகத்தைப் பார்க்கும்போது தாய்க்கோழியின் சிறகினிலே ஒளிந்து கொண்டிருந்த குஞ்சுகள் இப்போது தாய்க்குத் துணையாகக் காகத்தைப் பயமுறுத்த சத்தங்களை எழுப்புவதைக் கேட்க முடிந்தது.
மெதுவாகத் தன் கையை ஊன்றி நிமிர்ந்து படுத்துக் கொண்டு கூரையைப் பார்த்து பெருமூச்சு விட்டான். மற்றொரு நாளும் தொடங்குகிறது. நீண்ட முப்பது வருட படுக்கை. தனக்கு நினைவில்லை என்றாலும் அம்மா காண்போரிடமெல்லாம் சொல்வார்.
‘நாலஞ்சு வயது வரை எவ்வளவு அழகா ஓடி நடந்த புள்ள தெரியுமா….. புத்திசாலி புள்ள…… நாலு வயசிலேயே உஸ்கூலுக்கு போறேன்னு அடம்பிடிப்பான். என்னத்த செய்ய….. ஒரு காச்சலு வந்தது தான் ஏது….. ஒரு மாசம் ஆகியும், காச்சலு கொறையற பாடில்ல……புள்ள படாதபாடு பட்டுட்டான்….. அன்னைக்கு கெடந்தவன்தான்…..வைத்தியருங்க வீட்டுக்கே வந்து பாத்தாங்க…இருக்கிற கன்னுக்குட்டியையும் வித்து மிஷன் ஆசுபத்திரிக்கெல்லாம் கொண்டு போனோம் . அப்பனிருந்தப்பவே ஒரு பாடு சீரழிஞ்சோம்…. அவரும் போய் சேர்ந்திட்டாரு….இப்ப ஒன்னத்துக்கும் முடியல…. உசுரு தான் மிஞ்சிச்சு….. அதுவே பாக்கியம் தான்…
எப்பாடுபட்டாவது கிடைச்ச உசுரைக் காப்பாத்துவேன்’ என்ற உறுதியோடு தான் பேச்சை நிறுத்துவாங்க.
மரணம் வரை அம்மா தன் வாக்குறுதியைக் காப்பாற்றினாள்.
படுக்கைக்கு அருகில் இருந்த ரேடியோவின் சுவிட்சை இயக்கினான். காலை நிகழ்ச்சிகள் இப்போதுதான் தொடங்கப் போகிறார்கள். அவன் எழுந்ததைக் கண்டதும், அக்கா தையல் வேலையை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள். தேநீருடன் வந்த அவளைப் பார்த்தவுடன் அவனது கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவளது தலையில் நரைக்காத முடிகள் மிகக் குறைவாகவே இருந்தன. மெலிந்து தோய்ந்துபோன கால்களுக்குத் தாங்கும் வலிமையில்லாதனாலோ என்னவோ உடல் முன்னோக்கி வளைந்திருந்தது. அகாலத்திலேயே முதுமையை ஏற்றுக்கொண்டதற்கு அறிகுறியாக இருமலும் தொற்றிக்கொண்டிருந்தது.
அம்மாவின் மரணத்திற்குப் பிறகு தம்பிக்காகவே தன் வாழ்க்கையை ஒதுக்கியவள் அக்கா. இடையில் எப்பொழுதோ நடந்த திருமணத்தைக் கூட ஒரு கனவு போல மறந்துவிட்டாள் . தேநீரை அருகில் வைத்துவிட்டு, எதுவும் சொல்லாமல் அக்கா வெளியேறினாள்.
மீண்டும் ரேடியோ சுவிட்சை இயக்கினான்: நிகழ்ச்சிக்கு முந்தைய இசை ஒலித்துக் கொண்டிருந்தது.செக்கோஸ்லாவாக்கியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு யூத அகதி இந்திய இசையில் ஈர்க்கப்பட்டு தம்புரு, வயலின் ஆகியவற்றை மீட்டி சிவரஞ்சினி ராகத்தில் இசைக்கப்பட்ட இசையே ஒரு காலத்தில் இந்திய கிராமங்கள் முழுவதையும் உணர்த்திய இனிமையான இசை என்று எப்போதோ கேள்விப்பட்டதை நினைவு கூர்ந்தான். தனது வாழ்நாளில் இதுவரை கேட்டவற்றுள் மிக இனிமையான இசை என்றும் எப்போதும் இதுவே……
வந்தே மாதரத்திற்குப் பிறகு, வானொலி மெதுவாகப் பேசத் தொடங்கியது.
‘ஆகாசவாணி… மீடியம் வேவ் அறுநூற்று முப்பது கிலோ ஹெட்ஸ்…’
அக்கா உள்ளே வேறு வேலைகளில் மும்முரமாக இருந்தாள். சாப்பிட ஏதாவது செய்து வைத்த பிறகே சோப்பு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும். அதற்கு முன்பு அவனுக்கு காலைக்கடன்களைச் செய்ய தேவையானவற்றிற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
அக்கா அருகில் வந்து படுக்கைக் கழிகலனைத் தள்ளி வைத்தபோது, அவன் ஒருநாள் வானொலியில் சொன்ன ஒன்றை நினைவு கூர்ந்தான். திரும்பி வந்த தன் அக்காவிடம் சிரித்துக் கொண்டே இதைச் சொன்னான்.
“அக்கா உனக்கொன்னு தெரியுமா? மலையாளிகளெல்லாம் இப்போது பெரிய நாகரிகவாதிகளாகிவிட்டார்களாம்.”
“எப்படி ?”
“அவனது மெலிந்த, அசைவற்ற கால்களைத் தூக்கி, படுக்கைக் கழிகலனை வெளியே இழுத்துக் கொண்டே அக்கா கேட்டாள்.”
“பழங்காலத்திலே வயற்காட்டுலே ஏதோ ஒரு மூலையில் இருந்த கழிப்பறை, இப்போது படுக்கையறைக்கே வந்து விட்டது. அப்படிப் பார்க்கும்போது, படுக்கையிலேயே கழிப்பறையை வைத்த மிகப்பெரிய சீர்திருத்தவாதி நான் தானே…..”
தண்ணீரில் நனைத்த துணியால் அவன் உடலைத் துடைத்துக் கொண்டிருந்தாள் அக்கா.
‘உன் வாய்க்கும் பேச்சுக்கும் ஒரு கொறைச்சலும் இல்லை “
அவள் சோகம் கலந்த ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு உள்ளே சென்றாள்.
வானொலியில் ஒரு கண் மருத்துவரிடம் தொலைபேசியில் நேயர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் குரல் அவனது கவனத்தை ஈர்த்தது.
பிறவியிலேயே பார்வையற்ற இருபது வயதுப் பெண் பேசுகிறாள். அந்தக் குடும்பம் உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் செலவில்லாத சில சிகிச்சைகளை முயன்றிருக்கிறார்கள். எந்தப் பலனும் இல்லை என்று கூறிய பின்னர் மருத்துவரின் இயந்திரத்தனமான பதில்.
அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைச் சொன்னபோது, அவன் ஆச்சரியப்பட்டான். அது மிகவும் அருகில் உள்ள இடம், ‘ வீட்டின் முற்றத்திற்குக் கூடச் செல்ல முடியாத எனக்கு, அருகில் என்று ஒன்றில்லையே…..ம்…’ தன்னைத் திருத்திக் கொண்டான்.
சிறிது நேரம் அவன் தன் கஷ்டங்களை மறந்து ரசித்துக் கொண்டிருந்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும், அவனால் உலகைப் பார்க்க முடியுதே….
இந்த அழகான பூமியைப் பார்த்திராத, பகலையோ இரவையோ அறியாத, பூக்களையோ பட்டாம்பூச்சிகளையோ பார்த்திராத, ஒரு ஏழைப் பெண்ணின் குரல் வானொலி வழி காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்த குரலில் நிரம்பியிருந்த சோகத்தை அவன் மனதில் சுமந்து கொண்டான். தொலைபேசியிலிருந்து வானொலி நிலையத்திற்கும், பின்னர் உயர்ந்த கோபுரங்கள் வழியாக வானத்திற்கும், அலைகளாக அவன் குடிசையில் இருந்த வானொலிக்கும், அங்கிருந்து அவன் காதுகளுக்கும் இதயத்திற்கும் பரவிய சோகம் கலந்த அந்த இனிமையான குரலை ரசித்துக் கொண்டேயிருந்தான்.
சும்மா கனவு காணலாம் ….கதைகளை உருவாக்கலாம் ….. அவனது பலவீனமான உடலிலுள்ள, மனதிற்கு மட்டுமே அவை சாத்தியமாகலாம்: கால்கள் இல்லாத ஒரு மனிதனைத் தோளில் சுமந்து ஆற்றைக் கடந்த ஒரு குருடனின் கதையை அவன் வெறுமனே நினைவு கூர்ந்தான்.
ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் ஆதரவாகவும் நிழலாகவும் கண்ணீரையும் கனவுகளையும் பங்கு வைக்கவும் அவள் அருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டான்.
கனவுகளுக்கு அற்ப ஆயுள் தான் இருந்தது. வானொலி அவனது சிந்தனைகளைக் கலைத்து அலறியது. அது டெல்லியிலிருந்து வரும் செய்திக்கு முந்தைய சத்தம்.
அவன் யதார்த்தத்திற்குத் திரும்பினான், எல்லாம் வெறும் ஒலிகளாக, புன்னகையாக, அன்பாக இருக்கட்டும். சோகமும் வலியும் அனைத்தும் ஒலிகளாக மாறட்டும்.
வானொலி நிலையங்கள் ஒலியை அலைகளாக்கி ஆகாயத்தில் நிரப்பட்டும். என்னுயிர் வானொலி அதை அன்போடு ஏற்றுக்கொண்டு எனக்கு ஒலிகளாகப் பரிசு வழங்கட்டும். வானொலியில் செய்திக்குப் பிறகு, காலை ஒளிபரப்பு திரைப்படப் பாடல்களுடன் தொடர்ந்து கொண்டிருந்தது.
(இக்கதையின் மலையாள மூலத்தைப் படிக்க இந்த வரியின்மீது சொடுக்கவும்)

Leave a comment