அணிந்துரை
தூரன் ஆய்வில் முதல் நூல்
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

9042461472 / 9940021472
அறியப்படத்தக்க அளவுக்கு அறியப்படாமலும், போற்றப்பட வேண்டிய அளவுக்குப் போற்றப்படாமலும் தமிழ் அறிவுலகம் மறந்துபோன அறிஞர் பெரியசாமித் தூரன்.
அவருடைய பணிகளையும் படைப்புகளையும் வாழ்க்கை வரலாற்றையும் இயன்ற அளவுக்குத் தொகுத்துத் தந்திருக்கிறேன். தாய்ப்பசுவின் பின்னால் ஓடும் கன்று போல் அவரது எண்ணங்களையும் பல்துறைப் பங்களிப்புக்களையும் தொடர்ந்து சென்று அறிமுகம் செய்திருக்கிறேனே அன்றி ஆய்வு செய்யவில்லை.
பெரியசாமித் தூரனின் பயனுள்ள பண்பாட்டுப் பங்களிப்பை வகுத்தும் தொகுத்தும் சொல்லும் ஒரு சிந்தனையாளனுக்காகக் காலம் காத்திருந்தது. அவர்தான் பழனி கிருஷ்ணசாமி. தமிழ் மரபின் புரிதலுடன் புது மரபுகளை வரவேற்கும் தூரனின் தனித்துவத்தை நுட்பமான பார்வையில் தேடுதலின் தீவிரத்துடன் முன்வைக்கிறார் நூலாசிரியர்.
நூலின் தலைப்பே தூரன் படைப்புகளுக்குள் எவ்வளவு ஆழமாகப் பயணித்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது. தூரனின் முதல் கட்டுரைத் தொகுப்பான பூவின் சிரிப்பு நூலில் உள்ள ‘சாவில்லை’ என்ற கட்டுரையில் ‘மனிதன் உடம்பல்ல’ என்று பேசுகிறார் தூரன். எளிமையாகச் சொல்லப்பட்ட ஆனால் சிந்திக்கச் சிந்திக்க ஆழத்தில் கொண்டு செல்லும் இந்தக் கருத்தையே நூலின் தலைப்பாக்கியிருக்கிறார் கிருஷ்ணசாமி.
தூரனுக்குள் மூழ்கி எடுத்த முத்து போல் நூலுக்குத் தலைப்பிட்ட திறத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த நூலின் மையம் ஓர் ஆளுமை எந்த அளவுக்குத் தன் பண்பாட்டு வேர்களில் ஆழ்ந்திருக்கிறார் என்று காணுகிற கூர்நோக்கு. இசையின் வழியே பண்பாட்டு மரபைக் காக்கும் தூரனைக் குறித்து முதலில் ஆய்வு செய்கிறார் நூலாசிரியர். கிரேக்கப் பண்பாட்டு மரபு போலவே தமிழ்ப் பண்பாட்டு மரபு பழமை சான்றது, என்றாலும் மெய்யியல், நாடகம், காப்பியம் போன்ற துறைகள் பற்றி முறைப்படுத்தப்பட்ட வரலாறுகள், கருவி, நூல்கள் படைக்கப்பட்டிருக்கவில்லை என்பது ஒரு குறையே, ஆனால் இசைக் குறிப்புகள், இசைக் கலைஞர்களாகிய பாணர், பாடினியர் குறித்த செய்திகள் நிரம்பவே கிடைக்கின்றன. தப்பித் தவறி பஞ்ச மரபு போன்ற இசையிலக்கணம் கூடக் கிடைத்துள்ளது.
இந்தப் பூர்விக இசை மரபின் கூறுகள் எப்படி தூரனைப் பிள்ளைப் பிராயத்திலிருந்து உருவாக்கம் செய்தன என்பதையும், தூரனின் கீர்த்தனைகள் காலத்துக்கேற்றபடி எளிமையை ஆடையாகத் தரித்திருக்கின்றன என்பதையும் இக்கால இசைத்துறை மேதாவிகள் ஒப்புக்கொள்ளும்படி அவை அமைந்திருக்கின்றன என்பதையும் நூலாசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.
அரசியலில் ஆரிய திராவிட மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலச்சூழலில் தூரனின் கீர்த்தனைகள் ஆரிய – திராவிட இணைவுகளை ஏற்றிருந்தன என்று சுட்டிக்காட்டுவது ஒரு முக்கியமான கருத்து எனலாம்.
தூரனின் படைப்புகள் – குறிப்பாகக் கவிதைகள் கிராமிய உழவர் பின்னணியிலிருந்து உருவானவை என்றும் நாட்டார் பாடல்களை ‘காற்றிலே வந்த கவிதை’ என்று தொகுத்திருப்பதன் உளவியலை உணர வேண்டும் என்றும் பழனி கிருஷ்ணசாமி தெரிவிக்கிறார். வாய்மொழிப் பாடல்களின் தனித்தன்மையை முழுதும் உணர்ந்தவராகத் தூரன் அவற்றின் இயல்பு மாறாமல் தொகுத்திருப்பது அவருடைய தனித்தன்மை எனப் பாராட்டுகிறார். இன்று மக்கள் கலையாக மாறியிருக்கிற ‘வள்ளியம்மை ஒயில் கும்மி’யையும், கொங்கு மண்டலத்தின் நாட்டார் காப்பியமாகப் பெருமை பெற்றிருக்கும் குன்றுடையான் கதையையும் உணர்ந்து அனுபவித்து அவற்றின் பெருமையை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து அறிமுகப்படுத்திய தூரனின் கலை நுட்பம் வியந்து பாராட்டப்படுகிறது. பண்பாட்டு வரலாற்றின் பக்கங்களைச் செழுமைப்படுத்தக் கூடிய புரிதல் இது என்று கூறலாம்.
தூரனின் சாதனைச் சிகரம் கலைக்களஞ்சியம். தமிழர் அறிவு மரபைச் செழுமை செய்த ஒரு கட்டமைப்பாகக் கலைக் களஞ்சியத்தை மதிப்பிடுகிறார் நூலாசிரியர். முன்னதாக 1899இல் வெளிவந்த ஆ. சிங்காரவேலு முதலியாரின் ‘அபிதான சிந்தாமணி’ இந்தப் பாதையில் முன் அடி எடுத்துவைத்த போதிலும் அறிவியல் ரீதியாக அது அமையவில்லை. அது மட்டுமல்ல பல வகைகளிலும் குறைபாடும் உடையது என்று எடுத்துக் காட்டுகிறார். தூரனின் கலைக் களஞ்சிய முன்னெடுப்பு எத்தனை புதுமைகள் கொண்டது என்பதை விளக்கிக் காட்டும் பொருட்டு பிரித்தானியா கலைக் களஞ்சியம் உருவான வரலாற்றை விரிவாக விளக்குகின்றார். மறுமலர்ச்சிக்காலம், புத்தொளிக்காலம் என உலக வரலாறு அடையாளம் காண்கிறதே, அதன் பாகமாகத் தமிழ்க் கலைக்களஞ்சியக் குழுவைக் கூறலாம் என்கிறார்.
கலைக்களஞ்சியம் ஓர் இனத்தின் நாகரிக, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு எனச் சுட்டிக்காட்டும் ஆசிரியர், முன்னர் வெறும் சமயமும் அரசியலுமாக இருந்த தமிழர், உயிரியல் முதல் வானவியல் வரை அறியவும் உணரவும் அடையா நெடுங்கதவைத் திறந்து வைத்த முயற்சி என விதந்துரைக்கிறார். தூரனின் அயரா உழைப்பின் வடிவம் என நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறார் கிருஷ்ணசாமி.
அடுத்ததாக, தூரனின் படைப்பிலக்கியம் எப்படி தனித்தன்மை மிக்கது என்பதை – ‘புனைகதையுலகில் தூரன் – இனக்குழுச் சூழலிலிருந்து அகிலத் தன்மைக்கு’ என்ற அத்தியாயத்தில் தெளிவுற விளக்குகின்றார். கிராமியச் சூழலில் இனக்குழுச் சமுதாயப் பின்புலத்தில் எழுந்தவை தூரனின் சிறுகதைகள். இக்கதைகளின் சிறப்பைத் தமிழ் எழுத்துலகம் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது என்பது நூலாசிரியரின் குற்றச்சாட்டு.
‘சிறுகதையின் தடங்கள் -முதல் ஐம்பது ஆண்டுகள்’ என்ற நூலைப் படைத்த தமிழ்ச்செல்வன் தூரனைத் தொடாமல் போனதை ஒரு வரலாற்றுப் பிழை எனக் கருதுகிறார் நூலாசிரியர். அழகியல் சட்டகத்துக்குள் தூரன் கதைகள் அடங்கவில்லை போலும் என ஆதங்கம் கொள்கிறார்.
‘வாழ்க்கை என்னும் சுவைமிக்க விரிந்த ராக ஆலாபனையில் குறிப்பிட்ட ஓர் அற்புத சஞ்சாரம் சிறுகதை’ என்று தம் இசை ததும்பும் உள்ளத்தால் இலக்கணம் வகுக்கும் தூரன் மொத்தம் 66 சிறுகதைகள் எழுதி ஐந்து தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கிராமத்து மக்களின் நம்பிக்கை, தன்மானம், சாதி எதிர்ப்பு. வறுமை, கலை, மனித நேயம் எனப் பல கோணங்களைக் கொண்டவை அவரது சிறுகதைகள். புனைவிலக்கிய வரலாறு எந்த அளவுகோல்களை முன்வைத்து தூரனின் கதைகளை விலக்கி நிறுத்தினாலும் அது நியாயம் செய்வதாகாது என விமர்சிக்கிறார் நூலாசிரியர். ஏனெனில் பண்பாட்டு வரலாற்றுக்கு இச்சிறுகதைகள் ஆவணம் ஆகும் என்கிறார்.
தூரனின் கட்டுரைகள் 15 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஊரக வாழ்வை மையமாகக் கொண்ட கட்டுரைகள் இயற்கை, விழாக்கள், மரணம் எனப் பல பொருள்களில் அமைந்தவை. கட்டுரை நூல்களில் 11 தொகுதிகள் பாரதியைப் பற்றியவை. சுதேசமித்திரன் அலுவலகம் சென்று வெளிவராத பல கட்டுரைகளைத் தேடித் தந்தவர் தூரன். அதனால் பாரதிமயமான உள்ளம் அவருடையது. பாரதி ஆய்வுக்கு முதல் அடி எடுத்து வைத்தவர் தூரன் என்பது ஆசிரியரின் மதிப்பீடு, தூரனின் கட்டுரைகளை இன்னும் விரிவாக ஆராய்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
பெரியசாமித் தூரன் – வாழ்வும் ஆளுமையும்’ என்பது நூலின் இறுதிக் கட்டுரை. தூரனின் வாழ்வியலைச் சுட்டிக் காட்டியபடி அவரது ஆளுமையை நோக்கிப் பயணிக்கிறது இக்கட்டுரை.
இலக்கியம், இசை, கல்வி, இதழியல் என நகர்ந்துகொண்டிருந்த வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் கலைக்களஞ்சிய உருவாக்கப் பருவம். மாணவப் பருவம், ஆசிரியப் பருவம், கலைக் களஞ்சியப் பருவம் என்று தூரனின் வாழ்வைப் பகிர்ந்துரைக்கும் கிருஷ்ணசாமி, அவருடைய மூன்று பருவங்களிலும் ஆளுமை சிறந்திருந்தது என்கிறார். மாணவப் பருவத்தில் ‘பித்தன் இதழை நண்பர்களோடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆசிரியப் பருவத்தில் தலித் மாணவர்களிடம் கொண்டிருந்த பற்றும் பாசமும் வெளியாகின்றன. இப்பருவ காலம் இசை, தேசியம் என விரிகிறது.
ஒரு முக்கியமான கண்டறிதலை நூலாசிரியர் இந்த அத்தியாயத்தில் வெளியிடுகிறார். தூரனிடம் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதது திராவிட இயக்கம் என்ற கருத்து அது. சரியான மதிப்பீடு இது.
பல ஆளுமைகள் அரசியல் போக்கில் தடுமாற்றம் அடைந்துள்ளனர். ம.பொ.சி. அரசியலையும் பண்பாட்டையும் குழப்பிக் கொண்டவர்களில் ஒருவர் அவர். இந்தத் தடுமாற்றம் தூரனிடம் இல்லை. தேசபக்தி, மொழி வளர்ச்சியில் கவனம் கொண்டார். கலைக்களஞ்சியத்தால் தமிழ் மொழியை அறிவுப் பாதையில் செலுத்தினார். தன் படைப்புகளில் எளிமையான கிராமிய வாழ்வு முதல் சிக்கல் நிறைந்த நகர வாழ்க்கை வரை அனுபவங்களை நேர்மையாகப் பதிவு செய்தவர் தூரன். அவருடைய தன்னலமற்ற உழைப்பின் அடையாளம் கலைக் களஞ்சியம்.
இவ்வாறு தூரனின் ஆளுமையின் கூறுகளைப் பலபட விரித்துரைக்கிறார் பழனி. கிருஷ்ணசாமி.
தூரனைக் குறித்து ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட முதல் நூல் இது. தூரனின் பண்பாட்டுப் பங்களிப்பை நூலிழையாக எடுத்துச் சொல்கிற சிறப்பு இந்நூலுக்கு உண்டு. தூரனின் இசை மரபு தமிழ் மரபில் தொடங்கி வளர்ந்துவிட்ட கர்நாடக இசை மரபோடு இரண்டறக் கலந்திருப்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. பண்பாட்டு மரபின் தொடர்ச்சியாகவே. தமிழனின் அறிவுசார் மரபுப் பணியாகத் தூரனின் கலைக்களஞ்சியப் பணி அமைகிறது. ஓர் இனக்குழுக் கதைக் கலைஞனின் நேர்மையான வாழ்வியல் பதிவு புறக்கணிக்கப்பட்டிருப்பது சரியல்ல என்று வாதிடுகிறார் நூலாசிரியர். தூரனின் ஆளுமை வளர்ச்சிக்குப் பல காரணிகள் இருந்தாலும் பாரதியே அவரைச் செதுக்கிய பெரும் சக்தி எனச் சரியாகவே கண்டறிகிறார் நூலாசிரியர்.
பண்பாட்டு வரலாற்றியல் நோக்கில் தூரன் போற்றத்தக்க பேராளுமை என நிறுவுகிற பணியை பழனி கிருஷ்ணசாமியின் நூல் வெற்றியுடன் முன்வைக்கிறது.
பண்பாடே ஒரு சமுதாயத்தின் ஆணிவேர் என்று அடையாளப்படுத்தும் இந்நூல் பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரியது.

படம் உதவி:nalaiyavaralaru.page
நூல் பெயர்: மனிதன் உடம்பல்ல :
பெரியசாமித் தூரனின் பண்பாட்டுப் பங்களிப்பு
நூலாசிரியர் : பழனி. கிருஷ்ணசாமி
நூல் விலை : ரூ 180
பதிப்பகம் : யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை 9042461472 / 9940021472
பின்குறிப்பு:
மனிதன் உடம்பல்ல நூலிற்கு மதிப்புரை எழுத எண்ணியபோது கவிஞர் சிற்பியின் அணிந்துரை சிறந்த மதிப்புரையாய் அமைந்திருந்தமை கண்டு மகிழ்ந்து அணிந்துரையை நம் இதழில் வெளியிட எழுத்தாளர் பழனி.கிருஷ்ணசாமி அவர்களைக் கோரினேன். அவர்கள் தந்த அனுமதியின் பேரில் இங்கு அணிந்துரை இடம்பெறுகிறது.
இவண்
கவிதா மணாளன்
முதன்மையாசிரியர்

Leave a comment