தொடர் :
நவீன ஓவியர்களைக் கவரும் இந்திய ஓவிய மரபுகள்

மரபெண் 1

மதுபானி ஓவியங்கள்:
கவர்ந்திழுக்கும் கோடுகள், வடிவங்கள், வண்ணங்கள்

ஷாராஜ்

இந்திய மரபு ஓவியங்கள் என்றதுமே எனக்கு உடனடியாகவும், முதலாவதாகவும் நினைவுக்கு வருவது மதுபானி ஓவியங்கள்தான். இரண்டாவதாக காளிகட் ஓவியங்கள் (Kalighat paintings). இந்திய மரபு ஓவியங்களில் இவைதாம் தர வரிசைப்படி முதன்மை இடம் வகிக்கக் கூடியவையா என்றால், இல்லை. ஆனால், உடனடி கவன ஈர்ப்பிலும், அவற்றின் தனிச்சிறப்புகளிலும், எளிமையிலும், அவற்றைவிட முக்கியமாக புறக்கோட்டுத் தனித்தன்மைகளிலும் இவை என்னில் முன்னிலை வகிக்கின்றன.
நாட்டு மக்களிடையேயும், பல இந்திய ஓவிய மரபுகள் பிரபலமானவை என்றாலும், மதுபானி ஓவியம் அதன் தனித்துவமான பாணி, துடிப்பான வண்ணங்கள் மற்றும் வளமான கலாச்சார கருப்பொருள்கள் காரணமாக மிகவும் பிரபலமான நாட்டுப்புறக் கலை வடிவமாக உள்ளது. பிற மிகவும் பிரபலமான மரபுகளில் சிற்றோவியங்கள் (குறிப்பாக முகலாய மற்றும் ராஜபுத்திர நீதிமன்றங்களிலிருந்து), தமிழகத்தின் தஞ்சை ஓவியங்கள், ஒடிசாவின் பட்டாசித்ரா ஓவியங்கள் ஆகியவை அடங்கும்.

இந்திய மரபு ஓவியங்கள் என்றதுமே எனக்கு உடனடியாகவும், முதலாவதாகவும் மதுபானி நினைவுக்கு வரக் காரணம், அதன் வலுவான புறக்கோடுகள், குறிப்பிட்ட வகையான மனித முக அமைப்புகள், சில சமயம் குழந்தைத்தனமான உருவ வரைவுகள், ப்ரகாசமானதும் தட்டையானதுமான வண்ணங்கள் ஆகியவைதாம். இந்த அம்சங்கள் யாவுமே உடனடியாக கவனத்தை ஈர்ப்பதாகவும், ஆழ்ந்த மனப்பதிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதனால்தான் இந்த மரபு ஓவியங்கள் இன்று அதிகமான மக்களால் விரும்பப்படுவதாகவும், பிரபலத்தில் முதலாவதாகவும் உள்ளது. வரைவதற்கு எளிதாக இருப்பதாலும், அலங்காரங்கள் கொண்டிருப்பதாலும், ப்ரகாசமான வண்ணங்கள் பயன்படுத்தப்படுவதாலும் பொழுதுபோக்குக்கு வீட்டுப் பெண்கள் வரைவதற்கு ஏற்றதாகி, அவர்களால் அதிகமாக வரையப்படுகிறது என்பதையும் இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் அறிய முடிகிறது.
மதுபானி ஓவியம் நாட்டுப்புற ஓவியக் கலையாகும். பாரம்பரியப்படி அதை வரைபவர்கள் நாட்டுப்புறக் கைவினைஞர்களும், ஓவியத் திறனற்ற வீட்டுப் பெண்களும்தான். எனவே, அதில் நுண்கலைத்தன்மை, செவ்வியல்தன்மை ஆகியவை இராது. நாட்டுப்புற ஓவியங்கள், சிற்பங்கள், உருவாரங்கள் ஆகியவற்றில் காணப்படுகிற குறைபாடுகள் நிறையவே இருக்கும். ஆனால், அவ்வோவியங்களில் நாட்டுப்புறக் கலைகளுக்கே உரியபடி, கச்சாவான படைப்பாற்றலும், உணர்ச்சி வெளிப்பாடும் பொதிந்திருக்கும். என்னைப் பொருத்தவரை இது முக்கியமான அம்சம். (எனது பரோஸியா நாவலில், நாட்டார் சிற்பங்கள், சுதைகள் பற்றிப் பேசும் இடத்தில் இது குறித்து விரிவான விளக்கங்கள் இருக்கும்). மதுபானியில் என்னைக் கவர்கிற அம்சங்களில் இதுவும் ஒன்று.
இன்று காணக்கிடைக்கிற மதுபானி ஓவியங்களில் வரைதிறன் அடிப்படையில் தரவாரியாக மூன்று பிரிவுகளைக் காண முடியும்.
⦁ நடுத்தரமான செய்நேர்த்தியுடன் காணப்படுபவை. இவை பாரம்பரியமாக மதுபானியை வரைகிறவர்களில் ஓரளவு வரைதிறன் கொண்ட கைவினைஞர்கள், நாட்டுப்புற ஓவியர்கள் மூலம் வரையப்படுபவையாக இருக்கலாம்.

⦁ குழந்தைகள் வரைந்தது போன்றும், செய்நேர்த்தி இல்லாமலும் காணப்படுபவை. பண்பட்ட வரைதிறன் அற்ற நாட்டுப்புற மக்கள், வரைதிறன் இல்லாத நகர்ப்புற வீட்டுப் பெண்கள், வரைதிறன் குறைந்த பொழுதுபோக்கு ஓவியர்கள், துவக்க நிலையர்கள் ஆகியோரால் வரையப்படுபவையாக இருக்கலாம்.

⦁ செய்நேர்த்தி, படைப்புத்தன்மை, அழகியல் மேம்படுத்தல்கள் கொண்டவை. மிக சொற்பமாகவே தென்படக்கூடிய இவை வரைதிறன் கொண்ட ஓவியர்களாலும் ஓவிய மாணவர்களாலும் வரையப்படுபவையாக இருக்கலாம்.


மண்ணின் ஆன்மாவையும், பெண்களின் கலையார்வத்தையும், வண்ணங்களின் உயிரோட்டத்தையும் அழகாகப் படம்பிடிக்கும் ஓவியக் கலை வடிவம் மதுபானி. பீகார் மாநிலத்தின் மிதிலா பிராந்தியத்தில் தோன்றி செழித்தோங்கிய இது மிதிலா ஓவியம் எனவும் அழைக்கப்படுகிறது.
சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது இந்தக் கலை. ஆரம்பத்தில் வீடுகளின் சுவர்களிலும், தரைகளிலும் சடங்கு நோக்கங்களுக்காகப் பெண்களால் வரையப்பட்ட ஒரு நாட்டுப்புறக் கலையாகத் தொடங்கியது. இன்று உலக அரங்கில் இந்தியக் கலையின் ஒரு தனித்துவமான அடையாளமாகப் பரிணமித்துள்ளது. அதன் வலுவான கோடுகள், ஈர்க்கும் உருவங்கள், பிரகாசமான வண்ண மயங்கள், மற்றும் தனித்தன்மை ஆகியவை மதுபானி ஓவியங்களை மிக அழகியல் மிக்கதாகவும், ஆழ்ந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆக்குகின்றன.
மதுபானி ஓவியங்களின் மிக முக்கியமான அம்சம், வலுவான வெளிப்புறக் கோடுகள். இவை பொதுவாக கருப்பு நிறத்தில் வரையப்பட்டு, உருவங்களுக்குத் தெளிவான வரையறையை அளிக்கின்றன. பின்னர், இந்தக் கோடுகளுக்குள் பிரகாசமான வண்ணங்கள் நிரப்பப்படும்.
மனித உருவங்கள், தெய்வங்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பூக்கள், வரைகலைகள் ஆகியவை மிக எளிமையாக, ஆனால் ஈர்க்கும் வகையில் சித்தரிக்கப்படுகின்றன. மனித உருவங்கள் நளினமான பெரிய கண்களுடனும், நீண்ட மூக்குடனும், எளிய உடலமைப்புடனும் இருக்கும். பக்கவாட்டுத் தோற்றத்தில் முகம் வரையப்படும்போது, மூக்குக்கும் மேலுதட்டுக்கும் இடையே இடைவெளி இன்றி, மூக்கின் அடிப்பகுதியை ஒட்டியே மேலுதடு வரையப்படுவது மதுபானிக்கே உரிய தனிச்சிறப்பு.
மதுபானியில் உருவங்களின் எதார்த்தம் நோக்கமல்ல. இவை இன்னது எனத் தெரிவித்தால் போதும். எனவே, உருவங்களை வரைவதில் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு, தன்னிச்சையாக அவற்றின் அம்சங்களை மாற்றியும், உருத்திரிபு செய்தும், மிகைப்படுத்தியும் வரைவது வழக்கம். சரிவிகிதம் (Proportion) பற்றிக் கவலைப்படாமல், தாள்களின் அளவுகளுக்கு ஏற்ப மனிதர்கள், விலங்குகள் பறவைகள் ஆகியவற்றின் உயரங்கள் நீட்டப்படுவதும், பருமன் குறைக்கப்படுவதும் பரவலாகக் காணப்படக் கூடியது. சிலர் வரைந்துள்ள துர்கா ஓவியங்களில் சிங்கங்களைப் பார்த்தால் அவை வேற்றுகிரகத்தின் விசித்திரமான ஜீவராசி போலத் தோற்றமளிக்கும். துர்கா சவாரி செய்யக்கூடியது – அதுவும் சில சமயம் அதன் முதுகு மேல் நின்றபடியே – என்பதை வைத்துக்கொண்டு நாம் அதை சிங்கம் எனப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஓவியங்களில் எந்த இடமும் வெறுமையாக விடப்படாது. முக்கிய உருவங்களுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் இடைவெளிகள் அனைத்தும், மலர் வடிவங்கள், பறவைகள், விலங்குகள், வடிவியல் வடிவங்கள், அல்லது நுட்பமான கோடுகளால் நிரப்பப்படும். இது ஓவியத்திற்கு அடர்த்தியான, சிக்கலான தோற்றத்தைக் கொடுக்கிறது.


மதுபானி ஓவியங்களின் தோற்றம் குறித்த சரியான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. வாய்மொழி வரலாறுகளின்படி, இந்தப் பாரம்பரியம் ராமாயணக் காலத்தைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது. மன்னன் ஜனகர், தனது மகள் சீதைக்கும் ராமருக்கும் திருமணம் நடந்தபோது, தனது ராஜ்ஜியத்தில் உள்ள கலைஞர்களை அழைத்து, சுவர்களை ஓவியங்களால் அலங்கரிக்கச் சொன்னார் என்று ஐதீகம். அதுவே மிதிலா ஓவியங்களின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. மதுபானி என்ற பெயருக்கு ‘தேன் காடு’ அல்லது ‘இனிமையான காடு’ என்று பொருள்.

ஆரம்பத்தில் இவ்வோவியங்கள் வீட்டுப் பெண்களால் மட்டுமே வரையப்பட்டது. திருமணங்கள், பண்டிகைகள், சடங்குகள் போன்ற விசேஷ நாட்களில் வீடுகளின் சுவர்களிலும், குடிசைகளின் தரைகளிலும் அவற்றை வரைந்தனர். இந்த ஓவியங்கள், வீடுகளின் புனிதம், அதிர்ஷ்டம், செழிப்பு,, கடவுள்களின் ஆசீர்வாதம் ஆகியவற்கான வழியாகக் கருதப்பட்டன. இது ஒரு பெண் தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனித்துவமான பாணி மற்றும் நுட்பம் உருவானது.
1930-களின் பிற்பகுதியில், பீகாரில் ஏற்பட்ட பெரிய பூகம்பத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரி வில்லியம் ஜி. ஆர்ச்சர் என்பவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தபோது, இந்தக் கிராமப்புற வீடுகளின் சுவர்களில் வரையப்பட்டிருந்த அழகிய ஓவியங்களைக் கண்டறிந்தார். அவர் இவற்றைப் புகைப்படம் எடுத்து, அவற்றின் கலை மகத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.
1960-களின் மத்தியப் பகுதியில், பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி, விவசாயத்தை பாதித்தது. கிராமப்புறப் பெண்களுக்கு ஒரு புதிய வருமான ஆதாரத்தை வழங்கும் முயற்சியாக, இந்தியக் கைவினைக் கழகம் மதுபானி ஓவியங்களைக் காகிதத்தில் வரைய ஊக்குவித்தது. இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் காகிதத்திற்கு மாற்றப்பட்டபோது, அவை எளிதில் சந்தைப்படுத்தப்பட்டு, மதுபானி கலையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றன.


மதுபானி ஓவியங்கள், அவற்றைப் படைக்கும் கலைஞர்களின் சாதியைப் பொறுத்து சில பாணிகளாகப் பிரிக்கப்படுகின்றன, அவை கருப்பொருள்கள் மற்றும் கோட்டு வேலைப்பாடுகளில் சற்று மாறுபடும்:
⦁ காயஸ்தா பாணி (Kayastha Style): இது பெரும்பாலும் மெல்லிய கோடுகள், நுட்பமான விவரங்கள், மற்றும் புராணக் கதைகளில் உள்ள தெய்வ உருவங்களை மையமாகக் கொண்டது.
⦁ பிராமண பாணி (Brahmin Style): இதுவும் மதக் கருப்பொருள்களைக் கொண்டது, ஆனால் காயஸ்தா பாணியை விட சற்று தடித்த கோடுகளையும், துடிப்பான வண்ணங்களையும் கொண்டிருக்கும்.
⦁ ஹர்பின்ஜன் பாணி (Harbhinjan Style): இயற்கையின் மீதான அன்பையும், அன்றாட வாழ்க்கையின் காட்சிகளையும் சித்தரிக்கும்.
⦁ சாமன் பாணி (Chaman Style): பொதுவாக பிரகாசமான வண்ணங்களைப் பயன்படுத்தும்.
⦁ கோபார் பாணி (Gobhar Style): இது வட்ட வடிவ ஓவியங்களைக் கொண்டது, பெரும்பாலும் திருமணச் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது, இது கருவுறுதல் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது.
இந்த வகைகளுக்கு அப்பால், மதுபானி ஓவியங்களில் பொதுவாக ஐந்து தனித்துவமான பாணிகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை நுட்பம், வடிவங்களைப் பொறுத்து மாறுபடும்:
⦁ பரிணாம பாணி (Bharni Style): இது பிரகாசமான வண்ணங்களால் நிரப்பப்பட்ட, அடர்த்தியான கோடுகளுடன் கூடிய வடிவங்களைக் கொண்டது. தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள் ஆகியவை இந்த பாணியில் வரையப்படும்.

⦁ கச்சினி பாணி (Kachni Style): இது கோடுகளை மட்டுமே பயன்படுத்தி, நுட்பமான நிழல்களை (hatching) மற்றும் புள்ளியிடப்பட்ட வடிவங்களை (stippling) உருவாக்குகிறது. இது ஒரே நிறத்தின் வெவ்வேறு நிழல்களைக் கொண்டு வரையப்படும்.

⦁ தாந்த்ரிக் பாணி (Tantrik Style): தாந்திரீக நம்பிக்கைகள் மற்றும் குறியீடுகளை மையமாகக் கொண்டது. இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கடவுளின் (சிவன், காளி) உருவங்களை, வடிவியல் வடிவங்களுடன் சித்தரிக்கும்.

⦁ கோத்பர் பாணி (Godna Style): இது டாட்டூ (tattoo) வடிவமைப்புகளிலிருந்து உருவானது. இது பெரும்பாலும் வடிவியல் வடிவங்கள், கோடுகள், மற்றும் புள்ளிகளைக் கொண்டது.
⦁ கோபார் பாணி (Kohbar Style): இது பொதுவாக திருமண அறைகளின் சுவர்களில் வரையப்படும், வட்ட வடிவ அல்லது சதுர வடிவ ஓவியங்களைக் கொண்டது. இது கருவுறுதல், காதல், மற்றும் வளமையைக் குறிக்கும்.

மதுபானி ஓவியங்களின் கருப்பொருள்கள், மிதிலா மக்களின் ஆழ்ந்த ஆன்மிக நம்பிக்கைகள், இயற்கையுடனான அவர்களின் உறவு, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து பெறப்படுகின்றன.
⦁ இந்து தெய்வங்கள் மற்றும் புராணக் கதைகள்: கிருஷ்ணர் (ராதாவுடன்), ராமர் (சீதையுடன்), சிவன் (பார்வதியுடன்), கணேஷ், லட்சுமி, சரஸ்வதி, காளி போன்ற தெய்வ உருவங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளில் உள்ள நிகழ்வுகள், தெய்வங்களின் லீலைகள் ஆகியவை விரிவாகச் சித்தரிக்கப்படுகின்றன.

⦁ இயற்கை உருவங்கள்: சூரியன், சந்திரன், மீன், தாவரங்கள் (குறிப்பாக புனிதமான துளசி, அரசமரம், மூங்கில்), தாமரை, பறவைகள், விலங்குகள் (யானை, சிங்கம், பாம்பு) ஆகியவை முக்கியக் கருப்பொருள்களாகும். இவை வெறும் அலங்காரங்களாக இல்லாமல், குறியீட்டு அர்த்தங்களையும் கொண்டுள்ளன. உதாரணமாக, மீன்கள் கருவுறுதல் மற்றும் செழிப்பைக் குறிக்கும்; பறவைகள் சுதந்திரம் மற்றும் நம்பிக்கையைக் குறிக்கும்; சூரியன், சந்திரன் வாழ்வின் சக்தியைக் குறிக்கும்.

⦁ அன்றாட வாழ்க்கை மற்றும் சடங்குகள்: திருமண சடங்குகள், அறுவடை திருவிழாக்கள், குழந்தைப் பிறப்பு, கிராமப்புறக் காட்சிகள், பெண்கள் நீர் சுமப்பது, நடனமாடுவது போன்ற அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளும் சித்தரிக்கப்படுகின்றன.

⦁ வடிவியல் வடிவங்கள்: ஓவியங்களில் கோடுகள், புள்ளிகள், முக்கோணங்கள், வட்டங்கள், சதுரங்கள் போன்ற வடிவியல் வடிவங்கள், காட்சிகளை நிரப்புவதற்கும், ஒரு குறிப்பிட்ட அழகியலை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஓவியங்களில் உள்ள வெற்று இடங்கள்கூட, நுட்பமான கோடுகள் மற்றும் வடிவங்களால் நிரப்பப்படுகின்றன.

⦁ குறியீட்டுப் பயன்பாடு: ஓவியங்களில் உள்ள ஒவ்வொரு உருவமும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைக் கொண்டிருக்கும். உதாரணமாக, இரண்டு மீன்கள் கொண்ட ஒரு ஓவியம், திருமணம் அல்லது இனப்பெருக்கத்தைக் குறிக்கலாம். தாமரை, மூங்கில் ஆகியவை வளமையைக் குறிக்கும்.

மதுபானி ஓவியங்கள், வெறும் கலைப் படைப்புகள் மட்டுமல்ல; அவை மிதிலா பிராந்தியத்தின் சமூக, கலாச்சார, மற்றும் ஆன்மிக வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.
பெரும்பாலும் பெண்களால் வரையப்பட்ட இது அவர்களுக்குக் கலை வெளிப்பாட்டிற்கான வாய்ப்பையும், பொருளாதாரச் சுதந்திரத்தையும் வழங்கியது. பல பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு இந்தப் பழமையான கலையின் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.
பல மதுபானி கலைஞர்கள், தங்கள் கலைத் திறனுக்காக தேசிய, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளனர். அவர்கள் மதுபானியை ஒரு சடங்குக் கலையிலிருந்து உலகளாவிய கலை வடிவமாக மாற்றியதில் முக்கியப் பங்காற்றினர்.


மதுபானி ஓவியங்கள் அதன் அசல் தன்மைகளோடு இருந்தால் அவை எனக்குப் பிடிக்கும். அவற்றில் செய்நேர்த்தி இல்லாவிட்டாலும், அமெச்சூர்த்தனமாகவோ, குழந்தைத்தனமாகவோ இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்த மாட்டேன். காரணம், அவை நாட்டுப்புறக் கலை மற்றும் கைவினைகளுக்கே உரிய பண்பு. கலை ரீதியான அந்தக் குறைபாடுகளை மீறி, வண்ணமயங்கள் மூலமாக அவற்றில் வெளிப்படுகிற கொண்டாட்ட உணர்வும், துவக்கத்தில் விவரித்துள்ள சிறப்புத்தன்மைகளும், உணர்ச்சி வெளிப்பாடுகளும், அந்த ஓவியங்களை மட்டுமன்றி அதன் ஓவிய மரபையும் அர்த்தமுள்ளதாக ஆக்குக்கின்றன.
பெரும்பாலான மரபு மற்றும் நாட்டுப்புற ஓவியங்களுக்கே உரியபடி, மதுபானியிலும் உள்ள தேவையற்ற அலங்காரங்களும், அடைசலான பின்புல நிரப்பல்களும், அந்த ஓவியங்களின் வீரியத்தைக் குறைக்கின்றன. அவற்றை நீக்கினால் முதன்மை உருவங்கள் வீரியம் பெறும் என்பதை உணர்ந்ததோடு, செய்தும் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை அந்த மரபின் இயல்புகள் என்பதால் அவற்றை அம்மரபு ஓவியர்கள், கைவினைஞர்கள் தொடர்வது இயல்புதான்.
மதுபானியிலிருந்து இன்றைய நவீன ஓவியர்கள் எடுத்துக்கொள்ளத் தக்கவை எனப் பல அம்சங்கள் உள்ளன. அவற்றின் சிறப்புத்தன்மைகள் என இங்கே சொல்லப்பட்டவை யாவற்றிலிருந்தும் தாம் விரும்புவதை எடுத்துக்கொண்டு, அவற்றைத் தனக்குரியதாக மடைமாற்றிப் பயன்படுத்திக்கொள்ள முடியும். முக்கியமாக, அவற்றின் உணர்ச்சிகரமான கோட்டோவிய வரைதிறன், கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தும் துடிப்பான வர்ணப்பயன்பாடுகள், கச்சாவான மூலப் படைப்பாற்றல் ஆகியவை கைப்பற்றத்தக்கவை.

மகிழ்ச்சிக்குரிய இத்தனை விஷயங்கள் இருப்பினும், எனக்கு மதுபானி குறித்து ஒரு ஆழ்ந்த கவலை உண்டு. மதுபானி மெல்ல மெல்ல அழிவை / சுயமிழப்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறதோ எனும் ஐயப்பாடு.
பொதுவாக எந்த மரபுக் கலைகளின் சிறப்பும், பெருமையும், அது அதன் அசல் தன்மையோடு நீடிப்பதில்தான் உள்ளது. காலத்துக்கேற்ற வளர்ச்சியும், மாற்றங்களும், மேம்படுத்தல்களும் இருக்கலாம். ஆனால், அவை அந்தந்த மரபின் அடிப்படைகளையோ, அசல்தன்மைகளையோ சிதைத்துவிடக் கூடாது.
மதுபானி ஓவியங்களை இன்று மிதிலா பிரதேசத்து வீட்டுப் பெண்களும், நாட்டுப்புறக் கைவினைஞர்களும் மட்டுமல்ல; நாடு முழுதும் உள்ள ஏஎராளமான ஓவியர்கள், பிற நாட்டு ஓவியர்களும் வரைகிறார்கள். இந்து – பௌத்த மதங்களின் தாந்த்ரீக வழமையில் உள்ள மண்டலா சடங்கு ஓவியங்களின் அடிப்படையில் உருவான மண்டலா அலங்கார ஓவியங்கள் இன்று உலகப் பெரும் பிரசித்தி பெற்றுள்ளன. நுண்கலை ஓவியர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை; மதிக்கவும் மாட்டார்கள். அது அப்பட்டமான கைவினை, வெறும் அலங்காரம் என்பதால் அதில் மதிப்பதற்கு எதுவும் இல்லை. சடங்குக் கலைகள் சந்தைப்பொருள்களாகும்போது இப்படித்தான் வெற்று அலங்காரமாக ஆகும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், அதில் மரபின் அசல் அடையாளங்கள் இழக்கப்படக் கூடாது.
மதுபானி ஓவியங்கள் இன்று இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் அரிதிற்பெரும்பான்மையானவை பெண்களால் வரையப்பட்டவை. இயல்பாகவே அலங்கார விரும்பிகளான அவர்கள்தான் அத்தகைய கைவினைகளிலும், கலைகளிலும் அதிகமாகக் கவரப்படுவார்கள். முக்கியமாக, சர்வதேச அளவில் உள்ள பொழுதுபோக்கு ஓவியர்கள், இல்லஸ்ட்ரேட்டர்கள், வரைகலைஞர்கள் போன்றவர்களுக்கு மண்டலாக்களில் அதீத ஆர்வம் உள்ளதைக் காண முடிகிறது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், இப்போது இந்திய ஓவிய மரபுகளில் மண்டலாக்களுக்கு அடுத்தபடியாகப் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது மதுபானிதான்.
அவ்வாறு வரைவதில் சிலர் மதுபானி பற்றித் தேவையான அளவு தெரிந்துகொண்டு, அதன் அசல் தன்மை கெடாமல் வரைகின்றனர். கைத்திறன் மிக்க சில ஓவியர்கள் செய்நேர்த்தி மிக்க மதுபானி ஓவியங்களை வரைகின்றனர். நுண்கலை ஓவிய இலக்கணங்களை அறிந்த, நுண்கலை ஓவியர்களாகவோ மாணவர்களாகவோ இருக்கக்கூடிய சிலர், நான் முன்பு குறிப்பிட்டபடி வெற்று அலங்காரங்களால் பின்புலத்தை அடைக்காமல், அதே சமயம் பின்புலத்தை வெறுமையாகவும் விடாமல், முதன்மை உருவங்களில் மட்டும் கவனம் செல்கிறபடி பின்புலத்தை நேர்த்தியாக அலங்கரிக்கின்றனர். இவை பாராட்டத்தக்கவை.
மிக அரிதாக, நுண்கலைக்குரிய வலுவான கருத்தாக்க அடிப்படையிலும், அதிக செய்நேர்த்தியுடனும், இரு நிறப் பயன்பாடு மட்டுமாகவும் வரையப்பட்ட ஓரிரு மதுபானி ஓவியங்களையும் பார்க்க முடிந்தது. இது ஆழமான முன்னெடுப்பும் கூட.
ஆனால், ஏராளமான ஓவியங்கள் மதுபானி என்ற பெயரில் அதன் அசல்தன்மைக்கு மாறாக வரையப்பட்டுள்ளன. பலரும் மதுபானி சாயல்களோடு கலம்காரி, காளிகட், வங்காள ஓவிய மரபு, சந்தாலி போன்ற பிறவரை இந்திய ஓவிய மரபுகளில் ஒன்றைக் கலந்து வரைந்துள்ளனர். அது இரண்டும்கெட்டான்தனமாக இருக்கிறது. இன்னும் சில ஓவியர்கள் சாதாரண முறையில் எதார்த்த வகைப் பெண் ஓவியங்களைக் கோட்டோவியமாக வரைந்துவிட்டு, பின்புலத்தில் மதுபானி அலங்காரங்கள் சேர்த்து, அதை மதுபானி ஓவியம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். இத்தகைய தவறான போக்குகள் மதுபானி மரபின் சீர்கேட்டுக்கும், பிற்காலத்தில் அதன் நலிவுக்கும் அழிவுக்கும் காரணமாக ஆனாலும் ஆகலாம் என்பதே எனது கவலை.


Leave a comment

Trending