தேவதாசிகள் முறை ஒழிப்பும் அதன் எச்சங்களும் :
புனிதப் பாவங்களின் இந்தியா நூலை முன்வைத்து

முனைவர் கி . அசோகன்

உதவிப் பேராசிரியர்
தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை
புதுக்கல்லூரி, சென்னை-14
9962909536
asokan103@gmail.com

தேவரடியார் கோவில்களின் பல்வேறு பணிகளைப் பெண்களை வைத்துச் செய்ய கொண்டுவரப்பட்ட முறையாகும். அதனால் பெண்கள் கோவில் சொத்தாகினர். கோவில் பணி தவிர்த்த பிற நேரங்களில் கோவிலோடு தொடர்புடையவர்களும் அதிகாரமிக்கவர்களும் அப்பெண்களைத் தங்கள் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தினர். இம்முறை விடுதலை இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் தற்காலத்தில் கர்நாடக மாநிலத்தில் தேவதாசி முறை தொடர்வதையும் தேவதாசி முறையின் எச்சங்கள் ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் காணப்படுவதையும் அருண் எழுத்தச்சன் கள ஆய்வு செய்து எழுதிய பயண நூலான புனிதப் பாவங்களின் இந்தியா வெளிப்படுத்துகிறது.


தேவதாசி என்ற சொல்லின் பொருள் என்ன? தேவதாசிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எதன் பொருட்டு தேவதாசிகளானார்கள்? அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிகள் யாவை? அவர்கள் சமூகத்தின் எந்தப் படிநிலையில் இருந்தார்கள்? எந்த வயதில் தேவதாசியாக்கப்பட்டார்கள்? தேவதாசியாக்குவதற்குப் பின்பற்றப்பட்ட சடங்குமுறை யாது? அவர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் என்னென்ன? அவர்களுக்கு வாரிசுரிமை வழங்கப்பட்டதா? அப்படியிருப்பின் வாரிசுகளின் நிலை என்ன? தேவதாசி நடைமுறையில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதா? தற்காலத்திலும் தொடர்வதற்கான காரணங்கள் இப்படிப் பல்வேறு வினாக்கள் தோன்றுகின்றன இவ்வினாக்களுக்கு எல்லாம் புனிதப் பாவங்களின் இந்தியா நூலின் வழி விடைகளைக்
காண்பதன்மூலம் தேவதாசிமுறை ஒழிப்பையும் தேவதாசிமுறையின் எச்சங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.

தேவதாசி என்ற சொல்லின் பொருள்
தேவன் என்ற சொல் இறைவன் என்றும் தாசி என்ற சொல் அடிமை என்றும் பொருள்படுவன. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் தேவதாசி என்னும் சொல்லுக்கு “இறைவனின் அடிமை” என்று பொருள் கொள்ளலாம்.
மு. சண்முகம் பிள்ளை தொகுத்து, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட தமிழ்-தமிழ்-அகரமுதலியில் (1985:617) தேவதாசி என்பதற்கு ‘கோயிற் பணிவிடை புரியும் கணிகை; தேவலோகத்து நாடக மகளிர்’ எனப் பொருள் தரப்பட்டுள்ளது.
“சமஸ்கிருதத்தில் தேவதாசி அல்லது தமிழில் தேவரடியாள் என்ற வார்த்தையின் பொருள் இறைவனின் ஊழியர் என்பதாகும்” (கே.சதாசிவன், 2013:24)
ஒட்டு மொத்தத்தில் தேவதாசி என்றால் “கோவிலோடு தொடர்புடைய பணிகளைச் செய்பவர்கள்” எனப் பொருள் கொள்ளலாம்.

தேவதாசிகள் என்பவர்கள் யார்?
தேவதாசி என்பவர்கள் யார்? அவர்கள் என்ன பணி செய்தார்கள் என்பதை தமிழ் விக்கி பீடியா
‘’தேவதாசி என்பவர்கள் பெரும் கோவில்களில் திருப்பணிக்காவும் சேவைக்காவும் சிறுவயதில் நேர்ந்துவிடப்பட்ட பெண்கள் ஆவர். இவர்கள் இறைவனுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள் என்று, கடவுளுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டனர். இவர்கள் கடவுளைத் திருமணம் செய்தவர்களாதலால் நித்திய சுமங்கலியாகக் கருதப்பட்டனர். இவர்கள் கோவில் பணியாளர்களாக இருந்தனர். இந்தப் பெண்கள் ஆடல், பாடல் கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்று இருந்தனர். பெரும்பாலான தேவதாசிகள் சதிர்க்கச்சேரி என்னும் நடனமாடும் நடனக் கலைஞர்களாகவே இருந்தனர். இசை, நடனம் போன்றவற்றில் திறமையற்றவர்கள், ஆர்வம் இல்லாதவர்கள் கோவிலைத் தூய்மை செய்தல், நீர் இறைத்தல், பூக்கட்டுதல், மடப்பள்ளிக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் கோவில்களில் இருந்த இந்தப் பெண்கள் தேவதாசி, மாதங்கி, நாயகி, மாத்தம்மா, பசவி, சூலிகே, ஜோகினி, ஆடல் கணிகை, ருத்ர கணிகை, தளிச்சேரி பெண்டிர் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டனர்.”
என்று விளக்கம் தருகிறது. இதன்வழி தேவதாசி என்பவர்கள் கோவில்களின் அன்றாடப் பணிவிடைகள் செய்வதற்கும் பிற பணிகள் செய்வதற்கும் சமூகத்தில் அதிகாரமிக்கவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகப்பிரிவு என்னும் முடிவுக்கு வரலாம்.
‘’பொட்டுக்கட்டுதல் என்பது சமயம் சார்ந்த கோவில் சடங்கு இச்சடங்கின் வாயிலாக ஒரு சிறுமி அல்லது இளம்பெண் அக்கோவிலின் தேவரடியவராக மாறுகிறார். பதியிலார், நித்திய சுமங்கலி, தேவடிமை எனப் பல திருநாமங்கள் பொட்டுக்கட்டிய பெண்ணுக்குச் சூட்டப்படுகின்றன. மேட்டிமையோர் தம் மேலாண்மையை நிலைநாட்டவும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பின்றித் தம் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளவும் செய்யும் வழிமுறைகளுள் ஒன்றுதான் சமயச்சடங்கு. பாலியல், சாதி, பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொதுமகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக்கட்டுதல். சமய முத்திரையின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது. தேவடிமையின் வாழ்வியல் தேவைகளான உணவு, இருப்பிடம் ஆகியன கோவிலால் உறுதி செய்யப்பட்டுவிட மேட்டிமையோரின் குறிப்பாக புரோகித நிலவுடைமையாளர்களின் பாலியல் தேவைகளை நிறைவடையச் செய்வது அவளது பணியாகிவிடுகிறது”
என்று ஆ. சிவசுப்பிரமணியன் தமிழகத்தில் அடிமைமுறை (2007: 67) என்னும் நூலில் கூறுகிறார்.

தேவதாசி முறை ஒழிப்பு
நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது பெரியாரின் ஆலோசனையின்பேரில் அப்போதைய சட்ட மன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்தார். அவரது சட்டமன்ற உரையில் தேவதாசி முறை ஒழிப்புக் குறித்துப் பேசியபோது
‘’தேவதாசிகள் புனிதமானவர்கள் அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள் அவர்கள் அடுத்த பிறப்பில் சொர்க்கத்தில் பிறப்பார்கள்”
என்று சத்தியமூர்த்தி பேசினார். அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி ரெட்டி
“தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வதாக இருந்தால் இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் தங்களது வீட்டுப் பெண்களைத் தேவதாசிகள் ஆக்கி அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறக்க வழிசெய்யலாமே”
என்று பதிலுரை கூறியதாக ஒரு கருத்து நிலவுகிறது.
தேவதாசிமுறை 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோவில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும் பின்னாட்களில் இவர்கள் கோவில்களை நிர்வகித்த அரசர், செல்வந்தர், நிலக்கிழார் உள்ளிட்ட மேல்வர்க்கத்தினர் முன்பு நடனமாட வைக்கப்பட்டனர். அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்குத் தீர்வளிக்கும் அடிமைகளாகப் பயன்படுத்தப்படடனர். பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதன் காரணத்தால் இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவியது. தொடர் போராட்டங்களின் காரணமாகச் சென்னை மாகாண தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் 09-10-1947 அன்று நீதிக்கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
1982 இல் கர்நாடக மாநிலத்தில் தேவதாசி தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ‘’உண்மையில் இதைச் சட்டம் போட்டுத் தடுத்த விஷயமே சமீப காலம் வரை பலருக்குத் தெரியவில்லை” என்று அருண் எழுத்தச்சன் தன் நூலில் (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022:66) பதிவு செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சமீப காலம்வரை இம்முறை தொடர்வதற்குப் போதிய கல்வியறிவின்மையும் ஒரு காரணமாகும்.

தேவதாசியாக்கும்போது பெண்களின் வயது
நாடு முழுக்க தேவதாசிமுறை ஒழிக்கப்பட்டுவிட்டது என அரசு கூறினாலும் பழமைவாத சிந்தைனைகளும் நிலவுடைமை ஆதிக்கமும் ஊறிக்கிடக்கும் கர்நாடக மாநிலத்தின் ’’பெல்லாரி, பீதர், குல்பர்க், ரெய்ச்சூர், கொப்பல், ஹூப்லி, பெலகாவ், தாவன்கரே, சித்ரதுர்கா, ஷிமோகா, ஹாவேரி’’(2022;63) ஆகிய மாவட்டங்களில் இன்னும் தேவதாசிமுறை தொடர்கிறது என்பதை அருண் எழுத்தச்சனிடம் முன்னர் தேவதாசியாக்கப்பட்டுத் தற்போது அவ்வழக்கத்திற்கு எதிராகப் பாடுபட்டுவரும் தேவதாசி முன்னணியைச் சேர்ந்த ரேணுகா என்பவர் பின்வருமாறு கூறுகிறார்.
’’வயதுக்கு வருவதற்கும் முன்பே தேவதாசி ஆக நேர்ந்த பெண்பிள்ளைகளும் அன்று நிறையபேர் இருந்தார்கள் பெரிய மனிதர்களின் ஆசைதானே முக்கியம் பிள்ளைகளின் குழந்தைமைகூட அதற்குத் தடையாக இல்லை. இதனால், கோவிலோடு சேர்ந்திருக்கும் வீடுகளில் எத்தனையோ பெண்பிள்ளைகளின் ஓலம் வெளியே வராமல் ஒடுங்கிக்கிடந்தது’’. (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022:54).
இப்படிச் சிறிய வயதில் தேவதாசியாக்கப்பட்டவர்களின் மேலுள்ள மோகம் தீர்ந்த பிறகு பெரிய மனிதரின் அரவணைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள் என்ன ஆனார்கள் என்பதைத் தொடந்து ரேணுகா உரைக்கிறார்.
“அவள் வெளியே சென்று கோவில் வளாகத்தில் பிச்சை எடுத்தாக வேண்டும் அந்த நேரத்தில் வேறு யாராவது பெரிய மனிதர் அவளிடம் ஈர்க்கப்பட்டால் பிறகு அவர்தான் அடுத்த கடவுள். சில சமயங்களில் புதிய பெரிய மனிதர் தன் பெருமையைக் காட்டுவதற்காகப் பழைய பெரிய மனிதரைவிட அதிக சௌகர்யங்களை அவளுக்கு வழங்கக்கூடும். எப்படியானாலும் அங்கும் கதையின் முடிவு முன்பு போலத்தான். அவருக்கு வேறொரு தேவதாசி கிடைத்தவுடன் அவள் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறாள் அதன் பிறகு மீண்டும் யாசகத்தின் காலம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு தேவதாசிகள் சாதாரண பாலியல் தொழிலாளிகளின் நிலைக்கு வந்து விடுகிறாள். யார் அழைத்தாலும் அவர்களுடன் போகலாம் எனும் மனோபாவம் அவர்களுக்கு இருக்கும். உண்மையில் கோவில்கள் மையப்படுத்தியதான ஒருவித விபச்சாரம்தான் இங்குள்ள தேவதாசிமுறை. (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022:55)
கோயில்களைக் காரணம் காட்டி தேவதாசிமுறையைத் தொடர்ந்து வழக்கத்தில் வைத்திருப்பதன் மூலம் நிலவுடைமையாளர்களும் அதிகாரமிக்கவர்களும் தங்களது கட்டற்ற பாலியல் உறவுகளைப் பேணிக்கொண்டனர்.
தேவதாசிகளுக்கு வழங்கப்பட்ட பணிகள்
கோவிலின் அன்றாடப் பணிகளோடு நடனம் நன்கு தெரிந்தவர்கள் நாட்டியம் ஆடினார்கள். மற்றவர்கள் சுத்தம் செய்தல் மடப்பள்ளியில் உதவுதல் முதலான பணிகளை மேற்கொண்டனர். வெளிப்படையாகப் பார்க்கும்போது கடவுளுக்குச் செய்யும் புனிதமான பணிகளாக இவை தோன்றும். ஆனால் இப்பணிகள் திரைக்குப்பின்னால் நடப்பனவற்றை மறைப்பதற்காகும். இதை தமிழகத்தில் அடிமைமுறை என்ற நூலில்
’’கோவில் வழிபாடு, திருவிழா போன்ற நிகழ்வுகளில் நடனமாடுதல், பாடுதல், கோலமிடுதல், பூக்கட்டுதல் இன்னபிற செயல்கள் அவர்களது அவல வாழ்வை மறைக்கும் புனிதத் திரைகளாக மட்டுமே அமைந்தன’’
என்று ஆ. சிவசுப்பிரமணியன் (2007:68) கூறுகிறார்.
எதன் பொருட்டு தேவதாசியானார்கள்
முதலில் கோவில் பணிகளுக்காக தேவதாசியாக்கப்பட்ட பெண்கள் பிற்காலத்தில் ஊரில் உள்ள அதிகாரமிக்க நிலவுடைமையாளர்களின் பாலியல் தேவைகளுக்காக 2000க்குப்பிறகு தேவதாசியாக்கப்பட்டதை
‘’அழகான பெண்ணைத் தாசியாக்கவில்லை என்றால் எல்லம்மா கோபித்துக்கொள்ள மாட்டாளா? என்று கேட்டுத்தான் பெரிய மனிதர்களும் அவர்களின் ஆட்களும் வீட்டுக்கு வருவார்கள்’’
என்று அருண் எழுத்தச்சன் (2022:56) தன் நூலில் பதிவுசெய்கிறார்.
தேவதாசிகளின் பொருளாதாரப் பின்புலம்
கர்நாடகாவில் நடனக் கூடங்கள் தடை செய்யப்படுகிறது என்ற செய்தி அறிந்தவுடன் பத்திரிகையாளர் அருண் எழுத்தச்சன் மறைமுகமாக நடக்கும் நடனக் கூடங்கள் பற்றியும் அங்கு வேலை இழந்த நடன மங்கையரின் வாழ்வாதாரம் என்ன? என்பது பற்றியும் செய்தி சேகரிக்கச் சென்றவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பல்வேறு விசாரணைகள் தொலைதூர பயணத்திற்குப்பின் சுமா என்ற நடன மங்கையைச் சந்திக்கிறார். சுமா தன் வரலாற்றைக் கூறுகிறார்.
‘’வளர்ப்பதற்கும் படிக்க வைப்பதற்கும் என் அப்பாவுக்கு முடியவில்லை அதனால் தேவதாசியாக்கிவிட்டார். எங்கள் ஊரில் எல்லா வீட்டுக்காரர்களும் அப்படித்தான் செய்து வந்தார்கள். படிக்க வைக்கவும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பவும் முடியவில்லை என்றால் பெண்பிள்ளைகள் மென்சஸ் ஆனவுடன் அடுத்த மகப்பௌர்ணமியில் கோவிலுக்கு அழைத்துச்சென்று தேவதாசியாக்குவார்கள். பிறகு அவள் யாருடைய வைப்பாட்டியாகவோ காலம் தள்ளுவாள். என்னைப் போன்று சிலர் பெங்களூருக்கும் பம்பாய்க்கும் சென்று தப்பிப்பார்கள் அப்படி அல்லாதவர்கள் அங்கே கிடந்து துன்புற்றுச் சாவார்கள்.”
என்கிறார். மகப் பௌர்ணமி என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய முழுநிலவு நாள் ஆகும்.
“தேவதாசிகளை அப்படி வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள சம்மதிப்பார்களா?” என்று அவரிடம் அருண் எழுத்தச்சன் வினவுகிறார். அதற்கு சுமா ’’வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளத்தானே பெண்களைத் தேவதாசியாக்குகிறார்கள் சலிப்பு ஏற்படும்போது அவர்களை அனுப்பிவிடுவார்கள்.” என்று தன் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார்.
“பிறகு எதற்கு வீட்டுக்காரர்கள் இதை ஆதரிக்கிறார்கள்” என்று கேட்கிறபோது “அவர்களால் காப்பற்ற முடியாததால்தானே எங்களைத் தேவதாசியாக்குகிறார்கள் ஆதரிப்பதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி ஒன்றுமில்லை நீங்கள் அந்த ஊருக்குச் சென்றால்தான் அங்குள்ள நிலைமை புரியும் அங்கே எல்லா வீட்டிலும் பட்டினிதான் இதற்கிடையே ஒரு பெண்ணும் வீட்டில் இருந்தால் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்” (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022;21)
“மேலும் கோவிலில் பிச்சை எடுப்பதற்கு அதிகாரம் கிடைப்பதையே பெரிய அங்கீகாரமாகத்தான் பெண்பிள்ளைகள் பார்த்தார்கள். இவர்களில் அழகானவர்களைச் சீக்கிரமே மேல்சாதிக்காரர் யாராவது அணுகுவார்? பணம்தான் அவர்களின் ஆயுதம் ஏறக்குறைய மூன்று வேளை உணவுக்கான தொகை கிடைத்தாலே பெண்பிள்ளைகளுக்குப் பணம் கொடுப்பவர்கள் கடவுள்களைப்போலத் தோன்றுவார்கள் ஏனென்றால் அவர்களெல்லாம் இரண்டு வேளை சாப்பிடவே பெரும்பாடுபடுகின்றவர்களாக இருப்பார்கள் அதன் பிறகு இந்தக் கடவுள்கள் சொல்வது எதற்கும் கீழ்ப்படிய அவர்கள் தயாராக இருப்பார்கள்.” (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022:54)
ஆக எளியோரின் உயிர் வாழ்தலின் இன்றியமையாமையை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
தேவதாசிகளின் ஜாதிய பின்புலம்
தேவதாசியாகும் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.

“கர்நாடக மாநிலத்தில் மாதிகா, வால்மிகி சமூகத்தினரும் பெல்காமில் மாதர் காம்லே போன்ற சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைத் தேவதாசியாக்கியிருக்கிறார்கள்” (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022:219).
மேலும் பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கின்ற ஏழை கூலித் தொழிலாளியின் பெண்பிள்ளைகளே மேட்டிமையோரின் இலக்காக இருந்துள்ளனர் என்பதைப் பின்வரும் கூற்று உறுதிப்படுத்துகிறது.
‘’கூலி வேலைக்குச் செல்லும் அப்பா, அம்மா கொண்டுவரும் அற்பத் தொகைகொண்டு எப்படியாவது இரண்டு வேளை கேப்பைக் கஞ்சி குடிக்கலாம் அவ்வளவுதான் அன்றைய மிகப்பெரிய கனவு என்ன தெரியுமா காலையில் இரண்டு தோசை சாப்பிட வேண்டும் என்பதுதான்.” (புனிதப் பாவங்களின் இந்தியா, (2022:49)
2014இல் தன் தேடலைத் தொடங்கியபோது இக்கூற்றுக்கு உரியவரான ரேணுகாவிற்கு முப்பது வயதுக்குள் இருக்கும் என்று நூலாசியர் பதிவு செய்கிறார் 2014வாக்கில் தோசை சாப்பிடுவது இளமைப் பருவத்தின் பெரும் கனவாக இருந்தது என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அதுவும் மென்பொருள் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் முன்னணி மாநிலத்தின் இன்னொரு பகுதியில் எத்தகைய வறுமை நிலவியது என்பதை அறியமுடிகிறது.
’’பத்மாவதிக்கு பதினான்கு வயதுதான் அன்றைக்கான வருமானத்தையே கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் குடும்பத்தால் இதற்கு மேலும் ஒரு பெண்பிள்ளையை வீட்டில் வைத்திருப்பது முடியாதல்லவா பொதுவாக இந்த வயதாகும்போது வால்மீகி குழந்தைகளைத் தேவதாசியாக்குவதைப்பற்றி வீட்டார் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள். வரதட்சிணையாகக் கொடுப்பதற்குக் கையில் பைசாக்கூட இல்லாத குடும்பத்தினர்தான் இப்படி யோசிப்பார்கள். தேவதாசியாக்கிவிட்டால் பிறகு கல்யாணம் செய்ய வேண்டியதில்லை என்பது பெரிய விஷயம் அதுமட்டுமல்ல பிறகு அவள் சமூகத்தின் சொத்து மேலும் குடும்பத்தினருக்குச் சம்மதமில்லை என்றாலும் சில பெண்பிள்ளைகளை ஊர்க்காரர்களே பிடித்துத் தேவதாசியாக்கவும் செய்வார்கள். (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022:52)
ஊரில் உள்ளவர்களே பிடித்து தேவதாசியாக்குவார்கள் என்றால் தேவதாசியாகும் பெண்பிள்ளையின் குடும்பத்தின் இயலாமை எதிர்த்துப் போராட திராணியற்ற நிலை ஆகியன புலனாகும். அப்படிக் கேட்டால் அந்த ஊரில் அந்தக் குடும்பத்தினர் தொடர்ந்து வசிப்பதில் இன்னல் உண்டாகும், தங்கள் வாழ்வாதாரத்திற்கும் வயிற்றுக்கும் நிலமற்ற அன்றாடங் காய்ச்சிகளான அவர்கள் ஏதும் செய்ய இயலாத நிலையைத்தான் இக்கூற்று எடுத்துக் காட்டுகிறது.
தேவதாசியாக்கும் சடங்கு முறை
பெங்களூரிலிருந்து 263 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாவன்கரே என்னும் ஊருக்கு அருகில் இருக்கும் உச்சங்கி மலையில் இருக்கும் அம்மன் சன்னிதிக்கு ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி அன்று தேவதாசியாக்கப்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் வருவார்கள். இக்கோவிலில் வைத்துத்தான் தேவதாசி சடங்கு நடத்தப்பட்டது. 2014 ஆம் வருடம் பத்திரிகையாளர் அருண் எழுத்தச்சன் மகப் பௌர்ணமி அன்று அங்கு சென்று தான் கேட்டதைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
’’இரவு பன்னிரண்டு மணிக்கு அவர்களைக் குளத்துக்குக் கூட்டிச் செல்வார்கள் பௌர்ணமி என்றால் தெரியும்தானே சந்திரனுக்கு மிக அதிக சக்தியுள்ள நாள். சந்திரன் ஒளிவீசும் நேரம்தான் நள்ளிரவு சந்திரனின் அனுக்கிரகத்தில் தீர்த்தக் குளத்தில் உடல் சுத்தம் செய்ய வைத்து இந்தப் பிள்ளைகளை உச்சங்கியம்மனிடம் அழைத்துச் செல்வார்கள் அதன்பிறகு அவர்கள் ஜோகம்மாக்களாகிவிடுவார்கள். குமரிகளை முழு நிர்வாணமாக்கிதான் தேகசுத்தி செய்வார்கள் சந்திரன் எல்லா சக்தியையும் ஊக்கத்தையும் உடலுக்கு வழங்குவதற்குத்தான் நிர்வாணப்படுத்துவது என்ற நம்பிக்கை. அம்மனுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டால் பிறகு இவர்கள் இந்தக் கோவிலின் சொத்து. (அருண் எழுத்தச்சன், 2022:32)
உச்ச நீதிமன்றம் தலையிட்டதால் கர்நாடக மாநில அரசு விழிப்புணர்வூட்டலையும் சட்ட நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தியது. இதன் காரணமாக
’’வீடுகளில் வைத்து இப்போதும் பெண்பிள்ளைகளை தேவதாசியாக்குகிறார்கள். கோவில்களில் நடக்கும் சடங்குகளையெல்லாம் அப்படியே வீடுகளில் நடத்துவார்கள் அதுவும் இன்று இரவு பல இடங்களில் நடக்க சாத்தியமுண்டு.”
என்று அருண் எழுத்தச்சன் (2022:56) அவர்களிடம் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

தேவதாசிகளின் பிள்ளைகள்
தேவதாசிகள் விருப்பப்பட்டுக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டாலும் அந்த குழந்தைகளின் நிலை சமூகத்தில் அவர்கள் எவ்விதமாகப் பார்க்கப்படுகின்றார்கள் என்பதை
‘’அவளது பத்தாம் வயதில் அவளைத் (கெஞ்சம்மாவைத்) தேவதாசியாக்கினார்கள் ஹரப்பன ஹள்ளியிலேயே ஒரு பண்ணையார் அவளைக் கொஞ்ச காலம் தாசியாக வைத்திருந்தார். அந்தத் தொடர்பால் விரைவிலேயே கெஞ்சம்மாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தேவதாசிகளின் குழந்தைகள்மீது சமூகம் காட்டும் பாகுபாடு தாழ்த்தப்பட்ட சாதியின்மீது காட்டும் பாரபட்சத்தைவிடக் கொடூரமானது தன் அப்பா யார்? என்று அறிந்து கொள்வதற்கான உரிமைகூட தேவதாசியின் குழந்தைக்கு இல்லை குழந்தையின் அப்பா யார் என்று வெளிப்படுத்த, தேவதாசிக்கும் உரிமை இல்லை. கெஞ்சம்மா நாட்டு நடப்புகளை அனுசரித்துதான் குழந்தையை வளர்த்தாள் எங்கும் அவன் புறக்கணிக்கப்பட்டான். தேவதாசிக்குக் குழந்தை பிறப்பது தெய்வ கோபத்தின் விளைவுதான் என்பது மேல்சாதிக்காரர்களின் கொள்கை. சமூகத்தின் எல்லா அறியாமைகளையும் சகித்துக்கொண்டுதான் குழந்தை வளர வேண்டும். உங்களுக்குத் தெரியுமா? இங்கே ஒன்றிரண்டு மாவட்டங்களில் மட்டுமே அப்படிப்பட்ட பிள்ளைகள் பத்தாயிரத்துக்கும் அதிகமாக இருப்பார்கள் அப்பா யார் என்று தெரியாதவர்கள் புறக்கணிப்பையும் ஏளனத்தையும் சகித்து வளர விதிக்கப்பட்டவர்கள்’’.
என்று விவரிக்கிறது புனிதப் பாவங்களின் இந்தியா (2022:60-61).
ஆந்திரா
கர்நாடக மாநிலத்தில் இருந்து அதன் தொடர்பு ஆந்திராவுக்கு செல்வதால் அங்கு சென்று அங்கிருந்த தேவதாசிமுறையைப் பற்றி அறிய முற்படும்போது அது தற்போது நடைமுறையில் இல்லை என்றும் 2004இல் உஜ்ஜைனியில் நடந்த கும்பமேளாவின்போது அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டார்கள் எனவும் அறிந்துகொள்கிறார் அருண் எழுத்தச்சன்.
’’1980களின் முடிவுவரை ஆந்திராவின் கரைபிரதேச மாவட்டங்களின் பெரும்பாலான கோவில்களையும் மையமாகக்கொண்டு போக சமூகங்கள் இருந்தன.” (2022:80)
என்றும் மேலும்
’’கர்நாடகத்தின் தேவதாசிகளைவிட அதிகமாகக் கலையுடன் நெருக்கம் கொண்டிருந்த கலாவந்துலுகள்தான் வரலாற்றில் தேவதாசிப் பாரம்பரியத்துடன் அதிகமாக ஒட்டி நிற்கிறது. ஜோகம்மாக்கள் கர்நாடகக் கோவில்களின் அன்றாட வேலைகளைத்தான் செய்து வந்தார்கள் என்றாலும் கலாவந்துலுகள் ஆடுவதையும் பாடுவதையும் மட்டுமே முக்கியமாக செய்து வந்தார்கள்.
குடும்பத்தின் வறுமையும் அறியாமையும்தான் இந்த இரு பிரிவினரையும் கோவில்களில் தாசியாக்கின எங்கள் முன்னோர்கள் கோவில்களைப் பராமரித்து வாழ்ந்தார்கள் என்று கலாவந்துலுகளின் புதிய தலைமுறையினர் சொல்கிறார்கள் என்றாலும் பெரும்பாலும் கோவில்களின் புரோகிதர்கள்தான் அவர்களைப் பயன்படுத்தி வந்தார்கள். ஊரில் இருக்கும் ஜமின்தார்களும் கலாவந்துலுகளைத் தங்கள் வைப்பாட்டியாக வைத்திருந்தார்கள்” (2022:81)
என்றும் அருண் எழுத்தச்சன் தன் நூலில் பதிவு செய்கிறார்.
ஒரிசா: புரி ஜெகன்நாதர் ஆலயம்
ஆந்திராவைத் தொடர்ந்து இந்தியாவின் பழம்பெரும் கோவில்களில் ஒன்றான ஜெகன்நாதர் ஆலயம் உள்ள புரிக்குச் செல்கிறார்.
“ஒரிசாவில் 2005 வரை தேவதாசிமுறை இருந்தது. அந்த மூதாட்டியின் பெயர் சிரிமணி ஒரிசாவில் தேவதாசிமுறையை நிறுத்தும் நாள் வரை ஜெகன்நாதர் சன்னிதியில் ஆடிய நர்த்தகி இவர். புரி ஜெகன்நாதர் கோவிலில் தேவதாசி நடனம் நிறுத்தப்படும்போது சிரிமணிக்கு எழுபத்தொன்பது வயது. (2022:96)
என்று பதிவுசெய்துள்ளார் அருண் எழுத்தச்சன்.
2005வரை இரவில் நடை அடைக்கும்போது தேவதாசிகளின் நடனத்தை இந்தக் கோவிலில் சடங்காக நடத்தி வந்தார்களாம் கடைசிக் காலகட்டங்களில் இந்தப்பொறுப்பு சிரிமணிக்கு வந்தது. அவரிடம் பத்திரிகையாளர் அருண் எழுத்தச்சன்
’’உங்கள் பெயர் சிரிமணியா நான் உரக்கக் கேட்டேன் சிரிமணி தேவதாசி அவர் திருத்தினார். அவர் தேவதாசி எனும் வார்த்தையை மிகவும் பெருமையாகத்தான் உச்சரித்தார்.“ (புனிதப் பாவங்களின் இந்தியா,2022:95-96)
மேலும் சிரிமணி தன் ஏழாம் வயதில் தேவதாசியாக்கப்பட்டார்.
“குடும்பத்தினர் தேவதாசியாக்குவதாக வேண்டிக்கொண்ட காரணத்தால் பிராமணர்களில் சில குடும்பங்களில் இப்படிச் சில பெண்பிள்ளைகளைத் தேவதாசியாக்குவார்கள் அப்படி என்னையும் ஆக்கினார்கள். பாக்கியம் செய்தவர்களுக்குத்தானே கடவுளின் தாசியாக முடியும் அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது ஜெகன்நாதரின் தாசி ஆவதற்கான பாக்கியம்.”(அருண் எழுத்தச்சன் 2022:96)
என்று தான் தேவதாசியாக்கப்பட்டதற்காகப் பெருமை கொள்கிறார் சிரிமணி.
இப்பெருமையின்மீது ஐயம் கொண்டு பின் வருமாறு அவர் சிந்தனை செல்கிறது. கர்நாடகத்தில் தேவதாசிகள் பாலியல் தொழில் செய்கிறார்கள் ஆனால் புரியின் தேவதாசிகள் அப்படிச் செய்யாமல் தப்பித்துவிட்டார்களே எப்படி? அல்லது இங்கே பாலியல் தொழிலுக்கு வந்த தேவதாசிகளை நாங்கள் பார்க்காமல் விட்டிருப்போமா? (2022:99) என்று அருண் எழுத்தச்சன் தன் மனதுக்குள் எழும் வினாக்களுக்குத் விடைதேடுகிறார்.
’’கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் நிலவும் தேவதாசி முறையிலிருந்து புரியில் நிலவும் தேவதாசி முறை வித்தியாசமானது. கர்நாடகத்தில் பின் தங்கிய சமூகத்திலிருந்துதான் தேவதாசிகளைக் கண்டுபிடித்தார்கள் என்றால் இங்கே நேர்மாறாக பிராமண சமூகத்திலிருந்து பெண்ணைத் தேவதாசியாக்குகிறார்கள். அவர்களுக்குச் சமூக ரீதியான அங்கீகாரம் கிடைத்துக் கொண்டிருந்ததால் அவர்களில் பலர் கோவிலுக்கு உள்ளேயே வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள் கோவிலின் நல்ல பொருளாதாரநிலை அவர்களைப் பாலியல் தொழிலுக்குப் போகாமல் பிடித்து நிறுத்தியிருக்கலாம். சமூக ரீதியாக அங்கீகாரம் கிடைக்காத தேவதாசிகள் யாரும் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை புரி ஜெகன்நாதரின் பதிவிரதைகளாவே தொடர்வார்கள் என்று நம்ப முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் கோவில் வளாகத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடராமல் வேறு எங்காவது சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுவார்கள் என்பது உறுதி” (2022:100)
என்று தன் ஐயத்திற்கு விடை காண்கிறார் அருண் எழுத்தச்சன்.
தேவதாசி முறையும் தீண்டாமையும்
“ஏன் ஒரிசாவில் பட்டியல் வகுப்பினரைத் தேவதாசிகள் ஆக்கவில்லை என்று கேட்டேன். பட்டியல் வகுப்பினருக்காகச் செயல்படும் சமூகச் செயற்பாட்டாளரான ராஜ்பாண்டே சொன்ன பதில்தான் அதிகம் பொருத்தமாக எனக்குத் தோன்றியது. பட்டியல் வகுப்பினரை மனிதர்களாகக்கூட பரிசீலிக்க மனமற்ற ஒரிசாவில் தேவதாசியாக மாற்றினால்கூட அவர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க பிராமணர்கள் விரும்பமாட்டார்கள் என்று கருத வேண்டும். இன்னும் இங்கே சட்டத்துக்கு சவால்விட்டுப் பட்டியல் சாதிக்காரர்களுக்குப் பல கோவில்களில் நுழையத் தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள். புரியில் பிராமண சமுதாயத்திலிருந்து தேவதாசியாக்கத் தகுதியான பெண்கள் கிடைக்காதுபோன காலத்தில் ஆண்களுக்குப் பெண்வேடமிட்டுக்கூட தேவதாசிகளாக ஆக்கியிருக்கிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளரான ஜக்பந்து ஜெயின் சொன்னது ராஜ்பாண்டேவின் வார்த்தைகளோடு இசைவதாக எனக்குத் தோன்றியது.” (2022:100)
என எழுதுகிறார் அருண் எழுத்தச்சன். இக்கூற்றின் மூலம் ஒரிசாவில் எந்த அளவிற்கு தீண்டாமை தாண்டவமாடியது என்பதை அறியமுடிகிறது. மேலும் பிராமணர்களில் தகுதியான பெண் கிடைக்காதபோது என்றால் அந்த ஊரில் பிராமணர்களே இல்லாதபோது என்று பொருள் அல்ல அந்த இனத்திலும் வறுமை நிலையில் அல்லது அவர்களுள்ளும் ஒடுக்கப்பட்டவர்கள் கிடைக்காதபோது ஆண்களுக்குப் பெண் வேடமிட்டு அவர்களைத் தேவதாசியாக்கி அந்த வழக்கத்தையும் விடாமல் தீண்டாமையையும் விடாமல் கடைபிடித்து வந்ததை அறியமுடிகிறது.
ஒரிசாவில் கோவில் சுற்றுலாப் பேருந்தில் பயணிக்கும் போது பத்திரிகையாளர் அருண் எழுத்தச்சனுக்கு மற்றுமொரு அனுபவம் ஏற்படுகிறது.
‘’ஓர் இடத்துக்கு வந்தபோது அந்த இடத்தை அறிமுகப்படுத்தியவாறு பேருந்தில் இருந்த வழிகாட்டி மைக்கில் இப்படி அறிவித்தார் இது இந்துக்களாகிய நமது கோவில் அல்ல எஸ்ஸி. எஸ்டி காரர்களின் கோவில் வாகனத்தின் உள்ளே இருப்பவர்களுக்கொன்றும் இந்த அறிவிப்பு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை இங்கே பட்டியல் சாதிக்காரர்கள் இப்போதும் இந்துக்களாகவில்லை. அவர்களைத் தேவதாசிகளாக்கூட கோவில்களுடன் பிணைக்க இங்குள்ள மேல்சாதியினர் விரும்பவில்லை என்று ராஜ்பாண்டே சொன்னது உண்மைதான் என்று எனக்குப் புரிந்தது.(2022:101)
சமகாலத்தில் ஒரிசாவில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை வெள்ளிடை மலைபோன்று விளக்குகின்றது இந்தக் கூற்று.

மேற்கு வங்கம்
கர்நாடகம், ஆந்திராவில் இருந்து தப்பிப் பிழைப்புத்தேடி வந்த தேவதாசிகள் கல்கத்தாவில் இருப்பதாகத் தனக்குக் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் கல்கத்தாவிற்கு வந்து சேர்கிறார் பத்திரிகையாளர் அருண் எழுத்தச்சன். அவரிடம் வறுமையின் காரணமாக கல்கத்தா வந்து சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் பின்வருமாறு உரைக்கிறார்.
’’சதி எனும் உடன் கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்ட பிறகு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்களைக் காளிக்கோவிலுக்கு அனுப்பும் சடங்கு பரவலாக இருந்தது. இது காளிக்கட்டை (கல்கத்தா) பாலியல் தொழிலாளிகளின் மையமாக்கியது. கங்கை கரையில் காளியை வழிபட்டு வாழ்வதற்காக விதவைகளைக் குடும்பத்தினர் இங்கே கொண்டுவந்து தள்ளிவிடுவார்கள் என்கிறது.” (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022:116)

“சோனாகச்சி எனக்குச் சொர்க்கமாக இருந்தது மூன்று வேளையும் சாப்பாடு கிடைப்பதுதான் முக்கியமானது. பெரும்பாலும் தினமும் வேலை இருக்கும் வேலை இல்லையென்றாலும் உணவு கிடைக்கும். வெளியுலகத்தைக் காண முடியாது என்பதெல்லாம் வேளை தவறாமல் சாப்பிட்டு வாழ்பவர்களின் பிரச்சினை மட்டும்தான் பசி அறிந்தவர்களுக்குப் பசியைத் தீர்ப்பதற்கான வழிகள்தான் முக்கியம். (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022:133-134)
பசியின் கொடுமையினால் அல்லல்பட்டு வந்தடைந்த ஒருவரின் வாக்கு மூலம் இது மேலும்.
‘’இரவில் கோவிலுக்குப் பக்கத்தில் வந்து காலையில் தரிசனம் முடிந்துபோகும் பக்தர்களுக்குப் பக்தியின் போதைக்கு முன்னால் இந்தப் போதையும் வேண்டும் உண்மையில் கடவுளின் உதவியால் அல்ல இதுபோன்ற பக்தர்களின் அனுக்கிரகத்தால்தான் கங்கை கரையில் விதவைகள் வாழ்ந்து வந்தார்கள். (புனிதப் பாவங்களின் இந்தியா, 2022:152)
நிறைவுரை
சமகாலத்திலும் தேவதாசி முறை நிலவி வந்ததையும், அவர்கள் என்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுடைய பொருளாதார நிலையினையும், தேவதாசி முறையில் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையையும் அத்தேவதாசிகளின் குழந்தைகளின் சமூகப் பார்வையையும் இதிலிருந்து விடுபட்டுச் சென்று கண்ணியமாக வாழ்ந்தவர்களையும் அவர்களின் தற்போதைய நிலையினையும் அருண் எழுத்தச்சனின் புனிதப் பாவங்களின் இந்தியா நூல் வழி அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்:
முதன்மை நூல்

மு. சண்முகம் (தொ.ஆர்) – தமிழ்-தமிழ்-அகரமுதலி,
ஜூன்1985, தமிழ் நா

அருண் எழுத்தச்சன் – புனிதப் பாவங்களின் இந்தியா
(தமிழில் யூமா வாசுகி) செப்.2022, காலச்சுவடு பதிப்பகம்
துணைமை நூல்

ஆ. சிவசுப்பிரமணியன் – தமிழகத்தில் அடிமை முறை,
மார்ச் 2007, காலச்சுவடு பதிப்பகம்.

கே. சதாசிவன் – தமிழகத்தில் தேவதாசிகள்
(தமிழில் கமலாலயன்) டிசம்பர்2013, அகநி வெளியீடு

மு. சண்முகம் (தொ.ஆர்) – தமிழ்-தமிழ்-அகரமுதலி,
ஜூன்1985, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

Leave a comment

Trending