கவிதை

அட்டைகளின் கூடு

தமிழ்ச்செல்வத்தின் குமாரன்

சிதிலமடைந்த கூரையின் – நுண்
துளையில் வழிந்த நீர்
யாதும் வரையாத நெற்றியில்
கோலமிட்டு துயிலெழுப்புகின்றது.

நரம்புகளில் ஊசியிறக்கி
பனிக்காற்று எழுப்பிவிடுகின்றது
விடியாத வாழ்க்கையின் கதவை.

நெகிழியை இடையில் சுருக்கிட்டு
சாரத்தைத் தலைப்பாகையாக்கி
முழுக்கைச் சட்டையைப் பூட்டி
தேயிலை மலையேறுகின்றன
ஆன்மாக்கள்.

கைரேகைகள் அழிந்த விரல்கள்
மிகையிலைகள் பறித்து
மேடேறிச் சாலையடைய
மக்களின் நினைவு
பெருமூச்சின் முகட்டை எட்டுகின்றது.

கண்களுக்குள் சருகுகள் வந்து – முத்தமிட்டு
குருதிக் கோலமிடுகின்றன.
புலிகளின் உறுமல்களும்
யானைகளின் பிளிறல்களும்
யாரும் தயாரிக்காத இசைத் தட்டுகள்.

தன் எடைக்கு மும்மடங்கு – மூட்டையைத்
தலையில் ஏற்ற மாதவிடாயின்
ரௌத்திரம் தாண்டவமாடும்.
காலத்தின் கணக்கை
கவலையின் முகம் முணுமுணுக்கும்.

அட்டைக் கூட்டிலிருந்து
வீடடையும் முன்
பெயரிடப்படாத நோய்களுக்கு
மருத்துவச்சி தந்த மருந்தை
விழுங்க சிந்தை ஓடும்.

இன்றைக்கோ நாளைக்கோ
இறவாத வரத்தை – இந்தப்
பழங்காடு தர வேண்டும்.

Leave a comment

Trending