ஓவியம் குறித்த தொடர் – பகுதி 4
மரபெண் 3 : முகலாயச் சிற்றோவியங்கள்: நுண்ணழகு நுட்பத்தின் உச்சம்
ஷாராஜ்
சிற்றோவியம் (Miniature Painting) என்பது, அதன் பெயருக்கேற்ப, மிகச்சிறிய அளவில் வரையப்படுகிற, மிகுந்த நுணுக்கமான விவர வேலைப்பாடுகளைக் கொண்ட ஓவியத்தைக் குறிக்கும்.இவை பொதுவாக 25 சதுர அங்குலத்திற்கும் குறைவான பரப்பளவில் இருக்கும்.புத்தகங்களின் பக்கங்களில், கையேடுகளில், அல்லது தனித்தாள்களில் வரையப்படுவது வழக்கம்.இவை எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலும், கைகளில் வைத்துப் பார்க்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டவை.
இங்கே ஒரு விஷயத்தை கவனப்படுத்த வேண்டியிருக்கிறது.சிற்றோவியம் வேறு, நுண்ணோவியம் (Micro Painting) வேறு.நுண்ணோவியம் என்பது நுண்ணிய அளவில், நுண்ணோக்கியின் (microscope) உதவியுடன், அரிசிமணிஅல்லதுஒருமுடியின்மேல்கூடவரையப்படும் நுண்ணிய ஓவியங்களைக்குறிக்கும்.மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் குஷ்பு கதாபாத்திரம் இத்தகைய நுண்ணோவியர்.ஒரு அரிசிமணியில் தாஜ்மகால் வரைந்திருக்கிற காட்சியும் இடம்பெற்றிருக்கும்.
ஓரான் பாமுக்கின் My Name Is Red நாவலில் இடம்பெறும் ஓவியர்கள் சிற்றோவியங்கள் வரையக்கூடியவர்கள்.கையெழுத்துப்பிரதிகள் (manuscripts) மற்றும்புத்தகங்களில்உள்ளகதைகளைவிளக்கும்வகையில், சிறியவடிவத்தில், நுணுக்கமானவேலைப்பாடுகளுடன் சிற்றோவியங்கள் வரைவது இவர்களின் பணி. ஆனால், தமிழில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில், காலச்சுவடு வெளியீடாக, ‘என் பெயர் சிவப்பு’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த நாவலில், சிற்றோவியம் / சிற்றோவியர் என்பதற்கு பதிலாக, நுண்ணோவியம் / நுண்ணோவியர் எனத் தவறான மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிற்றோவியங்கள் தாள், பருத்தி / பட்டுத் துணி, ஓலைச் சுவடிகள், தந்தம், தோல் ஆகியவற்றில் வரையப்படும்.பெரும்பாலும் இயற்கை மற்றும் கனிமப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாயங்கள் பயன்படுத்தப்பட்டன.குறிப்பாக, அளவற்ற ப்ரகாசத்தைக் கொடுப்பதற்காகத் தங்கம், வெள்ளி சாயங்கள் பயன்படுத்தப்படுவது இவற்றின் தனிச்சிறப்பு.
சிற்றோவியங்கள் அவற்றின் மீச்சிறு அளவுகள், அந்தச் சிறு அளவிலும் செய்யப்படுகிற நுண்ணிய வரைவுகள் ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்றவை. மயிரிழையளவு மெல்லிய தூரிகைகளைக் கொண்டு வரையப்படும் துல்லியமான கோடுகள், உருவங்களுக்கு மிக நுணுக்கமான விவரங்களையும், உணர்ச்சி வெளிப்பாடுகளையும் கொடுக்கின்றன. மீச்சிறு பரப்பளவே கொண்டிருப்பதால் பெரும்பாலும் நிழல்-ஒளி நுட்பம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு, உருவங்களும் பின்னணிகளும் ப்ரகாசமான, தட்டையான வண்ணத் தளங்களாக வரையப்படுகின்றன. ஆடைகள், நகைகள், கட்டிடக்கலை, இயற்கைக் கூறுகள் ஆகியவை உருப்பெருக்கிக் கண்ணாடி வைத்துப் பார்க்குமளவுக்கு விவரங்களுடன் நுணுக்கமாக வரையப்பட்டிருக்கும். சிறிய பரப்பு என்றபோதிலும், கதைப் பின்னணிக்குத் தேவையான அனைத்துக் கூறுகளையும் (உருவங்கள், கட்டிடங்கள், தாவரங்கள்) சமச்சீராகவும், அழகுணர்ச்சியுடனும் ஒருங்கிணைத்திருப்பார்கள். பெரும்பாலும் மனித உருவங்கள் பக்க முகத் தோற்றத்திலேயே சித்தரிக்கப்படும்.இது அந்த மரபின் அழகியல் விதியாகும்.
சிற்றோவியங்கள் உலகம் முழுவதும் மத்தியகாலம் மற்றும் ஆரம்பகால நவீன யுகத்தில் செழித்து வளர்ந்தன.
இந்திய மரபு ஓவியக் கலை வரலாற்றில், நுட்பமான அழகியலின், கம்பீரமான கதை சொல்லலின், கலாச்சாரப் பரிமாற்றத்தின் பொற்காலமாகப் ப்ரகாசித்தவை முகலாய சிற்றோவியங்கள். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசின் வருகையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கலை வடிவம், பாரசீகக் கலை மரபுகளின் நேர்த்தியையும், இந்தியப் பாரம்பரிய ஓவியங்களின் ஆன்மிக ஆழத்தையும் அற்புதமாக இணைத்து, ஒரு தனித்துவமான கலைப் பாணியை உருவாக்கியது. இக்கலை, வெறும் அரசவை அலங்காரமாக மட்டும் இன்றி, முகலாயப் பேரரசர்களின் கலை ஆர்வத்தையும், அவர்களின் தனிப்பட்ட ரசனையையும், அந்தக் காலகட்டத்தின் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியையும் பிரதிபலிக்கும்அரிய ஆவணமாகத் திகழ்கிறது.

முகலாயப் பேரரசின் நிறுவனர் பாபர், பாரசீகக் கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது வழித்தோன்றலான ஹுமாயூன்பாரசீகத்தில் நாடு கடந்து வாழ்ந்தபோது, அங்குள்ள கலை, கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக, பாரசீகச் சிற்றோவியக் கலைஞர்களான மிர் சையத் அலி, அப்துஸ் சமாத் ஆகியோரைத் தனது அரசவைக்கு அழைத்து வந்தார். இவர்களே இந்திய மண்ணில் முகலாய சிற்றோவியக் கலையின் விதையை விதைத்தவர்கள். ஆரம்பத்தில்பாரசீக பாணியின் தாக்கமே மேலோங்கி இருந்தது. ஆனால், விரைவில் அது இந்தியக் கூறுகளுடன் இணைந்து புதிய வடிவத்தைப் பெற்றது.
முகலாய ஓவியம் வெறும் கலையம்சமாக மட்டும் பார்க்கப்படவில்லை. அது ஆவணப்படுத்துதலின், பெருமையின், ஆட்சியின் வெளிப்பாடாகத் திகழ்ந்தது. முகலாய மன்னர்கள் தங்கள் வாழ்க்கை, போர் வெற்றிகள், அரசவை நிகழ்வுகள், வேட்டைப் பயணங்கள், தங்களின் தனிப்பட்ட உருவங்கள் ஆகியவற்றை ஓவியங்களாக வரையச் செய்தனர். இவை பெரும்பாலும் சுருள்புத்தகங்களிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் உருவாக்கப்பட்டன.
முகலாய சிற்றோவியக் கலையின் பிறப்பு, பாரசீகத்தின் கலைப் பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையது. குறிப்பாக, சஃபாவித் பாரசீக ஓவியப் பாணி, முகலாயக் கலைக்கு ஆரம்பகாலத் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹுமாயூன், நாடு கடந்து பாரசீகத்தில் தங்கியிருந்தபோதுதப்ரிஸ், ஹீரத் போன்ற கலை மையங்களின் தாக்கத்தால் ஆழமாகப் பாதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் அழைத்து வந்த மிர் சையத் அலி, அப்துஸ் சமாத் ஆகியோர், பாரசீக சிற்றோவியக் கலையின் சிறந்த பிரதிநிதிகளாவர்.
பாரசீக ஓவியங்களின் தனித்துவமான அம்சங்கள்:
• பாரசீக ஓவியங்கள் மிக நுட்பமான கோட்டு வேலைப்பாடுகளுக்கும், ஆடைகள், கட்டிடக்கலை, இயற்கைக் காட்சிகளில் உள்ள துல்லியமான விவரங்களுக்கும் பெயர் பெற்றவை.
• வண்ணங்கள் பெரும்பாலும் ப்ரகாசமானதாகவும், தட்டையானதாகவும் (flat colours) பயன்படுத்தப்பட்டன. நிழல் – ஒளி ஜாலம் (Chiaroscuro) பயன்பாடு குறைவாக இருந்தது.
• ஓவியங்களில் ஆழம் அல்லது முப்பரிமாணத் தோற்றம் குறைவாகவே இருக்கும். காட்சிகள் பெரும்பாலும் இரு பரிமாணங்களில் சித்தரிக்கப்படும்.
• பாரசீக ஓவியங்களில் சமச்சீர்மை, அழகிய வடிவியல் வடிவங்கள், மலர் வடிவமைப்புகள் கொண்ட அலங்காரப் பின்னணிகள் காணப்படும்.
• பாரசீக ஆண்கள் கூம்பு வடிவத் தலைப்பாகைகளை அணிந்திருந்தனர். இது அவர்களின் ஓவியங்களில் தனித்துவ அடையாளமாக இருந்தது.
• பெரும்பாலும் ஷாஹ்நாமா (Shahnameh) போன்ற பாரசீக காவியங்கள் மற்றும் இலக்கியப் படைப்புகளில் உள்ள கதைகளைச் சித்தரித்தன.
ஆரம்பகால முகலாய ஓவியங்களில், குறிப்பாக ஹுமாயூன் மற்றும் அக்பரின் ஆரம்பகாலப் படைப்புகளான ஹம்ஸாநாமா ஓவியங்களில், இந்தப் பாரசீகத் தாக்கம் தெளிவாகக் காணப்பட்டது.மெல்லிய கோடுகள், ப்ரகாசமான வண்ணங்கள், தட்டைத் தன்மை, விரிவான அலங்காரப் பின்னணிகள் பாரசீக ஓவியங்களிலிருந்து நேரடியாகப் பெறப்பட்டன.இருப்பினும், இந்தியக் கலைஞர்கள் படிப்படியாகத் தங்கள் சொந்த பாணியைக் கொண்டு வந்தனர்.இந்திய அழகியலின்படி உருவங்களுக்கு யதார்த்தத்தன்மை, உணர்ச்சி வெளிப்பாடு, முப்பரிமாணத் தோற்றம் சேர்க்கப்பட்டது.இவ்வாறு, பாரசீக விதிகள் இந்தியக் கலையின் மண்வாசனை கலந்து, தனித்துவமான முகலாய பாணியாகப் பரிணமித்தது.
ஒவ்வொரு முகலாயப் பேரரசரும், சிற்றோவியக் கலையின் வளர்ச்சிக்குத் தங்களின் தனிப்பட்ட ரசனைகளுக்கேற்பப் பங்களித்துள்ளனர்.
- அக்பர் (கி.பி. 1556 – 1605): சிற்றோவியக்கலையின் அடித்தளம்.
அக்பர் (கி.பி. 1556 – 1605), முகலாய சிற்றோவியக் கலையின் சிற்பியாகக் கருதப்படுகிறார்.அவருக்குப் பாரசீக ஓவியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்ததுடன், இந்தியக் கலையின் மீதும் ஆழமான புரிதல் இருந்தது. அவர் ஒரு பெரிய ஓவியப் பட்டறையை நிறுவினார். அதில் மிர் சையத் அலி, அப்துஸ் சமாத் போன்ற பாரசீக மேதைகளுக்குக் கீழ், நூற்றுக்கணக்கான இந்தியக் கலைஞர்கள் பயிற்சி பெற்றனர்.
அக்பர்ஓவிய ஆர்வலாராக மட்டுமன்றி, கலைநிர்வாகியாகவும் செயல்பட்டார். ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு குறிப்பிட்ட பணியை ஒதுக்கினார். ஒருவர் உருவங்களை வரைவார், மற்றவர் வண்ணங்களைத் தீட்டுவார், இன்னொருவர் எல்லைகளை அலங்கரிப்பார். இது உற்பத்தியை அதிகரித்ததுடன், கலைஞர்களிடையே போட்டித்தன்மையையும் உருவாக்கியது.
அக்பர்கால சிற்றோவியங்களில் ராமாயண – மகாபாரதஇதிகாசக்கதைகள், பாரசீககாவியங்களானஷாஹ்நாமா, ஹம்ஸாநாமாசித்தரிப்புகள், வரலாற்றுநிகழ்வுகள் (அக்பர்நாமா), அரசவைக் காட்சிகள், விலங்குகள்மற்றும்தாவரங்கள்ஆகியவைமையக்கருப்பொருள்களாகஇருந்தன. ஓவியங்கள் துடிப்பானவண்ணங்கள், ஏராளமானஉருவங்கள், விரிவானகதைசொல்லும்பாணியைக்கொண்டிருந்தன.இந்தியக்கலைஞர்களின்பங்களிப்பால், ஓவியங்களில்யதார்த்தமானதன்மை, உணர்ச்சிவெளிப்பாடு, மற்றும்முப்பரிமாணத்தோற்றம்அதிகரித்தது.
அக்பரின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஹம்ஸாநாமா (ஹம்ஸாவின் சாகசக் கதைகள்) என்பது ஒரு பெரிய, 1400 ஓவியங்களைக் கொண்ட காவியம். இது முகலாய சிற்றோவியக் கலையின் மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள ஓவியங்கள், வண்ணங்களின் துடிப்பாலும், கதை சொல்லும் ஆற்றலாலும், கலை நுட்பத்தாலும் தனித்து நிற்கின்றன.
- ஜஹாங்கீர் (கி.பி. 1605 – 1627): யதார்த்தமும்நுட்பமானவிவரங்களும்.
ஜஹாங்கீர் சிறந்த கலை விமர்சகராகவும், இயற்கை ஆர்வலராகவும் இருந்தார். அவர் தனது தந்தையைப் போல பெரிய அளவிலான திட்டங்களுக்குப் பதிலாக, தனிப்பட்டஉருவப்படங்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், இயற்கைக்காட்சிகள்போன்றவற்றை வரைய அதிக ஆர்வம் காட்டினார்.
ஜஹாங்கீர், “எந்த ஓவியர் எந்தப் பகுதியை வரைந்தார் என்பதை என்னால் அடையாளம் காண முடியும்” என்று பெருமையுடன் கூறினார். இது அவரது நுட்பமான கலைப் புரிதலையும், கலைஞர்கள் மீது அவர் கொண்டிருந்த தனிப்பட்ட மதிப்பையும் காட்டுகிறது.
அவரது கால ஓவியங்களில் இயற்கையின்மீதானகாதல்தெளிவாகத் தெரிந்தது. பறவைகள், விலங்குகள், மலர்கள், இயற்கை நிலப்பரப்புகள் நுட்பமான விவரங்களுடன் வரையப்பட்டன. உருவப்பட ஓவியம் உச்சத்தை அடைந்தது, ஒவ்வொரு உருவப்படமும் ஒரு நபரின் தனிப்பட்ட குணாதிசயங்களையும், ஆளுமையையும் வெளிப்படுத்தின. ஓவியங்களில் உள்ள நிழல் – ஒளி பயன்பாடு, உருவங்களுக்குத் தத்ரூபமான தோற்றத்தை அளித்தது. - ஷாஜகான் (கி.பி. 1628 – 1658): ஆடம்பரமும்செழுமையும்.
ஷாஜகான், கட்டிடக்கலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாலும், ஓவியக்கலையையும் ஆதரித்தார். அவரது காலத்தில், ஓவியங்கள் ஆடம்பரமான, அரசவைப் பாணியைப் பெற்றன. ஓவியங்களில்உள்ளஉருவங்கள், அழகியஆடை – ஆபரணங்களுடன்சித்தரிக்கப்பட்டன.அவை தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களின் பயன்பாடு, நுட்பமான ஆபரண வேலைப்பாடுகள், அரசவை நிகழ்ச்சிகளின் பிரம்மாண்டமான சித்தரிப்பு ஆகியவற்றால் வேறுபடுகின்றன.
ஷாஜகான் காலத்தில், அரசவை வாழ்க்கை, மன்னரின் புகழ், ஆடம்பர விழாக்கள், உருவப்படங்கள், காவியக் காட்சிகள் ஆகியவை மையக் கருப்பொருள்களாக இருந்தன. கலைநயத்தில் உன்னதமான அழகியலையும், நுட்பமான வேலைப்பாடுகளையும் கொண்டிருந்தன.ஓவியங்களில் கம்பீரமான அழகுமேலோங்கிஇருந்தது. உருவங்கள்ஆழ்ந்த அமைதியை வெளிப்படுத்தின.
8க்கு 6 அங்குலம் அளவிலான ஷாஜஹான், அவரது மனைவி மும்தாஜ் ஆகியோரின் உருவ ஓவியங்களில் நுண்ணிய வேலைப்பாடுகளின் அழகைக் காணலாம். - ஔரங்கசீப் (கி.பி. 1658 – 1707) மற்றும்பிற்காலமுகலாயர்கள்: முகலாய ஓவியங்களின் வீழ்ச்சியும்பிராந்தியக்கலைகளின்எழுச்சியும்.
ஔரங்கசீப்கலைகளின் மீது குறைவான ஆர்வம் காட்டினார். அவரது ஆட்சிக்காலத்தில்ஓவியக் கலை மெதுவாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. அரசவை ஆதரவு குறைந்ததால்பல கலைஞர்கள் ராஜபுத்திர அரசுகளுக்கும், பிற பிராந்திய அரசுகளுக்கும் குடிபெயர்ந்தனர். இது, ராஜபுத்திர மற்றும் பாஹாரி ஓவியப் பாணிகளின் வளர்ச்சிக்கு மறைமுகமாக வழிவகுத்தது. பிற்கால முகலாய மன்னர்கள்கலைகளை ஆதரித்தாலும், அக்பர், ஜஹாங்கீர் காலங்களில் இருந்த கலைப் பெருமையைப் பெற முடியவில்லை.
ஆயினும், ஔரங்கசீப் திருமண நிகழ்வில் ஆண் – பெண் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியைச் சித்தரிக்கும் அருமையான சிற்றோவியம் ஒன்று இருக்கிறது.

முகலாய சிற்றோவியங்கள், அவற்றின் நுட்பமான கலைத் திறனுக்காகவும், தனித்துவமான அழகியலுக்காகவும் உலகப் புகழ் பெற்றவை.
ஓவியங்களில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் பெரும்பாலும் இயற்கைத் தாதுக்கள் மற்றும் தாவரங்களில் இருந்து பெறப்பட்டன. இவை ப்ரகாசமானதாகவும், நீடித்து நிலைக்கக்கூடியதாகவும் இருந்தன. தங்க, வெள்ளிப் பொடிகள், ரத்தினக் கற்களின் தூள்கள் போன்றவை ஓவியங்களுக்கு ஆடம்பரமான பளபளப்பைக் கொடுத்தன. மஞ்சள், சிவப்பு, அடர்நீலம், பச்சை, வெள்ளை, கருப்பு ஆகிய வண்ணங்கள் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டன.
மஞ்சள், சிவப்பு போன்ற ப்ரகாசமான வண்ணங்களின்நேரடிப் பயன்பாடு, ஓவியங்களுக்கு உயிர்த்துடிப்பான அழகியலைக் கொடுத்தது.வண்ணங்கள் ஒத்திசைவுடன் பயன்படுத்தப்பட்டு, காட்சிகளுக்கு உரிய உணர்ச்சிகள் கொடுக்கப்பட்டன.
முகலாய ஓவியர்கள் மிக மெல்லிய தூரிகைகளைப் பயன்படுத்தினர். சில சமயங்களில் அணில் முடிகளிலிருந்து உருவாக்கப்பட்ட தூரிகைகள் ஒரு முடி அளவிலான கோடுகளை வரையப் பயன்படுத்தப்பட்டன. இது, உருவங்களின் முடி, ஆடை மடிப்புகள், ஆபரணங்கள் போன்ற நுட்பமான விவரங்களை வரைவதற்கு உதவியது.
முகலாய ஓவியங்கள்நுட்பமான, உறுதியான கோடுகளைக் கொண்டிருந்தன. உருவங்களின் வெளிப்புறக் கோடுகள் மிகத் துல்லியமாக வரையப்பட்டு, பின்னர் வண்ணங்களால் நிரப்பப்பட்டன. வடிவங்கள் பெரும்பாலும் யதார்த்தமானவையாகவும், இயற்கையானவையாகவும் இருந்தன.
முகலாய ஓவியங்களின் உச்சபட்ச சாதனைகளில் ஒன்று, உருவப்படக் கலை (Portraiture). ஒவ்வொரு உருவப்படமும் ஒரு நபரின் குணாதிசயங்களையும், ஆளுமையையும், மனநிலையையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தின. முகங்கள், கைகள், உடல் தோரணைகள் மிக யதார்த்தமாக வரையப்பட்டன. கண்கள், விரல்கள், முகபாவங்கள்அனைத்தும்நுண்ணியஉணர்வுகளைவெளிப்படுத்தின. இது, ஓவியர்கள் மனித உடலமைப்பைப் பற்றி ஆழமாகப் புரிந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
இவ்வோவியங்கள்மேற்கத்தியக் கலையைப் போலத் தீவிரமான முப்பரிமாணத் தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. எனினும், நிழல் – ஒளி (Chiaroscuro) நுட்பத்தைப் பயன்படுத்தி உருவங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஆழத்தையும், தத்ரூபத்தையும் கொடுத்தன.

முகலாய மன்னர்களின் உருவப்படங்களில், குறிப்பாக ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகான் கால ஓவியங்களில், மன்னர்களின் தலைக்குப் பின்னால் தெய்வீகத்தன்மைபாணியில்ஒளிவட்டம் சித்தரிக்கப்பட்டது. இது அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
ஓவியங்களில் உள்ள சில அம்சங்கள் குறியீட்டு அர்த்தங்களைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக, தாமரை – அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது; சிங்கம் அல்லது புலி – சக்தி மற்றும் வீரத்தைக் குறிக்கிறது.
முகலாய ஓவியங்கள்சிறந்த சமநிலையும், தொகுப்பமைவும் (composition) கொண்டிருந்தன. அதன் ஒவ்வொரு உறுப்பும்ஒருங்கிணைந்த காட்சியை உருவாக்ககவனமாக அடுக்கப்பட்டிருந்தது.
காவியம் அல்லது வரலாற்று நிகழ்வின் கதை, சில நேரங்களில் ஒரே ஓவியத்தில் பல காட்சிகளாகப் பிரிக்கப்பட்டு, தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டது. இது, ஓவியம் கலை வடிவமாக மட்டுமல்லாமல், கதை சொல்லும் ஊடகமாகவும் செயல்பட்டது என்பதைக் காட்டுகிறது.
அக்பர் போன்ற மன்னர்கள் கலைஞர்களுக்கு முழு சுதந்திரத்தை அளித்து, அவர்களை ஊக்குவித்ததால், கலைத் தரம் உயர்ந்தது. இது, கலைக்கும்அதிகாரத்திற்கும் இடையேயான ஆரோக்கியமான உறவின் விளைவு.
முகலாயசிற்றோவியங்களில்பாலியல்சித்தரிப்பு ஓவியங்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.அவை குறித்த கலைமற்றும்சமூகப்பார்வைகள் இங்கே.
முகலாய சிற்றோவியங்களின் உலகம், அரசவை வாழ்க்கை, போர்க் காட்சிகள், இயற்கைச் சித்தரிப்புகள், உருவப்படங்கள் மட்டுமல்லாமல், சில சமயங்களில் பாலியல் சித்தரிப்புகளையும் உள்ளடக்கியது. இந்த வகை ஓவியங்கள்பொதுவாக அரசவை அல்லது பிரபுக்களின் தனிப்பட்ட சேகரிப்புகளுக்காக உருவாக்கப்பட்டன. அவை பொது மக்களின் பார்வைக்காக அல்லாமல், தனிப்பட்ட ரசனைக்காகவும், களியாட்டங்களுக்காகவும் வரையப்பட்டன.
இந்த ஓவியங்கள் சிலசமயங்களில் இலைமறை காய் போல பாலியல்உறவுகளைக்காட்டின. சில சமயம் நேரடியான நிர்வாணமும், வெளிப்படையான பாலியல் செயல்களும் சித்தரிக்கப்பட்டன.
காதல்ஜோடிகள்: மன்னர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார்கள், அல்லது பிரபுக்கள் மற்றும் அவர்களின் காதலிகள், தோட்டத்தில் உலா வருவது, படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது, அல்லது ஒருவருக்கொருவர் மது பரிமாறுவது போன்ற காட்சிகள்.

ஹரெம்காட்சிகள்: அரண்மனையின் அந்தப்புர வாழ்க்கை, பெண்கள் நீராடுவது, அலங்காரம் செய்வது, அல்லது ஒருவருக்கொருவர் விளையாடுவது போன்ற காட்சிகள்.
பெர்ஷியன் பாலியல் சிற்றோவியங்களின் தாக்கம்: பெர்ஷியன்சிற்றோவியங்களில் அப்பட்டமான பாலியல் சித்தரிப்புகள் உள்ளன. ஆண் – பெண் பாலுறவுகளை நீலப்படக் காட்சிகள் போல சித்தரிப்பது மட்டுமன்றி, ஓரினச் சேர்க்கைகள், விலங்குகளுடன் ஆணும் பெண்ணும் பாலுறவு கொள்கிற, இயற்கைக்கு மாறான பாலியல் வக்கிர சித்தரிப்புகள் கொண்ட ஓவியங்களும் உள்ளன. பெர்ஷியன்பாலியல்சிற்றோவியத் தாக்கம் இந்திய முகலாயப் பாலியல் சிற்றோவியங்களிலும் காணக் கிடைக்கும். வரலாற்று நாயகர்களான சில மன்னர்கள் – உதாரணமாக, ஜஹாங்கிர் – தங்களின் மனைவிகளான அரசிகளுடனும், ஆசைநாயகிகளுடனும் உடலுறவு கொள்கிற காட்சிகளின் அப்பட்டமான சித்தரிப்புகள்கூட உள்ளன.
காமசூத்ரா விளக்கச் சித்தரிப்பு: சில ஓவியங்களில்காமசூத்ராவில் விவரிக்கப்பட்டுள்ள பாலியல் நிலைகளின் சித்தரிப்புகள் காணப்படுகின்றன. காமசூத்ராவின் விளக்கச் சித்தரிப்புகளாக கஜூராஹோ, கோனார்க் சிற்பக் காட்சிகள் உள்ளது போல இவையும் உள்ளன.
இந்தச் சிற்றின்பச் சிற்றோவியங்கள்மற்ற முகலாயச் சிற்றோவியங்களைப் போலவே மிக நுட்பமான விவரங்களுடனும், மெல்லிய கோடுகளுடனும், ப்ரகாசமான வண்ணங்களுடனும் வரையப்பட்டுள்ளன. மனித உருவங்களின் உடல் வடிவமைப்பு, உணர்ச்சிகள், ஆடைகளின் நுட்பமான மடிப்புகள் ஆகியவை கவனமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பாலியல் சிற்றோவியங்கள்கூட, அழகியல் மற்றும் கலைத் தரத்தைக் கொண்டிருக்கின்றன.
முகலாய சமூகத்தில் பாலியலானது மறைக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. மன்னர்கள், பிரபுக்களின் வாழ்வில் அது கொண்டாட்ட அங்கமாகவே இருந்தது. இந்த ஓவியங்கள் அரண்மனை அந்தப்புரங்களின் ரகசிய வாழ்க்கையையும், மன்னர்கள், பிரபுக்களின் காம ரசனைகளையும், சிற்றின்பத் தேடலையும் வெளிப்படுத்துகின்றன. அவை இன்பவாத சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளன.
பாலியல் சிற்றோவியங்கள்முகலாய ஓவியக் கலையின் சிறு பகுதியாக இருந்தாலும், அவை முகலாயப் பேரரசர்களின் பன்முக ரசனையையும், அக்கால சமூகத்தின் சில அம்சங்களையும் புரிந்துகொள்ள உதவுகின்றன. அவை, முகலாயக் கலையின் முழுமையான அழகியல் மற்றும் கருப்பொருள் வரம்பை எடுத்துக்காட்டுகின்றன.
முகலாய சிற்றோவியங்கள்இன்றும் உலகம் முழுவதும் கலை ஆர்வலர்களால் போற்றப்படுகின்றன. உலகெங்கிலும்உள்ளமுக்கியஅருங்காட்சியகங்களில் (மெட்ரோபாலிட்டன்கலைஅருங்காட்சியகம், பிரிட்டிஷ்அருங்காட்சியகம்) முகலாயஓவியங்கள்காட்சிப்படுத்தப்பட்டு, அதன்உலகளாவியமுக்கியத்துவம்அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முகலாயஓவியங்கள்கலைச்சந்தையில்மிகவும்மதிப்புமிக்கவையாகக்கருதப்படுகின்றன.அரியமுகலாயசிற்றோவியங்கள், ஏலங்களில்அதிகவிலைக்குவிற்கப்படுகின்றன.
முகலாய ஓவியங்கள் குறித்து கலை வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். நவீன கலைஞர்கள், முகலாய நுட்பங்களிலிருந்து உத்வேகம் பெற்று, புதிய படைப்புகளை உருவாக்குகின்றனர்.
இவை யாவும் ஓவிய ஆர்வலர்கள் மற்றும் நமது மரபு ஓவியங்களில் நாட்டமும் மதிப்பும் கொண்ட நுண்கலை ஓவியர்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல்களாக இருக்கும்.
இந்தச் சூழலில் நாம் முகலாய சிற்றோவியங்கள்குறித்துக் கலை ரீதியான அலசல்களைச் செய்வதும், அந்த மரபிலிருந்து நுண்கலை மற்றும் நவீன ஓவியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
பொதுவாகவே எந்த நாடு, பிரதேசம் ஆயினும், எந்தக் கலைகளாயினும், பெரும்பாலானவை நாட்டார் கலைகளாகவே இருப்பது இயல்பு.நுண்கலைகள் குறைவாகவே இருக்கும்.இந்திய மரபு ஓவியங்களிலும் அப்படித்தான், பெரும்பாலானவை நாட்டுப்புறக் கலைகளாகவும், பழங்குடிக் கலைகளாகவும் உள்ளன.இவை கலைகள் அல்ல; கைவினைகள் எனக் கூறத்தக்க பண்புகளே அவற்றில் மிகுந்திருக்கும்.காரணம் இவை ஓவியர்கள் அல்லாத வீட்டுப் பெண்களாலும், ஓரளவு வரைதிறன் கொண்ட கைவினைஞர்களாலும் வரையப்படுபவை.இதற்கு மாறாக கவின்கலைத் தன்மையும், செவ்வியல் தன்மையும் கொண்டவை மிகச் சில மரபுகள்தாம்.அதில் முக்கியமானவை முகலாயச் சிற்றோவியங்கள், காங்ரா சிற்றோவியங்கள் ஆகியவை.அவை கைதேர்ந்த, சிற்றோவிய நிபுணத்துவம் கொண்ட ஓவியர்களால் மட்டுமே வரையப்பட்டன.அவர்களால்தான் அவற்றை வரையவும் முடியும்.
இந்திய மரபு ஓவியங்களின் உச்ச அழகியல் என்றால், முகல் மற்றும் காங்ராவைத்தான் சொல்ல வேண்டும்.அது மட்டுமல்ல; இன்றைய நுண்கலை ஓவியர்களும், நவீன ஓவியர்களும் கற்றுக்கொள்ளத் தக்க, சுவீகரிக்கத் தக்க அம்சங்கள் நிறைந்திருப்பது இவற்றில்தான்.இன்னமும் சொல்லப்போனால், எதார்த்தவியல் ஓவியர்களைக் காட்டிலும் நவீன ஓவியர்கள் கற்றுக்கொள்ளவும், சுவீகரிக்கவும் தக்கஅம்சங்கள் இவ்விரு ஓவிய மரபுகளிலும் அதிகமாக உள்ளன.
அடுத்த அத்தியாயம் காங்ராஓவியமரபுபற்றியது என்பதால், அவ்வகைமையின் சிறப்புகள் பற்றி அதில் காணலாம்.இப்போது முகலாயச் சிற்றோவியங்களின் தனிச்சிறப்புகளைக் காண்போம்.
முகலாயச் சிற்றோவியங்கள் கவனக்கூர்மை, அசாத்தியமான பொறுமை ஆகியவற்றின் வெளிப்பாடுகள். அவற்றில் உள்ள ஒவ்வொரு கோடும், ஒவ்வொரு வண்ணப் புள்ளிவிவரமும், ஆழ்ந்த நோக்கத்துடன் வரையப்பட்டவை.
சிறிய பரப்பளவுக்குள் நுணுக்கமான சித்தரிப்புகளைச் செய்வதும், வியக்கத்தக்க அளவிலான பரந்த காட்சிகளை அடக்குவதும் சிற்றோவியங்களின் சவால் மற்றும் சாகசம் ஆகும். முகலாய சிற்றோவியர்கள்சிறிய ஓவியப் பரப்புக்குள்எப்படி முழு அரசவையையும், போர்க் காட்சியையும், அல்லது ஒரு பூவின் ஒவ்வொரு இதழையும் அத்தனை நுட்பமான விவரங்களுடன் வரைய முடிந்தது என்பது நம்பவியலாததாகவும் இருக்கும். இது, அக்கலைஞர்கள் கொண்டிருந்த அசாத்தியமான அவதானிப்பையும், கைத்திறனையும் காட்டுகிறது. உருவ ஓவியங்களிலும் இப்படித்தான்.
இவற்றைக் காட்டிலும், பிற இந்திய சிற்றோவிய மரபுகள் சிலவற்றில் உள்ளது போலவே, முகலாய சிற்றோவியங்களில் குறிப்பிடத்தக்க, ஓவிய ஆர்வலர்களையும் நுண்கலை ஓவியர்களையும் ஒருங்கே கவரக்கூடிய அம்சம், அதன் தொகுப்பமைவு. சிறிய பரப்பளவைப் பல்வேறு உத்திகளால் திறம்படப் பயன்படுத்துவது அதில் முக்கியமானது.பொதுவாக பரந்த நிலக் காட்சிகள், போர்க்களக் காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் ஆகியவற்றை நிலக்காட்சி ஃபார்மேட்டில் – அதாவது, படுக்கை வசமான செவ்வக வடிவில் – வரைவதுதான் வழக்கம்.இதற்கு மாறாக சிற்றோவியங்களில் இது உருவப்பட ஃபார்மேட்டில் – அதாவது, செங்குத்து வசமானசெவ்வகவடிவில் – வரையப்பட்டிருக்கும்.எதார்த்தத்தில் இந்த ஃபார்மேட்டில் எல்லா உருவங்களும் தெரியாது.முன்னே உள்ளவை பின்னால் உள்ளதை மறைத்துவிடும்.இதை மீறி அனைத்து உருவங்களையும் வரைய வேண்டும் என்பதற்காக, மேலிருந்து கீழாக பல அடுக்குகளை உருவாக்கி உருவங்கள் வரையப்படும்.இதனால் அனைத்து உருவங்களையும் வரையவும் முடிக்கிறது; ஓவியத்துக்கு மாறுபட்ட பரிமாணமும் கிடைக்கிறது.

அரண்மனைகள் உள்ளிட்ட கட்டிடங்கள், அன்றாட வாழ்வின் உபயோகப் பொருட்கள் ஆகியவை துல்லியமாக வரையப்படுவது மட்டுமன்றி, ஓவியங்களின் தொகுப்பமைவில் – அதன் நான்கு பக்க விளிம்புகளோடு தொடர்புறும் விதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பொருட்கள் உருவாக்குகிற நேர்கோடுகள், கோணங்கள், வட்டம் – நீளவட்டம் – சதுரம் உள்ளிட்ட ஜியோமிதி வடிவங்கள் ஆகியவற்றை ஓவியக் கட்டமைப்புக்கு கலை அழகியல் நுட்பத்தோடு பயன்படுத்தியிருப்பார்கள்.
பரந்த காட்சிச் சித்தரிப்பும், நிறைய உருவங்களும் கொண்ட சிறந்த முகலாய சிற்றோவியங்கள் பலவற்றிலும் தொகுப்பமைவு மிகச் சிறப்பாக இருப்பதைக் காணலாம்.ஒவ்வொரு மில்லி மீட்டர் பரப்பும் கவனமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இவை எல்லாவற்றையும்விட, நமது கை விரல் நகத்தின் அளவு மட்டுமே இருக்கக் கூடிய பரப்பிலும் மனித முகங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் எப்படி அவ்வளவு கச்சிதமாக வரைகிறார்கள் என்பது வியந்து தீராதது. நாம் பேனாக் கோட்டோவியத்தில், புறக் கோடுகள் மட்டுமே கொண்டதாக வேண்டுமானால் இவற்றை வரையலாம்.அல்லது அதனுள் ஊடுருவல் தன்மை கொண்ட நீர்ச்சாயத்தில் வேண்டுமானால், சிரத்தையெடுத்தோ, சிரமப்பட்டோ ஒளி – நிழல் – நிழலீடு ஆகியவற்றை அமைத்து, முப்பரிமாணத்தைக் கொண்டுவரலாம்.ஆனால், ஒபேக் எனப்படும் கெட்டியான சாயப்பூச்சு முறையில், இவ்வளவு நுண்ணிய பரப்பில் வரைவது சாமானியமாக இயலாது.இந்தச் சவாலை எளிமையாக்கும் விதமாகவே சிற்றோவியங்களில் முகங்கள் பெரும்பாலும் பக்கவாட்டுத் தோற்றத்தில் வரையப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
முகலாய சிற்றோவியங்களின் நுட்பமான யதார்த்தவாதம் மற்றும் உருவப்படக் கலை ஆகியவை பல இந்திய நுண்கலை ஓவியர்களுக்கும், நவீன ஓவியர்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளன.
ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் ஐரோப்பிய அகாடமிக் பாணியில் இருந்தாலும், உருவங்களின் நேர்த்தியான ஆடை அலங்காரம், ஆபரணங்களின் நுணுக்கம், தெய்வ உருவங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசவை கம்பீரம் ஆகியவை முகலாய உருவப்படக் கலையின் செல்வாக்கின் நீட்சியாகும். இந்த நுட்பங்களை அவர் எண்ணெய் ஓவியத்தில் (Oil Painting) கையாண்டார்.
ஓவியக் கலை மரபில் வங்காளப் பள்ளியின் நிறுவனரான அபனிந்திரநாத்தாகூர், முகலாய மற்றும் ராஜபுத்திர சிற்றோவியங்களின் மெல்லிய கோடுகளை, வண்ணங்களின் தூய பூச்சுகளை, அலங்காரப் பின்னணிகளை உள்வாங்கினார். இவரது ‘பாரத மாதா’ ஓவியத்தின் வடிவமைப்பு, முகலாயக் கலையில் காணப்படும் ‘நளினம்’ (Grace) மற்றும் ‘நுண்ணிய விவரம்’ (Delicate Detail) ஆகியவற்றின் செல்வாக்கைக் கொண்டது.
இந்திய நவீன ஓவிய முன்னோடி மேதைகளில் ஒருவரான அர்பிதாசிங், இந்தியச் சிற்றோவிய மரபின் ஆழமானதும், பரந்துபட்டதுமான தாக்கத்தைக் கொண்டவர்.மேலே பேசப்பட்டதும், பேசப்படாததுமான பலவித சிற்றோவிய உத்திகளைத் தனது ஓவியங்களில் திறம்படப் பயன்படுத்தியவர். இவரது பல படைப்புகளில் முகலாயச் சிற்றோவியங்களில் காணப்படுவது போன்ற தட்டையான வண்ணப் பூச்சுகள், நுணுக்கமான குறியீட்டு வடிவங்கள், கதை சொல்லும் பாணி ஆகியவை காணப்படுகின்றன. இவர் நவீன கருப்பொருள்களைப் பேச, மரபின் வடிவமைப்புக் கூறுகளைப் பயன்படுத்துகிறார். நமது ஓவிய மரபுகளிலிருந்து நவீன ஓவியங்களுக்கு என்னவெல்லாம் எடுத்துகொள்ளலாம், எவ்வளவு எடுக்கலாம், அதை எப்படி நமது பாணியாக மடைமாற்றலாம் என்பதற்கு அர்பிதா சிங் சிறந்த முன்னுதாரணம்.
சமகால எதார்த்தவியல் ஓவியர்களாயினும் சரி, நவீன ஓவியர்களாயினும் சரி – சிற்றோவியங்கள் வரைகிறார்களோ இல்லையோ, முகலாயச் சிற்றோவியங்களிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் உள்ளன. குறிப்பாக, முகலாயச்சிற்றோவியர்கள் எவ்வாறு உருவங்களின் ஆளுமையையும், மனநிலையையும் நுண்ணிய பக்கவாட்டு முகத்தோற்றத்தில்கூடத் துல்லியமாகப் பதிவு செய்தனர் என்பதை ஆழ்ந்து கற்கை செய்ய வேண்டும். இந்த நுட்பம், உணர்ச்சி ஆழத்துடன் கூடிய ஓவியங்களை உருவாக்க உதவும்.


Leave a comment