மொழியாக்கச் சிறார் கதை
கணேசனும் முடவன் முத்துவும்
மலையாளப் படைப்பு: சிப்பி பள்ளிப்புரம்
தமிழாக்கம் : க. சிவமணி
கடைசி மணி ஒலித்தது. பாண்டு வாத்தியங்கள் முழங்கின. சர்க்கஸ் தொடங்குவதற்கு அச்சாரமாய் கணேசன் களத்துக்குள் வருவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன.
சர்க்கஸ் கூடாரத்துக்குள் ஆட்கள் நிறைந்திருந்தார்கள். கண்களை விரித்து வைத்துக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். சற்றும் தாமதிக்காமல் பாண்டு வாத்தியத்தின் தாளத்திற்கேற்ப காலடி எடுத்து வைத்து கணேசன் மெல்ல மெல்ல சர்க்கஸ் கூடாரத்துக்குள் நுழைந்தான்.
திறமையான பெண்ணைத் தன்மீது ஏற்றி வைத்துக்கொண்டு உருளும் பீப்பாயின் மீது நடந்தபடி இருந்தது கணேசனின் வருகை. அவன் தன் தும்பிக்கையில் மூவர்ணக் கொடியை ஏந்தியிருந்ததையும் காணமுடிந்தது.
அதிசயிக்கத்தக்க இந்தக் காட்சியைக் கண்ட பார்வையாளர்கள் சரவெடியில் தீ வைத்ததைப் போலக் கைகளைத் தட்டினார்கள்.
“சூப்பர் கணேசா! சூப்பர்” எனச் சிலர் கணேசனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்தக் காட்சி பல வருடங்களுக்கு முன்பு ‘ஓரியண்ட்’ சர்க்கஸில்தான் அரங்கேறியது. அந்தக் காலத்தில் உலகமெங்கும் சுற்றி வரும் மிகப்பெரிய சர்க்கஸ் கம்பனியாக ஓரியண்ட் இருந்தது. ’ஓரியண்ட்’ சர்க்கஸ்களில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றதாக இந்த கணேசன் என்ற யானை இருந்தது.
ஒரு மரச் சைக்கிளில் ஏறி அவன் கூடாரத்தைச் சுற்றிச் சவாரி செய்வது சர்க்கஸில் மிகுந்த ஆவலைத் தூண்டும் காட்சியாக இருந்தது.
ஓரியண்ட் சர்க்கஸ் கம்பனி எங்கு சென்றாலும் கணேசனைப் பார்ப்பதற்காகவே ஆட்கள் திரண்டு விடுவார்கள்.
தனது ஆதரவாளர்களைத் தனது தும்பிக்கையை உயர்த்தி வணக்கம் சொல்ல அவன் ஒருபோதும் மறந்ததில்லை.
ஓரியண்ட் சர்க்கஸில் ஆல்பர்ட் என்பவர் மிகச் சிறந்த ரிங் மாஸ்டராக இருந்தார். எந்த விலங்கானாலும் தான் கிழித்த கோட்டைத் தாண்டாமல் நிற்கச் செய்யும் தீரன் அவர்.
பல நேரங்களில் கணேசனை சாட்டைவாரால் அடிப்பதும் ஈட்டியால் குத்துவதும் கத்தியால் வெட்டுவதும் அவ்வப்போது நடப்பதுண்டு. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை தரக்கூடிய அவரைக் கண்டால் எல்லா விலங்குகளுக்கும் பயம் அதிகரித்துவிடும்.
கணேசனின் முதுகு, கால், மத்தகம் போன்ற இடங்களிலெல்லாம் ஆல்பர்ட்டின் ஈட்டி குத்தியதால் ஏற்பட்ட தழும்புகள் தெளிவாகத் தெரிந்தன. தனக்கு அனுசரித்து நடக்கும் ஆட்டுக்குட்டியைப் போல ஆல்பர்ட் கொடுக்கும் துன்பங்களைச் சகித்துக்கொள்வதை கணேசன் வழக்கமாக்கிக்கொண்டான்.
ஆல்பர்ட் கணேசனின் தோழனாக இருந்தாலும் அவ்ன் மிகவும் விரும்பும் நண்பன் ஒருவன் அந்தக் கூடாரத்தில் இருந்தான். அவன் யார் தெரியுமா? அவன்தான் முடவன் முத்து!
முத்துவைப் பார்க்கும்போதெல்லாம் கணேசனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முத்துவைத் தனது தும்பிக்கையால் வாரி எடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக் கொள்வான்.
சிறு வயதிலிருந்தே கூடாரத்தில் எல்லோராலும் தீண்டத்தகாதவனாக விரும்பத்தகாதவனாகவே வளர்ந்தான் முத்து. சிறுவர்களால் செய்ய முடிகிற பல்வேறு வித்தைகளை அந்தக் கூடாரத்தில் நேர்த்தியாகவே வெளிப்படுத்தி வந்தான் முத்து. ஆனால் துரதிருஷ்டவசமாக ஒருமுறை வித்தை காட்டிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுக் கீழே விழுந்துவிட்டான். அந்த விபத்தில் முத்துவின் கால்கள் இரண்டும் ஒடிந்து விட்டன. அனைத்து வகையான சிகிச்சைகளை அளித்த பின்னும் ஒடிந்த கால்களைச் சேர்த்து வைக்க முடியாமல் போனது. அந்த விபத்துக்குப் பிறகு அவன் எல்லோருக்கும் ’முடவன் முத்து’வாக மாறிப்போனான்.
இருப்பினும் அந்த சர்க்கஸ் கூடாரத்தை விட்டு வெளியே சென்றுவிட முத்து விரும்பவில்லை. கூடாரத்தில் விலங்குகள், மனிதர்கள் என எல்லோரிடமும் அன்புகாட்டியபடி கூடாரத்தில் உள்ளவர்களில் ஒருவனாகவே இருந்து வந்தான்.
தனது நண்பர்கள் சர்க்கஸ் கூடாரத்தில் பல்வேறு வித்தைகளைச் செய்து காட்டியபடி பார்வையாளர்களிடம் கைதட்டல் வாங்குவதைத் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து நின்று கண்ணீர் சிந்தியபடி பார்த்துக்கொண்டிருப்பான்.
முடவன் முத்து கணேசன் யானையிடமும் தீராத அன்புகொண்டிருந்தான். சற்று நேரம் ஓய்வு கிடைத்தால்கூட கணேசன் அருகில் சென்றுவிடுவான். இவர்கள் இரண்டு பேருமாகப் பல்வேறு குறும்புத்தனங்களை அவ்வப்போது செய்துகொண்டிருப்பார்கள்.
சர்க்கஸ் முடிந்து கூடாரத்தை விட்டு பார்வையாளர்கள் வெளியேறியபின் முத்து கையில் கூடையை எடுத்துக்கொண்டு ஆங்காங்கே சிதறிக் கிடக்கிற ஆரஞ்சுத் தோல், பழத்தோலையெல்லாம் சேகரித்துக் கொண்டுவந்து கணேசனுக்குக் கொடுப்பான். கூடாரத்திலிருந்து ஏதேனும் சில்லறைக் காசுகள் கிடைத்தால் சர்க்கஸ் கேண்டீனுக்குச் செல்வான். கையில் உள்ள காசுக்கு தின்பண்டத்தை வாங்கி வந்து கணேசனுக்கு ஊட்டி விடுவான். அதுமட்டுமல்ல. தனக்குக் கிடைக்கும் உணவிலும் ஒரு பகுதியைக் கணேசனுக்காக ஒதுக்கி வைப்பான். முத்து தன்மீது வைத்திருக்கும் அன்பைக் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தான் கணேசன்.
ஒருமுறை கணேசனின் வாயில் பழத்தை முத்து வைத்துக்கொண்டிருக்கும்போது ஆல்பர்ட் பார்த்துவிட்டார். முத்துவின் இந்தச் செயல் அவருக்குப் பிடிக்கவில்லை.
“ஏண்டா நொண்டி நாயே! யானைக்குத் தீனி போடற வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன். இனிமேல் இவனுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது” என்று முத்துவைத் திட்டித் தீர்த்ததோடு ஆல்பர்ட் முத்துவைக் காலால் உதைத்துத் தள்ளினார். பாவம்! ரொம்ப நேரம் அழுதுகொண்டேயிருந்தான் முத்து.
இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த கணேசனின் கண்களில் நீர் நிறைவதை முத்து வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஆல்பர்ட்டின் கண்களில் படாதவாறு முத்து கணேசனின் அருகில் அவ்வப்போது வருவான்.
ஒருமுறை சர்க்கஸ் கம்பெனியினர் மத்தியப் பிரதேச மாநிலம் ராய்ப்பூரில் சர்க்கஸ் நடத்தப் போயிருந்தனர். அங்கு இருந்தவர்களும் கணேசனைப் பார்ப்பதற்காகப் பெருமளவில் வந்திருந்தனர். கணேசனும் தும்பிக்கையை உயர்த்தி அனைவரையும் வரவேற்றான். கணேசன் செய்யும் வித்தைகள் குறித்துக் கேள்விப்பட்டவுடன் நாலாபக்கங்களிலிருந்தும் பார்வையாளர்கள் கூடாரத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள்.
இவ்வாறு சர்க்கஸ் களைகட்டிக்கொண்டிருந்த நேரத்தில் கணேசனின் நடவடிக்கைகளில் ஏதோ ஒரு மாற்றம் காணப்படுவதாக சர்க்கஸ் கம்பனிக்காரர்களுக்குத் தெரிந்தது. பார்வையாளர்களும் அதன் சுபாவத்தில் ஏதோ மாற்றம் தெரிவதாகவே உணர்ந்தார்கள்.
நெடுநேரம் கணேசன் ஊமையைப்போலத் தலையைத் தாழ்த்தி நின்றுகொண்டிருப்பதைக் கம்பெனியினர் பார்த்தனர்.
”கணேசனுக்கு என்ன ஆச்சு? அவன்கிட்ட ஏதோ மாற்றம் தெரியுதே! மதம் பிடித்ததற்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிகிறதா?” என்று கம்பனி மேலாளர் ஆல்பர்ட்டிடம் கேட்டார்.
”அதெல்லாம் அவன் செய்யும் தந்திரம். சுள்ளுன்னு நாலு அடி கொடுத்தா எல்லாம் சரியாகிவிடும்” என கணேசனுக்கு நினைவுபடுத்தினார் ஆல்பர்ட். ஆல்பர்ட்டின் சிகிச்சையே அடித்துத் துன்புறுத்தித் தன்வழிக்குக் கொண்டுவருவதுதான்.
இவ்வாறு சர்க்கஸ் காட்சிகள் மூன்று நாட்கள் இனிதே நடந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை. காலைக் காட்சி முடிந்து மேட்னிக் காட்சியும் நிறைவடைந்தது. இரண்டு காட்சிகளுக்கும் மக்கள் பெருந்திரளாக வந்திருந்தார்கள். இரவுக் காட்சிக்குக் கூடாரம் தயாரானது. சரியாக ஆறு மணிக்கு இரவுக் காட்சி பற்றிய அறிவிப்பு ஒலித்தது. “ இதோ ஓரியண்ட் சர்க்கஸின் புகழ்பெற்ற கணேசன் உங்கள் ஆசீர்வாதத்துடன் அரங்கத்துக்குள் வருகிறான்” என அறிவித்தார்கள்.
பாண்டு வாத்தியம் ஒலித்தது. தாளத்துக்கேற்றபடி காலடி எடுத்து வைத்துக் கூடாரத்துக்குள் வந்தான் கணேசன்.
”அதோ! கணேசன்! கணேசன்! என்று மக்கள் ஒருமித்த குரலில் ஆரவாரித்தனர். கணேசன் பீப்பாயின் மீது ஏறினான். அவன் முதுகில் வழக்கம்போல சாகசம் செய்யும் பெண் உட்கார்ந்திருந்தாள். அவளது சாகசங்களுக்கிடையில் உருளும் பீப்பாயின்மீது ஏறினான் கணேசன். சற்றும் எதிர்பாராதபடி கணேசனது கால் இடறியது. அவன் முழங்கால் நிலத்தில் மோதி உட்கார்ந்தான். இதற்கிடையில் தன்மீது உட்கார்ந்திருந்த பெண்ணைத் தும்பிக்கையால் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தான். பார்வையாளர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியாதபடி அந்தப் பெண்ணைக் கச்சிதமாய்க் கீழே இறக்கி விட்டான்.
கூடாரத்தில் கணேசனுக்கு நேர்ந்ததை ஆல்பர்ட்டால் பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லை. கோபத்துடன் தன் கையில் இருந்த கத்தியை எடுத்து கணேசனின் காலில் குத்தினான். வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சத்தமாகப் பிளிறியபடி ஆல்பர்ட்டை நோக்கித் திரும்பினான். சில விநாடிகளில் கணேசனின் கூர்மையான தந்தங்கள் ஆல்பிரட்டின் உடம்பைத் துளைத்துச் சென்றன. பின்னர் அவனைத் தன் தும்பிக்கையால் சுழற்றி எடுத்துக் கூடாரத்தில் உள்ள தூணின் அருகில் வீசினான்.
கூடாரமே வெலவெலத்துப் போனது. பார்வையாளர்கள் கூச்சலிட்டபடி நாலா புறமும் சிதறி ஓடினார்கள். ஏராளமானோர் கீழே விழுந்து தவித்தனர். சிலர் கீழே விழுந்தவர்களை மிதித்துக்கொண்டு ஓடினார்கள். இருக்கைகள் சிதறி விழுந்தன. பார்வையாளர்களின் தொடர் கூச்சலால் கூடாரத்தின் சூழலே தலைகீழாய் மாறிப்போனது.
சற்று நேரத்தில் கூடாரமே வெறிச்சோடிக் காணப்பட்டது. இருந்தாலும் கணேசனின் ஆவேசம் அடங்குவதாயில்லை. கூடாரத்தின் பின்பகுதியை நோக்கித் திரும்பினான்.
அங்கு விலங்குகளை வளர்க்கும் கூண்டுகள், வித்தை காட்டுபவர்கள் தங்கும் கூடாரங்கள், உணவகம், சர்க்கஸ் அலுவலகம் அகிய எல்லாவற்றையும் உதைத்துத் தவிடுபொடியாக்கிவிட்டான் கணேசன்.
என்ன செய்வது என்று தெரியாத சர்க்கஸ் கம்பனி ஊழியர்கள் கூடாரத்தை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். கணேசனுக்கு மதம் பிடித்து விட்டது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
சற்று நேரத்தில் கணேசன் கூடாரத்துக்கு வெளியே உள்ள மைதானத்துக்கு வந்தான். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், பேருந்துகள், பைக்குகள் என எல்லாவற்றையும் துவம்சம் செய்யத் தொடங்கினான்.

கணேசனுக்கு மதம் பிடித்து விட்ட செய்தியை அறிந்த காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர்ப் பிரமுகர்கள் என அல்லோரும் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்கள்.
குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் மைதானத்தைச் சுற்றி வளைத்தனர். கணேசன் மைதானத்தை விட்டு வெளியே கடந்து சென்றால் அந்த நிமிடமே சுட்டு வீழ்த்தக் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.
இவ்வளவு நேரமாகியும் கணேசன் சாந்தமடையவில்லை. ”ஒரு மணி நேரத்துக்குள் யானையைக் கட்டி வைக்காவிட்டால் சுட்டுவிடுவோம். ஏதாவது செய்வதாக இருந்தால் உடனடியாக அதற்கான வேலைகளில் ஈடுபடுங்கள்” என சர்க்கஸ் கம்பெனியினரைக் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்?
எல்லாரும் கண்ணீருடன் ஒருவரையொருவர் பார்த்தபடி ஸ்தம்பித்து நின்றிருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் கணேசனின் கதை முடியப் போகிறது என நினைத்தார்கள். ஒரு மணி நேரம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ள நிலையில் காவலர்கள் துப்பாக்கியைக் கையில் எடுத்தார்கள்.
அப்போது துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கிடையில் நொண்டி நொண்டி நடந்தபடி ஒரு சிறுவன் காவலர்கள் முன்னால் வந்து நின்றான். சற்றே பயத்துடன் மெல்ல நடந்து கணேசனின் அருகில் சென்றான்.
”முத்து வேண்டாம். அங்கே போகாதே! கணேசன் தந்தத்தால உன்னத் தூக்கி வீசிடுவான்” என சாகசக்காரர்களில் ஒருவன் உரக்கக் கத்தினார்.
அவர் கூறியதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் கணேசனின் அருகில் சென்றான் முத்து.
”நண்பா கணேசா! என் தங்கமே! உனக்கு என்னடா ஆச்சு? என்றபடி கணேசனின் தும்பிக்கையைப் பிடித்தான்.
இந்தக் காட்சியைப் பார்க்கப் பிடிக்காமல் ஆட்கள் கண்களைப் பொத்திக்கொண்டார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. முத்துவின் அன்பான குரலைக் கேட்ட கணேசனின் கோபம் சட்டெனக் குறைந்து அமைதியானான். தன் பிரியமான நண்பனைப் பலமுறை ஆறத் தழுவினான்.
”கணேசா! நீ செய்தது அளவுக்கு மீறிப் போய்விட்டது. இவ்வளவு தூரம் நீ கோபப்பட்டிருக்கக் கூடாது” என்று கூறியபடி கணேசனின் தலையை வருடி விட்டான்.
அவன் முத்துவைத் தூக்கித் தன் முதுகின்மீது உட்கார வைத்துக்கொண்டு மெதுவாகக் கூடாரத்துக்குள் நடந்து சென்றான்.
நாம் காண்பது கனவா நனவா என்று திகைத்தபடி அங்கு நின்றிருந்தவர்கள் பிரமிப்பில் ஆழ்ந்தார்கள்.
”ஆஹா! முடவன் முத்து நம்மையெல்லாம் காப்பாற்றிவிட்டான். முத்துவின் அன்புக்கு முன்னால் கணேசனுக்குப் பிடித்திருந்த மதமெல்லாம் சரியாகிவிட்டது பார்த்தீர்களா? இது அதிசயம்தான். எங்கே அன்புதான் வெற்றி பெற்றது” என ஆரவாரம் செய்தார்கள்.
அங்கு கூடியிருந்தவர்கள் முத்துவையும் கணேசனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டார்கள்.


Leave a comment