ஒரு வாசகி உதயமாகிறாள்

விஷ்ணுபுரம் விருது விழா 2023 : ஒரு பார்வை

ஜோதிலட்சுமி லோ.

விஷ்ணுபுரம் விழா பற்றி, சென்ற ஆண்டே எனது ஆசிரியர் கூறியிருந்தார். இவ்விழா பற்றி நான் அவ்வாறுதான் அறிந்து கொண்டேன். அதைப் பற்றி நான் மீண்டும் யோசிக்கவே இல்லை, அப்படியே விட்டு விட்டேன். இந்த ஆண்டும் எனது ஆசிரியர் விஷ்ணுபுரம் விழா பற்றிக் கூறுகையில் எனக்குள் ஓர் எண்ணம், நாமும் போய்ப் பார்த்தால்தான் என்ன என்று. ஆசிரியரிடம் விசாரித்தபோது, நிறைய படைப்பாளிகளைக் காண வாய்ப்புக் கிடைக்கும் பேச முடியும் என்றும் சில எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி அங்கு விவாதிக்கப்படும் என்றும் கூறினார்.  இதைக் கேட்டதுமே எனக்குள் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கண்டிப்பாகப் போக வேண்டும் என்று முடிவுசெய்தேன். விவாதிக்கப்பட உள்ள எழுத்தாளர்களின் நூல்கள் சிலவற்றை ஆசிரியர் வாங்கி வைத்திருந்தார். அவற்றுள் ஒன்றைக் கேட்டுப் பெற்றுக்கொண்டேன்.

            டிசம்பர் 16 அன்று காலை நானும் எனது நண்பனும் விழாவிற்குச் சென்ற போதே விழாவின் முதல் அமர்வு தொடங்கிவிட்டது. எனக்கு ஆசிரியர் படிக்கக் கொடுத்திருந்த ‘மிளகு’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான சந்திரா தங்கராஜ் அவர்கள்தான் மேடையில் உரையாடிக் கொண்டிருந்தார்.

எனக்கு விழா அமர்விற்குள் சென்றதுமே ஒரே பிரமிப்பு. அந்தப் பிரமிப்பு இன்றும் என்னைவிட்டுப் போகவில்லை. அவ்வளவு பெரிய அரங்கம். அரங்கம் நிறைந்து அமர இடம் இல்லாமல் நிறைய பேர் நின்றுகொண்டுதான் நிகழ்வைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நானும் நின்று கொண்டுதான் நிகழ்வைப் பார்த்தேன்.

படைப்புகளை விமர்சனம் செய்ய நிறைய மேடைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன், அவற்றில் சற்று மாறுபட்டதாக இம்மேடை எனக்குத் தோன்றியது. எங்களுடைய ‘விதை’ அமைப்பின் நிகழ்வின் ஒரு மாறுபட்ட வடிவமாக விரிவுசெய்யப்பட்ட வடிவமாக இம்மேடை காட்சியளித்தது. படைப்புகளை வெறும் வாசிப்போடு மட்டும் நிறுத்தாமல் அதை முழுமையாக மனதில் உள்வாங்கி விமர்சனம் செய்வது என்பது அரிதே. அதை நான் இங்குக் கண்டேன். தமிழ் இலக்கியங்கள் கடல்தாண்டி, மலைதாண்டிப் பிரதிபலிப்பதை ஜெயமோகன் அவர்கள் இந்த மேடையில் கொண்டு வரத் தவறவில்லை. இங்குக் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் அவ்வளவு ஆழமானவை. அதற்கான விளக்கம் கூறிய விதத்தில் படைப்பாளர்களின் அனுபவமும் ஆற்றலும் வெளிப்பட்டன.

ஒரு படைப்பாளி ஒரு படைப்பை எழுதி முடிக்கும்வரைதான் படைப்பாளியாக இருப்பான். ஒரு படைப்பை எழுதி முடித்த அடுத்த நொடி அவனும் ஒரு வாசகனே, என்பதை நான் அந்தத் தருணத்தில் உணர்ந்து கொண்டேன். ஒரு வாசகன் தன்னைத்தானே மதிப்பீடு செய்து கொள்ளக்கூடிய ஒரு அழகிய தருணம் அது.

முதல் அமர்வை முழுமையாகக் காண முடியவில்லை என்றாலும் சந்திரா அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். இவருடைய ‘மருதாணி’, ‘நிகிலா’ ‘பூச்சி’ ‘பன்னீர் மடைத்தெரு’ போன்ற படைப்புகள் பற்றி உரையாடினார்கள். இவருடைய படைப்புகளில் உள்ள பாலியல் சுதந்திரம், பாலியல் கட்டமைப்பு போன்றன பற்றி உரையாடல் நிகழ்த்தப்பட்டது. முதல் அமர்வு முடிந்ததும் தேநீர் இடைவேளை எனக்கும் என் நண்பனுக்கும் ஒருவரைக் கூட அறிமுகம் இல்லாததால் நாங்கள் தனிமையாய் உணர்ந்தோம். நண்பன் ‘நமக்குத் தெரிந்தவர்கள் நாமே’ என்றான். தேநீர் அருந்தும் போது தேவதேவன் அவர்களைக் காண நேர்ந்தது. அருகில் போய்ப் பேச ஒருவித தயக்கம் என்னுள்ளே ஏற்பட்டது.

பிறகு இரண்டாவது அமர்வு ‘கனலி’ இதழ் ஆசிரியர் விக்னேஷ்வரன் அவர்களுடையது. இதழை எவ்வாறு நடத்த வேண்டும்? இதழ் நடத்துவதில் உள்ள நன்மை தீமைகளைப் பற்றிக் கூறினார். நிலம், காலம் சார்ந்த படைப்புகள் தேவை என்பதைக் குறிப்பிட்டார். ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்றன எனவும் கூறினார். இவருடைய உரையாடல் வழி நான் ‘மீட்சி’ ‘கசடதபற’ ‘ழ’ ‘எழுத்து’ ‘தமிழினி’ ‘பிரபத்த பாரதம்’ ‘பதாகை’ போன்ற இதழ்கள் பற்றி அறிய முடிந்தது.

அடுத்ததாக மிகச்சிறந்த இரண்டு பெண் மொழி பெயர்ப்பாளர்கள், சுபத்ரா, லதா அருணாச்சலம் ஆகியோருடனான  உரையாடல். மொழிபெயர்ப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதைச் சிறப்பாகச் செய்யாவிட்டால் அதற்கான தன்மையை இழந்து விடும் என்று மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள். இதில் சுபத்ரா அவர்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பவர். லதா அவர்கள் நைஜீரியா மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பவர். இவர்கள் இருவரும் நாவல்களை மொழி பெயர்த்துள்ளனர். இதனால் மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி உரையாடினார்கள். மொழிபெயர்ப்பு என்பது எவ்வளவு கடினமான ஒன்று என்பதை உணர முடிந்தது.

அடுத்ததாகக் கவிஞர், சிறுகதையாளர் தீபு ஹரி (பொன்முகலி) அவர்களோடு உரையாடினார்கள். அவர்களுடைய பேட்டி சிறப்பாகவே இருந்தது. எல்லா வினாக்களையும் தன் போக்கில் எதிர்கொண்டார். உள்ளதை உள்ளவாறு தன் பேச்சில் வெளிப்படுத்தினார். இவருடைய ‘தாழம்பூ’ ‘ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்பும் போது’ போன்ற கவிதை நூல்களையும், ‘மித்ரா’ என்ற சிறுகதைத்தொகுப்பையும் பற்றி உரையாடல் நிகழ்த்தப்பட்டது.

அடுத்த நிகழ்வு தமிழகத்தில் புலம்பெயர்ந்து வசிக்கும் ஈழத்தமிழ்ப் படைப்பாளரான வாசு முருகவேல் அவர்களுடனான உரையாடல். இவர் ஒரு நாவலாசிரியர். இவருடைய படைப்புகள், இவருடைய தனி அனுபவங்கள், ஈழப்போர்ச் செய்திகள், ஈழத் தமிழர்களின் வாழ்வியல் நெறி போன்றன பற்றி கலந்துரையாடினர். இவருடைய பேச்சில் ஒரு நையாண்டித்தனம் காணப்பட்டது. மேலும் இவருடைய உரையாடல் வழி ஈழத் தமிழர்கள் படும் கஷ்டத்தை உணர முடிந்தது.

தேநீர் இடைவேளையின் போது ஆர். எஸ். புரத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு குட்டி நடை போட்டோம் நானும் எனது நண்பனும். தெருவெங்கும் விழாவில் பார்த்த முகங்கள். மிகவும் அருமையான அனுபவம். மாலை நேர விளக்குகள் வண்ண வண்ணமாகக் காட்சியளிக்க நடைப்பயணம் மிகச் சிறப்பாக அமைந்தது.

நாங்கள் நடைப்பயணம் முடிந்து வருவதற்குள் அடுத்த அமர்வு தொடங்கியிருந்தது. பா.ராகவன் அவர்களுடனான உரையாடல். இவருடைய அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்குமே பொறுமையாக, மிகச் சிறப்பாகப் பதில் அளித்தார். இவருடைய ‘யதி’ ‘நிலமெல்லாம் ரத்தம்’ போன்ற நூல்கள் விவாதிக்கப்பட்டன.

மாலை நேர வினாடி வினாப் போட்டி மிகவும் ஆர்வம் உடையதாக இருந்தது. எல்லா ஆண்டும் இதுபோன்று நடைபெறும் என்று ஆசிரியர் கூறினார். நாங்களும் ஆர்வமுடன் பதில் கூறக் காத்திருந்தோம்.

வினாடி வினா கேள்விகளைச் செந்தில் என்பவர் கேட்கத் தயாரானார். அவருடைய குரலில் ஒருவித ஈர்ப்பு காணப்பட்டது; மிகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. அவர் இயல்பான நகைச்சுவை உணர்வுடன் உரையாடினார். 30 கேள்விகள் மட்டுமே கொண்டு வந்தேன் அரங்கம் நிறைந்து காணப்பட்டதால் கேள்விகள் போதாது என்று வருத்தப்பட்டார். கேள்விகள் காட்சிப்படமாகவும், வாய்மொழியாகவும், காணொளிப் படமாகவும் அமைக்கப்பட்டிருந்தன. பலர் மிகவும் வேகமாகப் பதில்களைக் கூறினர். சிலர் கேள்விகளைக் கேட்கும் முன்பாகவே கைகளைத் தூக்கி தங்களின் அனுபவத்தை வெளிப்படுத்தினர். பதில் கூறியவர்களுக்கு யுவன் சந்திரசேகர் அல்லது ஜெயமோகன் கையெழுத்திட்ட புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

எனது ஆசிரியரும் ஒரு கேள்விக்கு விடை அளித்து புத்தகத்தைப் பரிசாக வென்றார். இதில் வருத்தமளித்த ஒரு செயல் என்னவென்றால்  எங்கள் அருகிலமர்ந்திருந்த, எனது ஆசிரியரின் நண்பர் கேட்கப்படும் கேள்விகளில் இரண்டில் ஒன்றுக்குச் சரியான பதில்களைக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் கைகளைத் தூக்காததினாலும் பதில்களைச் சத்தமாகக் கூறாததினாலும் அவரைக் கவனிப்பார் யாரும் இல்லை. எங்களுக்கு மிக வருத்தமாகப் போய்விட்டது. அவருடைய திறமையைக் கண்டு ஆசிரியர் அடுத்த கேள்விக்கு நீ சரியாகப் பதில் கூறினால் தானே ஒரு புத்தகம் பரிசளிப்பதாகக் கூறினார். அவர் மணிக்கொடி பற்றிய கேள்விக்குப் பதில் கூறியவுடன் ஆசிரியர் புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார்.

செந்தில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு நேரடியாகப் பதில் கூற முடியாது, கேள்விக்குள் கேள்வி கேட்பதில் செந்தில் அவர்கள் வல்லவராகக் காணப்பட்டார். ஒருவருக்கு ஒரு பதில் கூறத் தான் அனுமதி அளிக்கப்பட்டது. இலக்கியம் சார்ந்த கேள்விகளுக்கு நிறையப் பேர் ஆர்வமுடன் பதிலளிப்பது கண்டு வியந்தேன். அடுத்தமுறை ஒரு புத்தகமாவது வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இவ்வாறான நிகழ்வில் பங்கேற்றது எனக்குள் இருக்கும் வாசிப்புத் திறமையை  எடைபோடும் விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி.

நிகழ்வு முடிந்து இரவு 11 மணியளவில் எனது உறவினர் வீட்டிற்குச் சென்றடைந்தோம். நானும் எனது தோழிகளும். எனது நண்பனும் ஆசிரியரும் அவரவர்களுக்கு ஏற்பாடு செய்த அறைகளில் தங்கிக் கொண்டனர்.

இரண்டாம் நாள் தாமதமாக உறங்கினாலும் விழாவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தயாராகத் துவங்கினோம். நாங்கள் அரங்கிற்குச் சென்றவுடன் தான் நிகழ்வு தொடங்கியது. பார்வைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களை முதல் நாளே நிறைய பார்த்திருந்தாலும் இரண்டாம் நாள் சற்று ஆழமாகப் புத்தகங்களைப் பார்த்தேன். எதையும் வாங்கும் பணநிலையில் இல்லாததால் எல்லாவற்றையும் கண்டு குறிப்பு எடுத்துக் கொண்டேன்.

இரண்டாம் நாளின் முதல் அமர்வு அர்வின்குமார் அவர்களுடையது. மலேசிய எழுத்தாளர். மலாய் இலக்கியம் குறித்தும் தமிழ் இலக்கியம் குறித்தும் உரையாடல் அமைந்தது. இவர் மலாய் பழங்குடியினர் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் வழி மலாய் பண்பாடு பற்றிச் சிறிது அறிய முடிந்தது.

அடுத்ததாக எஸ்.எம். ஷாகிர். இவரும் ஒரு மலேசிய எழுத்தாளர். இவருடைய உரையாடல் மட்டும் மொழி புரியாமல் அவதிப்பட்டோம். காரணம் மலாய் மொழியில் உரையாடல் நிகழ்ந்தது. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள். இருந்த போதிலும் முழுமையாகக் கருத்துக்களை உள்வாங்க முடியவில்லை என்னால்.

விழாவின் நாயகனான யுவன் அவர்களுக்கு அடுத்த அரங்கம் விட்டுக் கொடுக்கப்பட்டது. தொகுப்பாளராக ஜெயமோகன் அவர்களே அமர்ந்தார். நண்பர்கள் இரண்டு பேரும் சரளமாகப் பேசிக்கொண்டும், கிண்டல் செய்து கொண்டும் உரையாடியதால் அரங்கமே உற்சாகமாகக் காணப்பட்டது. யுவன் அவர்களின் இசை ஆர்வம் குறித்து உரையாடப்பட்டது. அப்போது நான் அவரைப் பார்க்கும்போது பாடகர் ஹரிஹரன் போல் எனக்குக் காட்சியளித்தார். மேலும் யுவன் அவர்கள் நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். மேடையில், தனது நண்பன் இல்லை என்றால் இந்த யுவன் இல்லை என்று தனது நண்பனான தண்டபாணி என்பவரைக் கௌரவப்படுத்தினார். நிகழ்வில் நாஞ்சில்நாடன், வேணுகோபால் ஆகியோர் யுவன் அவர்களைக் கௌரவித்தார்கள்.

மதிய இடைவேளைக்குப்பின் ராமச்சந்திர குகா அவர்களுடன் உரையாடல். அதை நான் கொஞ்சம் ஆர்வக் குறைவோடுதான் கேட்டேன். ஏனெனில் ஆங்கிலத்தில் உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் இவ்வாறான பெரிய மனிதர்களைக் கண்டதே பாக்கியம் என்று கருதுகிறேன். இவர் ஒரு காந்தியவாதி என்பதை உரையாடல் வழி அறிந்து கொண்டேன்.

மீண்டும் இரண்டு மணி நேர இடைவேளை நானும் நண்பர்களும் கோவையைச் சுற்றிப் பார்க்கப் போனோம். திரும்பி வருகையில் யுவன் சந்திரசேகர் அவர்களுடைய ஆவணப்படம் திரையிடப்பட்டு முடிந்திருந்தது. அதை அங்கு காண எங்களுக்கு வாய்க்கவில்லை. (வீடுதிரும்பியபின் வலையொளியில் இருமுறை பார்த்து அந்த ஏமாற்றத்தைச் சரிசெய்துகொண்டேன்)  

 யுவன் சந்திரசேகர் அவர்களுடைய விருது வழங்கும் விழாவிற்கான ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அரங்கில் சுமார் 500 பேருக்கு மேல் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். எங்களுக்கு அமர இருக்கை கிடைக்கவில்லை. சுமார் 30 நிமிடத்திற்கு மேல் நின்றுகொண்டுதான் நிகழ்வைப் பார்த்தோம். யுவன் அவர்களுடைய விருது வழங்கும் விழாவிற்கு இத்தனை பேர் வருவார்கள் என்று அவர்களே எதிர்பார்க்காத அளவிற்குக் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவரையும் சிறப்பித்தார்கள், ஒவ்வொருவராக வாழ்த்துரை வழங்கியதும் யுவன் அவர்களின் ஏற்புரை சிறப்பாக அமைந்தது. எழுத்தாளரை மட்டுமல்லாமல் அவருக்குத் துணையாக நிற்கும் துணைவியாரையும் கௌரவித்த விதம் மிக அருமை. இவ்விழாவிற்கே இது சிறப்பாக அமைந்தது.

இவ்விழாவில் உணவு உபசரிப்புகள் எல்லாம் ஒரு கல்யாண வீடு போல் தோன்றியது எனக்கு. அவ்வளவு அருமையான உணவு, பரிமாறும் விதம் என அனைத்துமே அருமை.

ஜெயமோகன் போன்ற மிகப்பெரிய எழுத்தாளுமைகளை எல்லாம் நான் நேரில் காண்பேன் என்பது நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒன்று. இந்நிகழ்வில் அவரை நேரில் பார்த்தேன், மேடையில் பேசியதைக் கேட்டேன். தமிழகத்தில் உள்ள முன்னோடி எழுத்தாளர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டிருந்தார்கள்; கண்டு மகிழ்ந்தோம். முதல் நாள் தயங்கியபோதும்,  இரண்டாம் நாள் தேவதேவன் அவர்களைக் கண்டு பேசியதில் பெரு மகிழ்ச்சி. இயக்குநரான வசந்த் அவர்களைக் கண்டு பேசி அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். யுவன் சந்திரசேகர் அவர்களிடமும் கலந்துரையாட வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

  மூத்த படைப்பாளர்களைப் புரிந்து கொள்ளுதலுமே இளைய படைப்பாளர்களைப் அறிந்துகொள்ளுதலுமே இவ்விழாவின் நோக்கமாகக் கருதுகிறேன்.

அடுத்த ஆண்டு ஒரு வினாவாவது ஒவ்வொரு அமர்விலும் கேட்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த முறை ஒரு சிறந்த வாசகியாக இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். இவ்விழாவில் கலந்து கொள்ள ஆர்வமூட்டிய ஆசிரியருக்கு மிக்க நன்றி.

One response to “ஒரு வாசகி உதயமாகிறாள்”

  1. இம்முறை நானும் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். எனக்கும் இவ்வாறு தோன்றியது.

    Like

Leave a comment

Trending