கன்னடப் படைப்பு : எஸ். திவாகர்
தமிழாக்கம் : கு. பத்மநாபன்

காற்று இராத்திரி முழுக்க வீர்வீரென்று பலமாக அடித்ததில், கதவுப்பலகைகள் படபடத்ததோடு, மேலிருந்து தொங்கிக் கொண்டிருந்த துணியும் கூட அடித்துக்கொண்டு கிடந்தது. பூக்களுடனேயே நாளெல்லாம் இருக்கும் எனக்கு அன்று ரொம்ப நேரமாகத் தூக்கம் வரவில்லை. கங்காவரம் பேருந்தில் முந்தையநாள் சாயங்காலம் வந்து சேர்ந்த ஒரு கூடைப் பூ தன்னுடைய வாசனையால் கடையிலிருந்த மற்ற எல்லாப் பூக்களின் வாசனையோடு போட்டிக்கு இறங்கியதுபோல் தோன்றியது
ஒரு வாரம் முன்பே மகள் சீமந்தத்துக்காக யசோதம்மா அவர்கள் சொல்லிவைத்திருந்த செண்பகப்பூக்கள் இருக்கும் மூன்று கூடைகள். எந்தப் பக்கம் திரும்பினாலும் கம்மென்று மூக்கைத் துளைக்கும். அந்த பயங்கர வாசனையால் அந்த மூன்று கூடைகளுக்கு மத்தியில் படுத்துக்கிடந்த எனக்குப் பொட்டெல்லாம் லேசாக வலிக்க ஆரம்பித்துவிட்டது. நடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு எழுந்தவன் அந்த மூன்று கூடைகள் மீதும் நாலைந்து சாக்குத்துணிகளைப் போர்த்திவிட்டேன்.
உஹும், கடையின் மற்ற எல்லாப் பூக்களின் வாசனைகளையும் பின்தள்ளி கடை முழுக்கப் பரவியுள்ள செண்பக வாசனை ஒன்றை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும்போது என்னதான் செய்வது?.
அன்று பௌர்ணமியாக இருக்கவேண்டும். விளக்குகள் இல்லாத அந்த இராத்திரி வேளையில் கதவுப் பலகைகளின் இடுக்கு வழியாக நுழைந்து வெண்ணிலா வெய்யிலின் ரேகைபோல வந்து கொண்டிருந்தது, எங்கோ தூரத்தில் நாய் ஒன்று குரைத்ததை விட்டால் எங்கெங்கும் மயான அமைதி. ஆனால் கடைக்குள் அப்படி இருக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை செண்பக வாடையே ஒரு முழக்கம்போல இருந்தது. இராத்திரி இரண்டோ மூன்றோ மணி ஆகியிருக்கும். வெளியே ஏதோ கிசுகிசுப்பது போல, யாரோ மெல்ல முனகிவிட்டு உடனே அடங்கிவிட்டதுபோல, தரதர என்று எதையோ தரையில் இழுத்துவந்ததுபோல… என்னவாக இருக்கும் என்று பலகை இடுக்கில் கண் வைக்க, மங்கல் மங்கலான வெளிச்சத்தில் மூன்றுபேர் ஒரு மூட்டை போல எதையோ தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து எங்கள் கடை வாசற்படி முன்னால் போட்டார்கள். ஒருவன் வாயில் பீடி புகைந்து கொண்டிருப்பதுபோல இருந்தது. கண்ணெல்லாம் இருண்டு போய் கிடுகிடுவென்று நடுங்கிப் போனேன். பாயில் புரண்டாலும் இதயம் அடித்துக் கொள்வது குறையவில்லை. அப்படியே புரண்டு கிடந்துவிட்டு சிறிது நேரம் கழித்து மறுபடியும் எழுந்து சத்தம் எழுப்பாமல் பாதம் வைத்து போய் பலகைச்சந்து வழியாகப் பார்த்தால் அது படிக்குப் பக்கத்தில் அப்படியே கிடந்தது. அவர்கள் யாரும் இல்லை. . என்னவாக இருக்கும் என்ற படபடப்பில் ஒரு பலகையைச் சரித்து கண்ணை நுழைத்துப் பார்த்துக்கொண்டிருக்க திடீர் என்று வீசிய பலத்த காற்று எதிர் பக்கத்திலிருந்து காய்ந்த இலைகளைத் தள்ளிக்கொண்டுவந்து அதன் பக்கத்திலேயே போட்டுவிட்டது. ஆகாயம் முழுக்க பளபளவென்று ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள். குனிந்து பார்த்தேன். உஹூம் மூட்டை அல்ல. யாரோ கால் மடித்துப் படுத்துக் கொண்டிருப்பதுபோல….ஒரு கை படிக்கட்டின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது போல….பேண்ட் சட்டை எல்லாம் முழுக்க மண்ணாகிவிட்டதுபோல….ஐயோ என்று மனத்தில் நினைத்தது பயங்கரமாக தெருவெல்லாம் எதிரொலித்தது போல….ஓரிரண்டு விநாடிகளுக்குப் பின்னர் உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்ட எழுந்தவன் சுற்றுமுற்றும் பார்த்து, எங்கே விழுந்துவிடப் போகிறேனோ என்ற பயத்தில் பின்பக்கமாக ஒவ்வொரு அடியாக வைத்து கடைக்குள் வந்து, கதவுப் பலகைகளைச் சரியாக வைத்துவிட்டு, பாயில் எப்படித்தான் புரண்டுகொண்டு இருந்தேனோ..விடிவதற்கு எவ்வளவு காலம் கடந்துபோனதோ … என்னை இனிமேலும் காக்கவைக்கக்கூடாது என்பதுபோல சென்னப்பா வந்துசேர்ந்தான். சாயிபு வந்தார். பலியாகும் ஏதோ பசு ஒன்றின் வாசனையைப் பிடித்துவிட்ட ஓநாய்கள் போல ஊர்க்காரர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். செத்தவன் யார்? யாருக்கும் அவனுடைய அடையாளம் புரிபடவில்லை. ஆசாமி புவனகிரியைச் சேர்ந்தவனே கிடையாது என்று ஊர்ஜிதமானது. ஒரு இரண்டு மணிநேரம் காத்திருக்க வைத்த பின்னர் போலிஸ்காரர்கள் வந்து விசாரணை நடத்தினார்கள். ஆஸ்பத்திரிக்குப் பிணம் போனது. அன்றைக்கு கண்ணைத் திறந்துகொண்டே செத்துக்கிடக்கும் இன்னொரு பிணம் போல மொத்த ஊரும் இருந்தது.
புவனகிரியிலேயே எப்போதும் அமைதியாக இருக்கும் தெரு அது. இரண்டு பக்கமும் அங்கும் இங்கும் இருக்கும் ஒன்றிரண்டு கடைகளை விட்டால் எல்லாமும் சின்னஞ்சிறு வீடுகள். எங்கள் கடை எதிரிலேயே உயரமாக வளர்ந்த தீக்கொன்றை மரம் இருந்தது. ஒருதடவை கடைக்கு வந்த ஹைஸ்கூல் வாத்தியார் கோதண்டராமய்யா சார் அப்போதுதான் பூ விட்டிருந்த அந்த மரத்தைப் பார்த்தபடி, ‘அத நட்டுவச்சது நீங்கதான சாய்பே?’ என்று கேட்டதற்கு சாயிபு வெறுமனே புன்னகைத்தபடி இருந்தார். அந்தத் தெருவில் இன்னும் மூன்று மரங்கள் இருந்தன. ஒன்று பலா, இன்னொன்று வேங்கை, மற்றொன்று வேம்பு.
பெயர் இல்லாத எங்கள் பூக்கடை ஒரு தெரு முடிவடைந்து இன்னொரு தெரு ஆரம்பமாகும் நல்ல வசதியான இடத்தில் இருந்தது. பெரிய கடையெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒவ்வொருநாளும் காலை ஏழு மணிக்கு நானோ அல்லது சென்னப்பாவோ பூட்டைத் திறந்து உயரமான ஆறு கதவுப்பலகைகளைக் கலைத்து இடதுபக்கச் சுவரில் சாய்த்து நிறுத்துவோம். ஏறக்குறைய அதே நேரத்துக்கு சாயிபு கடைத்தெருவுக்கு வந்து கடைகளின் மச்சில் இருக்கும் புறாக்களுக்கு தானியம் இரைத்துக் குனுகியவாறு அவை தானியம் கொறிப்பதை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, கடைக்கு வரும்போதே தெருக்குழாயிலிருந்து ஒரு வாளித் தண்ணீர் நிரப்பி எடுத்துவந்துவிடுவார். சென்னப்பா கடைப் படிக்கட்டுகளிலிருந்து தெரு வரை பாவப்பட்டிருக்கும் நீளமான கற்பாளங்களில் ஒரு மக்கில் தண்ணீர் எடுத்து ஊற்றுவான். அப்புறம் நாங்கள் இரண்டு பேரும் இரண்டு இரும்புக் குழாய்களை தரையில் நிறுத்தி பிடித்துக்கொள்ள உள்ளே சுற்றி வைக்கப்பட்டிருந்த நீலநிறத் தார்பாயை அதன்மீது சாயிபுதான் கட்டுவார்.

கடையில் இருப்பது ஒரு மேசை, முதுகு முறிந்த ஒரு நாற்காலி, சின்னச் சின்ன ப்ளாஸ்டிக் ஸ்டூல்கள் இரண்டு, சுவர் பக்கம் சாய்மானமாக ஒரு பெஞ்சு. சுவர்மீது தேவனஹள்ளி கூட்டுறவுச் சங்கத்தின் மகாலெஷ்மி படம் அச்சடிக்கப்பட்டிருக்கும் கேலண்டர். மூலையில் மூங்கில் கூடை, சாக்குச்சீலைகள் மற்றும் ப்ளாஸ்டிக் பைகள்; பெஞ்சின் ஒரு ஓரமாகச் சேர்த்து வைத்த பழைய பத்திரிகைகள், கயிற்றுச் சுருள்கள், ஒரு டப்பியில் ரப்பர் பேண்டு. கடை வைத்திருந்தவர் அப்துல் கபூர் சாயிபு. இத்தனை வருஷங்களுக்குப் பின்னர் ஞாபகப்படுத்திக் கொண்டாலும்கூட அவருடைய உருவம் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. முழங்கால் தொடும் அளவு நீளமான வெள்ளை ஜிப்பா, பச்சை கட்டம்போட்ட லுங்கி, காலில் நாடா இல்லாத ஷூ, பின் பக்கமாக வாரியிருக்கும் தலைமயிர் காரணமாக ரொம்ப அகலமாகத்தெரியும் நெற்றி, நீளமான மூக்கு, மார்பு வரை வளர்ந்த கருப்பு வெள்ளை ரோமங்கள் பரவியிருக்கும் தாடி, எப்போதும் புன்னகைத்துக் கொண்டே உற்சாகமாக இருப்பவர் ஒருமுறையாவது கோபப்பட்டு யாரும் பார்த்ததே கிடையாது.
நான் வேலைக்குச் சேர்ந்த நாளிலேயே எனக்கு சாயிபு சும்மா உட்காரும் ஆசாமி அல்ல என்று தெரிந்துவிட்டது. வண்டியில் வரும் பூக்களை இறக்கிவைப்பார், கூடையில் இருக்கும் பூக்களுக்குத் தண்ணிர் தெளிப்பார், பெரிய பாத்திரம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் துளசி வாடிவிடக்கூடாது என்று ஈரத்துணியைக் கட்டுவார், ஓய்வு இருக்கும் போதெல்லாம் பூக்கட்டுவார். தண்ணீர் இருக்கும் ஒரு சிறிய பாத்திரத்தில் உள்ள கயிற்றுச்சுருளிலிருந்து இழுத்த கயிற்றில் குவியலாக எதிரில் இருக்கும் பூக்களில் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு வலது கையின் இரண்டு விரல்களில் விறுவிறுவென்று பூத்தொடுப்பதைப் பார்ப்பதே அழகு. கல்யாணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் போடும் மல்லிகை மாலையோ அபாரம், இரட்டைவடத்தில் முத்து கோர்த்ததுபோல மல்லிகை மொட்டுகளைத் தொடுத்து, ஐந்தைந்து இஞ்ச் இடைவெளியில் மருகு இலைகளையும் ரோஜாப்பூக்களையும் சேர்த்துக்கட்டி, மின்னும் ஜிகினா இழைகளை மேலாக அசையவிட்டு, உத்தரத்திலிருந்து தொங்கும் இரும்புவளைவில் அவர் மாட்டிவிட்டால் போதும், எங்குதான் இருக்குமோ தேனீக்கள் ‘ருய்’யென வந்து மொய்த்துக் கொண்டுவிடும்.
இந்தக் கடையில் வேலைக்குச் சேரும்வரை எனக்குப் பூ எப்படி எல்லாம் உபயோகப்படுகிறது, ஆட்கள் எதற்காக அவ்வளவு பூ வாங்குகிறார்கள் என்றெல்லாம் தெரியாது. பூவுக்காக ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருந்த சில வாடிக்கைக்காரர்களுக்கு நூறு கிராம் முதல் ஒன்றிரண்டு கிலோ வரை உதிரிப்பூக்கள்; தேவைப்பட்டால் மற்ற சிலபேருக்கு கட்டிய பூ ஒன்றோ, இரண்டோ முழம் வேண்டியிருக்கும். பெரும்பாலும் அது சாமி பூஜைக்கோ அல்லது தலையில் முடிந்துகொள்வதற்கோதான். ஆனால் குழந்தையின் தொட்டில் வைபவத்துக்கு என்றோ வயதுக்குவந்த பெண்ணுடைய பூப்புச் சடங்குக்கு என்றோ கிரகப்பிரவேசத்துக்கு என்றோ கல்யாணம், பூணூல் என்றோ கூடைக்கணக்கில் பூவுக்கு சொல்லிவைப்பவர்கள் ஒன்றும் குறைவாக இல்லை. ஊர்வலத்தில் பிணத்தை எடுத்துக்கொண்டு போகிறவர்கள் கூட ஒவ்வொரு தடவை எழுபது எண்பது மாரு சாமந்திப்பூக்களை வாங்கிக்கொண்டு போவார்கள். விநாயகச் சதுர்த்தி வந்தால் எங்களுக்குத் தாமரை மொட்டுகளைச் சேர்ப்பதே பெரிய வேலையாக இருக்கும்.
கடைமுழுவதும், பெஞ்சின்மேல், தரையில், படிக்கட்டுகளில், கதவின்மேல் எங்கெங்கும் பூக்கள்தான். கூடைகளில், பெரிய பாத்திரங்களில் நிரம்பியுள்ள செவ்வந்தி, டேலியாப்பூ , கனகாம்பரம், மல்லிகை, குண்டுமல்லி, இருவாட்சி, ஜாதிமல்லி, சுகந்தராஜா, செண்பகம், செவ்வரளி, காக்கட்டா, காசித்தும்பை, குங்கிலியம், நந்தியாவட்டை, மருகு, இளம்துளசி, வில்வ இலை… சரமாகத் தொடுத்த, சேர்த்துக் கட்டிய, மாலைகளாகத் தொங்கவிட்ட, பூங்கொத்தாக, அழகாக அடுக்குக் கொண்ட, கொத்துக்கொத்தாகச் சுற்றிவைத்திருக்கும் பூக்கள்; ஒரு சுற்று இரண்டு சுற்று ஐந்து சுற்றுகள் மலர்ந்திருக்கும், நீளமான இதழ்களிருக்கும், இதழ்களில் நகாசுபோல வண்ணக் கோடுகள் இருக்கும், சிறிதே வளைந்த நடுப்பகுதியில் மகரந்தம் இருக்கும் பூக்கள், இதழ் நுனியில் கோளவடிவமான , குண்டுகுண்டான, தொட்டால் வாடும்அளவு மென்மையான, குழந்தையின் விரல் அளவு நயமான, புறாக்களின் தூவிபோல மின்னிக்கொண்டிருக்கும், எல்லாத் திசைகளிலும் பலவகை வாசனைகளைப் பரவச்செய்யும், வகைவகை வண்ணங்களால் முழக்கம் எழுப்பும் பூக்கள். அப்புறம் அந்த வண்ணங்கள்! வெள்ளை, சிவப்பு, பழுப்பு, மஞ்சள், நீலம் வண்ணங்களிலும் எவ்வளவு வித்தியாசம்! ரோஜாவையே எடுத்துக்கொள்ளுங்கள். முட்கள் இருக்கும் பச்சைக் காம்பு, மெல்ல இதழில் புன்னகை விரிவது போல, காம்பிலிருக்கும் இதழில் ஐந்து ஆறு பசிய இலைகளின் இடையில் சிறிதே மலர்ந்திருக்கும் அல்லது மலர்ந்து மலர்ந்து பின்நோக்கியவாறு இதழ்கள் மடிந்திருக்கும் சிவப்பு, அடர்சிவப்பு, ரோஜாநிறம், பழுப்பு, காவி வண்ணப்பூக்கள், வெளிப்பட்டும் வெளிப்படாதது போலவே இருக்கும் அந்தப் பூக்களின் இதமான நறுமணம், தண்ணீர் தெளித்தால்கூட பின்னோக்கி, பின்னோக்கி வளைந்துகொள்ளும் இதழ்களின் மீது முத்துபோல உருண்டு திரண்டு நிற்கும் நீர்த்துளிகள்.
முளபாகுலு, வடகேனஹள்ளி, நல்லூரூ, பூதிகெரெ, ஹசிகாள, திண்ட்லூ, கௌரிபீதனூரூ, இப்படி எங்கெங்கு இருந்தோ அதிகாலை ரயிலில், பரமேஸ்வர பஸ் சர்வீஸ், ஆஞ்சநேயப் ப்ரசன்னா, மாங்காளம்மா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பேருந்துகளில் கூடைகூடையாக வந்து கொண்டிருக்கும் பூக்களை நாங்கள் இறக்கிக் கடைக்குக் கொண்டுவந்து போடுவோம். எப்படிப் பூக்களை நயமாக நீவவேண்டும், மேலே எப்படித் தூக்கவேண்டும், எவ்வளவு ஜாக்கிரதையாகக் கீழிறக்கவேண்டும் என்றெல்லாம் சாயிபு எங்களுக்குச் சொல்லிக்கொடுக்காத ஒரேயொரு நாள் கூட கிடையாது என்றுதான் சொல்லவேண்டும்.
எங்கள் ஊர் அதேஸ்வரத்தில் இருக்கும் ஸ்ரீகண்டேஸ்வரர் ஆலயத்தில் வருஷத்துக்கு ஐந்து ஆறு தடவையாவது சண்டி ஹோமம் நடக்கும். ஒருமுறை அந்த ஹோமத்தை நடத்திவைக்க புவனகிரியைச் சேர்ந்த சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள் வந்திருந்தார்கள். அப்போது எஸ்எஸ்எல்சிவரை படித்தும்கூட எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்த என்னை, எங்கள் அப்பா, அவர் முன்னால் நிறுத்தி, ‘ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அப்புறம் சில நாட்களிலேயே சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள் என்னைச் சேர்த்துவிட்டது புவனகிரியைச் சேர்ந்த அப்துல் கபூர் சாயிபுவின் இதே கடையில்தான், எனக்கு பத்தொன்பது வயசு அப்போது. சென்னப்பா அங்கு முன்பே வேலைக்குச் சேர்ந்திருந்தான். பூ வாங்க வருபவர்கள் எல்லோரும் சாயிபுவுக்கு வேண்டியவர்கள்தான், கடைக்கு வந்தவர்களுக்கு சென்னப்பாவை அனுப்பி டீ வரவழைத்துக் கொடுப்பார். வேறு சிலருக்கு மோர், ரொம்பத்தெரிந்தவர்கள் என்றால் அவர்களை தெருமுனையில் இருந்த உடுப்பி ஹோட்டலுக்கு அவரே கூட்டிக்கொண்டு போவார்.
ஒரு சம்பவம் என் மனசில் இன்னும் நன்றாகப் பதிந்திருக்கிறது. சாயிபு என் கைகளில் இரண்டு ஜோடி வாழைக் குலைகளையும், மல்லிகை கனகாம்பரம் மாலைகளிருக்கும் பை ஒன்றையும், உதிரிப்பூக்கள் இருக்கும் ஒரு கூடையையும் கொடுத்து, ‘ஐயா பசவராஜப்பா வீட்ல குடுத்து வாம்பிள்ளெ’ என்றார். கோட்டைத்தெருவில் இருந்த பசவராஜப்பா அவர்களின் வீட்டை யாருக்குத் தெரியாது? அவர் முனிசிபல் கவுன்சிலர் என்று பிரபலமாக இருந்தவர். மெயின் ரோடு வழியாக ஒன்பது குறுக்குச்சாலைகளைக் கடந்து போனதும் பத்தாவது குறுக்குச் சாலையில் இருக்கும் பெரியபங்களா தான் அவருடைய வீடு. வாழைக்குலைகளை இடதுபக்கம் உடம்போடு சேர்த்துக் கொண்டும் பை, கூடை இவற்றை இரண்டு கைகளில் மார்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டும் கிளம்பினேன். பெரிய மனிதர்களின் வீடுகள் போன்றே அவர் வீட்டுக்கும் இரும்பால் செய்யப்பட்ட பெரிய கேட் இருந்தது. முன் வாசல் படியிலேயே படுத்துக்கிடக்கும் ஒரு பருமனான நாய். அதற்குச் சங்கிலி எதுவும் இருக்கிறதா என்று தெரியாததால் கொஞ்சம் பயந்துகொண்டே கேட்டின் தாழ்ப்பாளை இரண்டு தடவை அசைத்தேன். யாரும் வீட்டில் இல்லையோ என்று ஒரு வினாடி தோன்றியது. படுத்துக்கிடந்த நாய் கண்ணைத் திறந்தாலும் ஆடவோ அசையவோ இல்லை; அதன் வால்கூட அசையவில்லை. முன்பிருந்த பயம் விலக ஏழு எட்டு முறை தாழ்ப்பாளை பலமாக ஆட்டினேன். உள்ளிருந்து தாழ்ப்பாள் விலக்கிய சத்தத்துடன் கதவு கீறிச்சிட்டுத் திறந்துகொண்டது. கதவு திறந்தவுடன் தென்பட்ட ஐயா பசவராஜப்பா என்னைப் பார்த்தவுடன், ‘அடடே, கபூர் சாயிபு அனுப்பி வெச்சாங்களா?வா, வா, உள்ள வா’ என்று சொன்னவர் பின்னால் திரும்பி, ‘இங்க பாரு, பூ வந்திடுச்சு’ என்று சத்தமாகச் சொன்னார். கூடம் தாண்டி நடுவீட்டுக்கு போனபோது அங்கு ஒரு மூலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த நடுவயதுப்பெண்மணி பசவராஜப்பா அவர்களுடைய சம்சாரமாக இருக்கவேண்டும், பின்னால் திரும்பி என்னைப் பார்த்து, ‘அம்மாடி வாழைக்குலையும் வந்துடுச்சு; அங்க அந்தப் பாய்ல வெச்சிடுப்பா’ என்று சொன்னவர் நான் பின்னால் திரும்பிக் கிளம்பியதைப் பார்த்து, ‘ஒக்காருப்பா ஒக்காருப்பா’ என்று சொல்லியபடியே உள்ளேபோய் ஒரு தட்டு நிறைய உப்புமா கொண்டுவந்து கொடுத்தார். நான் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்ததும் அவர் பையிலிருந்து மாலைகளை எடுத்து எவ்வளவு நீளம் இருக்கிறது என்று கையாலேயே அளந்து பார்த்து, ‘பூவு நல்லா இருக்கு, சாயிபு என்னைக்கும் சொன்ன வார்த்த தவறுனது கெடையாது. அவரு கிட்ட சொன்னா முடிஞ்சமாதிரித்தான் , நாம கவலயே இல்லாம இருக்கலாம்’ என்று சொன்னவர் ‘வீட்ல நாளக்கி சத்யநாராயண பூஜப்பா, நீ வா சரியா, சாய்பையும் வரணும்னு சொல்லியிருக்கேன்’ என்று சொன்னார்.
வருஷத்தில் சிலமுறை எந்தெந்த ஊர்களிலிருந்தோ கல்யாணத்துக்கும் பூணூலுக்கும் பூவேண்டும் என்று கோரிக்கைகள் வரும். சாதாரண சந்தர்ப்பங்களில் சாயிபு எங்களைத்தான் அனுப்பிவைப்பார். நான் கடையிலிருந்தால் சென்னப்பா, சென்னப்பா கடையில் இருந்தால் நான். பேருந்துக் கூரைகளில் பூக்கூடைகளை ஏற்றிவைத்துக் கொண்டு அந்தந்த ஊர்களுக்குப் போய் கொடுத்துவிட்டு வருவோம். ஆனால் கங்காவரம் ஸ்ரீகண்டேஸ்வர ஆலயத் திருவிழாவுக்கும் அதேஸ்வரம் மாரம்மன் கோயில் திருநாளுக்கும் சாயிபு அவரே பூக்கூடைகளை எடுத்துக்கொண்டு போவார், அந்த நாட்களில் ஒன்றோ ரெண்டோ நாட்கள் அந்த ஊர்களிலேயே தங்கியிருந்து விட்டும் வருவார். அதேமாதிரி அவர் வருஷத்தில் சில தடவை தானே முன்னால் நின்று பூ வினியோகம் செய்துகொண்டு இருந்தது சூலிபெலெயில் இருக்கும் தர்காவுக்கு, அப்புறம் பூதிகெரெயில் இருக்கும் தேவாலயத்துக்கு.
எங்கள் தெருவில் கால் வைத்தால் போதும், பூக்களின் வாசனை மூக்கைத் துளைக்கும். அதிலும் மல்லிகை என்றால் காற்றுக்கும் உற்சாகம் வந்துவிடும். இன்னும் மலராத மொட்டாக இருக்கட்டும், சிறிதே விரிந்திருக்கட்டும் அல்லது முழுசாக மலர்ந்துகூட இருக்கட்டும், மல்லிகை என்றால் அதன் நளினத்துக்கு, நாசுக்குக்கு சரிசமமான நறுமணம் இன்னொன்று கிடையாது. அப்புறம் எங்கள் கடையில் மல்லிகை, இருவாட்சி, ஊசிமல்லி, ஜாதிமல்லி பூக்களுக்கு என்றைக்கும் தட்டுப்பாடு வந்ததே கிடையாது. அவருடைய மகளுக்குப் பூ ஜடை பின்னவேண்டும் என்று எங்கள் ஊர் ஜெயராமய்யா அவர்கள் ஒருமுறை மல்லிகை மொட்டுகளுக்குச் சொல்லிவைத்திருந்தார். அப்படிப் பார்த்தால் விசேஷமான எல்லா சந்தர்ப்பங்களிலும் பூ வேண்டிய போதெல்லாம் அவர் சாயிபுவிடம்தான் சொல்லிவைத்துக் கொண்டிருப்பார். ஒன்று ரெண்டு தடவை அவர் அவருடைய மகளைத் தூக்கிக்கொண்டு கடைக்கு வந்ததும் உண்டு. அப்போது சாயிபு ரொம்ப துருதுருவென்று இருந்த அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, அதன் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சியதை நானே பார்த்திருக்கிறேன். அன்று சாயிபு அவரே முன்நின்று தமிழ்நாட்டின் ஆம்பூரிலிருந்து ரெண்டு கூடை மல்லிகை மொட்டுகளை வரவழைத்திருந்தார்., அவற்றை எடுத்துக்கொண்டுபோக ஜெயராமய்யாவே கடைக்கு வந்திருந்தார். ‘கூடைகளைத் தூக்கிக்கொண்டு கூடவேபோய் அவருடைய வீட்டில் கொடுத்துவிட்டு வா’ என்று சாயிபு என்னை அனுப்பிவைத்தார். சுமார் முக்கால் மணிநேரம் நீளும் பாதை அவருடைய வீட்டுக்கு. முதல்நாள் இராத்திரி மழை காரணமாகத் தெருவில் அங்கங்கு தண்ணீர் தேங்கிச் சேறாகிக் கிடந்தது. அவர் வேட்டியை மேலே தூக்கிக் கட்டிக்கொண்டு, சின்னச்சின்ன பள்ளங்களில் தேங்கியிருந்த தண்ணீர் சரக்சரக்கென்று ஓசையெழுப்பும் அவரது செருப்பில் பட்டுவிடாதபடி பாதங்களைத் தள்ளித்தள்ளி வைத்து நடந்து வந்துகொண்டிருந்தார். மேகங்களைத் திரட்டிக்கொண்டிருந்த ஆகாயத்திலிருந்து விருட்டென்று அடித்த காற்று அங்கே பக்கத்தில் இருந்த வேப்பமரத்தை உலுக்கியது. நாங்கள் ரெண்டுபேரும் அப்படியே நடந்துபோய் பத்ரகாளி மாவு மில்லை அடையும் வேளை ஜெயராமய்யா அவர்கள் ஒரு விநாடி நின்று என் பக்கமாகத் திரும்பியவர், ‘சுபேதா எப்டி இருக்காளாம்’ என்று கேட்டார். ‘யார் சுபேதா? என்ன? ஏது?’ என ஒன்றும் புரியாத நான் குழம்பிப்போய் சும்மா திருதிருவென விழித்தேன். ‘ஐயோ பாவம் ஒனக்குத் தெரியாது போ’ எனத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தவர் அவருக்குள் சொல்லிக்கொள்பவர்போல ‘சாமி மாதிரி இருக்குற சாயிபு இந்தக் கஷ்டம் படணுமா…. தோளுக்குமேல வளர்ந்த பையன் ஓடிப்போயி வருஷம் ஆனாலும்கூட ஒரு தகவலும் கெடையாது… இப்போ சுபேதாவும் தத்துப்பித்துன்னு பேசறாளாம்… பாவம் அவளும்தான் என்ன பண்ணுவா…. எதுக்கு ஓடிப்போனான் எங்க ஓடிப்போனான்னு தெரிஞ்சிருந்தாலாவது….’ இப்படி ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய வீடும் வந்துவிட்டது.
கடைக்குத் திரும்பிவந்த நான் அவர் சொன்னதை ரகசியமாகச் சென்னப்பாவிடம் சொன்னேன். அவனுக்கும் ஆச்சரியம். அதிசயம் என்னவென்றால் சாயிபு ஒருநாள் கூட எங்களிடம் அவரது குடும்பம் பற்றி சொல்லிக்கொண்டது கிடையாது; ஒருதடவை கூட எங்களை அவருடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனதும் கிடையாது. நாங்கள் மாட்டுக்கொட்டகைச் சந்தில் எங்கேயோ அவருடைய வீடு இருக்கிறது என்று தெரிந்து வைத்திருந்தாலும் கூட அந்தப் பக்கம் போனதில்லை. அடுத்து சில நாட்களில் தேவனஹள்ளி வேணுகோபால சுவாமிக்குத் தேர்த்திருவிழா நடந்தது. சுற்றுமுற்றுமிருந்த ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்து குவியும் திருவிழா அது. வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கும் அந்தத் தேர்த்திருவிழாவுக்கு என்றே பழுப்புவண்ணம் அடித்துக்கொண்டு ஆயத்தமாகும் தேர். அதில் ஆள் உயரம் இருக்கும் அதன் நாலுகால் பீடத்தில் வேணுகோபால சுவாமியை உட்காரவைக்கும் நாலுகால் மண்டபம், ஒவ்வொரு கம்பத்திலும் பெரியபெரிய வாழைக்குலைகளைக் கட்டி, மேலே மாவிலைகளின் தோரணம் கட்டி வகைவகைப் பூக்களால் அலங்கரிப்பார்கள். நூறு நூற்றைம்பது பேர் இழுக்கும் அந்தத் தேர் காலை பதினொரு மணிக்குப் புறப்பட்டு கோட்டைத்தெரு, கடைத்தெரு, ராமாஞ்சனேய குஸ்தி மையம், போஸ்ட் ஆபிசு ரோடு, தாலுகா ஆபிசு, ரயில்வே ஸ்டேஷன், அமல்தாரர் வீடு இவற்றைச் சுற்றிக்கொண்டு மத்தியானம் ஒன்றரை, இரண்டு மணிக்குப் பின் திரும்பிவரும். வழிநெடுக தேர் நிற்கும் இடங்களிலெல்லாம் பக்தகோடிகள் கொடுக்கும் தேங்காய் வாழைப்பழங்களைப் பெற்றுக்கொண்டு மங்கள ஆரத்தி காட்டுவதற்கு ரெண்டு பூசாரிகள் மண்டபத்தில் இருப்பார்கள், சுவாமிக்குச் சாமரம் வீசிக்கொண்டு இருப்பார்கள், இல்லாவிட்டால் சும்மா கையைக் கட்டிக்கொண்டு நின்றிருப்பார்கள். ரோட்டின் ரெண்டு பக்கமும் நிரம்பியிருக்கும் ஆட்கள் கைகூப்பிக்கொண்டு கோவிந்தா! கோவிந்தா! என்று சத்தம்போடுவார்கள். ஆனால் அவர்களில் சிலருக்கு மண்டபத்தில் கைகட்டி நின்றிருக்கும் பூசாரிகளைக் குறிவைத்து வாழைப்பழம், மரிக்கொழுந்து இவற்றை எறிவதென்றால் என்னவோ அப்படி ஒரு கொண்டாட்டம், நன்கு பழுக்காத வாழைப்பழமும் மரிக்கொழுந்தும் அப்படியே சேர்ந்து வந்து அடிக்கும்போது அந்த பூசாரிகள் வலியில் உடம்பைத் தேய்த்துக்கொண்டு கூடியிருக்கும் ஆட்களை முறைத்துப் பார்ப்பார்கள். போன வருஷமும், அதற்கு முந்தைய வருஷமும் நானும் கூட அப்படி வீசி எறிந்ததுண்டு. ஆனால் நான் எறிந்தது சரியாகப் பட்டிருக்கவில்லை. அந்தத் தேர்த் திருவிழாவுக்கு ஏகப்பட்ட ஊர்களிலிருந்து பூவும் பழமும் வந்துகொண்டிருக்கும். இருந்தாலும் எங்கள் புவனகிரிப் பூக்களுக்கு விசேஷ கிராக்கி இருந்தது மட்டுமல்ல, திருவிழாவில் கபூர் சாயிபுக்கு மாலை போட்டு மரியாதை செய்வதும் உண்டு. இந்தத் தடவை திருவிழாவுக்காக கடந்த இரண்டு நாட்களாக எங்கெங்கிருந்தோ வந்திருந்த மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, சுகந்தராஜா பூக்கள் மட்டுமல்ல, வாழைக்குலை, தேங்காய், வாழைப்பழம், மரிக்கொழுந்து எல்லாமும் கடையில் குவிந்துகிடந்தன.
மேகம் மழை கொட்டுவதுபோலத் திரண்டிருந்த மதியவேளை. சாயிபு ஸ்டூல்மேல் உட்கார்ந்துகொண்டு ஒரு காகிதத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஏழெட்டு சுகந்தராஜா மாலைகளில் மொய்க்க தெருப் பக்கத்திலிருந்து வந்த தேனீக்கள் சில அவருடைய நெற்றியிலும் உரசிக்கொண்டிருந்தன. ‘இந்த முண்டைங்களுக்குப் பூவுன்னா போதும்’ என்று சொல்லிக்கொண்டு அவர் நெற்றியைத் துடைத்துக்கொண்டு ஒருமுறை கைவீச உய்க் என்று கொஞ்சதூரம் பறந்துபோன அவை அங்கேயே டேரா போட ஆரம்பித்தன.
வரும் செவ்வாய்க்கிழமை மகாளய அமாவாசை. அன்று தர்ப்பணம் கொடுக்கவும், கொடுக்கவைக்கவும், எது இல்லாவிட்டாலும் தர்ப்பை கட்டாயம் வேண்டும். சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு வாரம் முன்னரே ஒரு மூட்டை தர்ப்பைக்காகச் சொல்லிவைத்திருந்தார். சென்னப்பா மேற்கு வழியில் மாங்காளம்மா எக்ஸ்பிரசில் வரும் தர்ப்பை மூட்டையை இறக்கிக்கொள்ளப் போயிருந்தான்.
திடீரென்று கொட்டிய மழையில் தார்ப்பாய் மீது இறங்கிய தண்ணீர் கனகாம்பரக் கூடை மீது சொட்டி நிற்கத் தொடங்க, சாயிபு அந்தக் கூடைமீது சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து, மெல்ல மெல்ல நயமாக ஒற்றி எடுத்து, அந்தத்துணி உறிஞ்சிய தண்ணீரைப் பிழியத்தொடங்கினார். மழை கொட்டிக்கொண்டு இருந்தாலும் வெக்கையில் வியர்த்தபடி தூக்கக் கண்களில் மொய்க்கும் கொசுக்களை விரட்டிக்கொண்டு ஏறக்குறைய தூங்கி விழுந்துகொண்டிருந்த நான், யாரோ பலமாகக் கத்துவதாக நினைத்து அதிர்ந்து போய்விட்டேன்.
பூ வாங்குபவர்கள் யாரும் இல்லாமல் கடையே வெறிச்சோடிக் கிடந்தபோது கிழிந்த சட்டையும் தொளதொள பைஜாமாவும் போட்டு, ஹவாய் செருப்பு மாட்டிக்கொண்டு வந்து ஒருவன் உள்ளே கால்வைத்தான். இருபத்தைந்து இருபத்தாறு வயசுப் பையன், தூக்கக் கண்களில் இருந்த நான் அவ்வளவாக கவனிக்காத காரணத்தினால் அவன் எப்படியிருந்தான் என்று இப்போது ஞாபகத்தில் இல்லை. அப்புறம் அவனுக்கும் சாயிபுக்கும் ஏதேதோ பேச்சுவார்த்தை நடந்தது. வந்தவன் கைகளை நன்றாக வீசிக் கொஞ்சம் சத்தமாகவே பேசினான். அவன் பேசியது கன்னடம் இல்லை என்பதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. திடீரென்று கோபித்துக்கொண்டு கிளம்பிவிட்ட அவனைக் கையைப் பிடித்து நிறுத்திய சாயிபு அவன் கையில் கமகமவென்று வாசனை வீசும் அடர்சிவப்பு வண்ண ரோஜாப்பூ கூடை ஒன்றைக் கொடுத்தார். அதனை இரண்டு கைகளாலும் தூக்கிக்கொண்டு கடைக்கு வெளியே போனவன், என்னதான் நினைத்தானோ, மறுபடியும் பின்னால் திரும்பிவந்து சாயிபு காலடியில் அந்தக் கூடையைத் தரையில் கவிழ்த்துவிட்டு, பல வருட நண்பர்கள் தழுவிக் கொள்வதுபோல அவரை இறுக்கமாகக் கட்டிக்கொண்டுவிட்டான். அதே நேரத்தில் கடை வாசலில் தர்ப்பை மூட்டையைச் சுமந்து கொண்டுவந்த சென்னப்பாவைப் பார்த்து அவன் ஓடிப்போகவும், சென்னப்பா அந்த மூட்டையைக் கீழே போட்டுவிட்டு ‘ஐயையோ’ என்று அலறவும், சாயிபு தலை கிறுகிறுத்து வந்தவர்போல பின்பக்கமாக மடாரென்று விழவும் சரியாக இருந்தது. கத்தி ஒன்று சாயிபு வயிற்றிலேயே நட்டுக்கொண்டு நின்றதோடு, அங்கிருந்து குபுகுபுவென்று பொங்கிப்பொங்கி கீழே கொட்டித் தரையில் பாய்ந்துகொண்டிருந்த இரத்தத்தில் ரோஜாக்களும் கலந்துபோய் எது இரத்தம், எது ரோஜா என்று தெரியாதவாறு பழுப்புநிற வாய்க்காலாகிக் கிடந்தது.
அப்புறம்?
வருஷங்கள் ஓடின. காலத்தில் அந்த சம்பவம் பின்தங்கியது என்று தோன்ற வேண்டுமென்றால் தொடர்ந்து ஏதாவது நடக்கவேண்டும் அல்லவா. இருபத்தெட்டு வருஷங்களுக்குப் பிறகு நான் ஒரு கல்யாணத்துக்குப் போகவேண்டி இருந்தது. சாமுண்டேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த அந்தக் கல்யாணத்துக்குப் போனதும் அடடே, நம்முடைய பூக்கடை இருந்ததும் இங்கேதான் இல்லையா என்று எந்த அளவுக்கு ஸ்தம்பித்துப்போனேன் என்றால் இரண்டு விஷயங்கள் சட்டென்று என் மனசில் உடனே காட்சிகளாக தோன்றின.
ஒன்று: வெளியே மழை ஓய்ந்த சூழல். மேகங்களின் ஓரங்களிலிருந்து கீழே குதித்துக்கொண்டிருக்கும் வெய்யில். எங்குதான் இருந்தனவோ? ஒரெயொரு வினாடியில் சாம்பல்நிறத்தில், கழுத்தில் பொன்வண்ண இழைகளைச் சுற்றி இருப்பதுபோலக் காட்சியளிக்கும் புறாக்கள் கூட்டம்கூட்டமாக எப்படி எல்லாத் திசைகளில் இருந்தும் பறந்து வந்து படபடவென்று றெக்கைகளை அடித்துக்கொண்டு கடைமுன்னர் இறங்கிவிட்டன. சில புறாக்கள் ஒன்றன் மேல் மற்றொன்று விழுந்தன என்றுதான் சொல்லவேண்டும். வந்த போலிஸ்காரர்கள் கடையின் உள்ளே வர முடியாமல் உஷ் உஷ் என்று சொல்லிக்கொண்டு, லத்தியை வீசி அவற்றை விரட்ட வேண்டியதாயிற்று.
இரண்டு: ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வாசனை இருக்கிறது, உண்மைதான். ஆனால் வகைவகை மலர்களின் நறுமணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்துபோக எத்தகைய நறுமணம் கமழ்கிறது என்று யார்தான் விவரிப்பார்? விவரிக்க என்னாலும் இயலாது. ஆனால் அத்தகைய ஒரு நறுமணம் அத்தனை வருடமாக எங்குதான் இருந்ததோ, கம்மென்று என் மூக்கில் சட்டென அடித்தது.

படைப்பாளர் :
எஸ். திவாகர், பெங்களூர் மாவட்டம் சோமத்தனஹள்ளியில் பிறந்தார். தேவனஹள்ளியிலும் பெங்களூரிலும் கல்வி. கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் பட்டம். பல்வேறு இதழ்களில் செய்தியாளர், துணையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர்க்குழு ஆலோசகர் உள்ளிட்ட பணிகள். 1989 முதல் 2005 வரை சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தில் பணி. சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தி எழுத்து, கட்டுரை, வாழ்க்கை வரலாற்று எழுத்துகள், மொழிபெயர்ப்பு என பல்வேறு களங்களில் பங்களிப்பவர். காப்ரியல் கார்சியா மார்க்கஸ், தாமஸ்மன் முதலிய புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்களின் 50 சிறுகதைகளைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். அமெரிக்காவின் அய்யோவா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தும் எழுத்தாளர் கூடுகையில் 2002ஆம் ஆண்டில் பங்கேற்றார். இந்திய அரசின் பண்பாட்டுத்துறை சார்பில் சீனியர் ஃபெலோஷிப் நல்கை, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, கர்நாடக சாகித்ய அகாதெமி விருது, குவெம்பு பாஷா பாரதி விருது ஆகியவை இவர் பெற்ற விருதுகளில் முதன்மையானவை. மாஸ்தி என்று அறியப்பெறும் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், சிவராமகரந்த் உள்ளிட்ட முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் பெயர்களில் வழங்கப்பெறும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

மொழிபெயர்ப்பாளர் கு. பத்மநாபன் : ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.
மொழிபெயர்ப்பாளரின் குறிப்புரை:
“இந்தச் சிறுகதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலர்களின் தமிழ்ப் பெயர்களை நான் அறிந்துகொள்ள உதவிய பொள்ளாச்சி ந.க.ம. கலை & அறிவியல் கல்லூரியின் தாவரவியல் துறைப் பேராசிரியர் முனைவர் லோகமாதேவி அவர்களுக்கு என் நன்றி. மொழிபெயர்ப்புப் பணியில் உடனிருந்து உதவிய திராவிடப் பல்கலைக்கழகத் துளுவியல் துறைத்தலைவர் பேராசிரியர் பி.எஸ். சிவகுமார் அவர்களுக்கும் என்னுடைய மாணவர்கள் வ.பனிமலர், ஜெ. காமட்சி காயத்ரி, செ. யமுனா ஆகியோர்க்கும் என் நன்றி.”

Leave a comment