முப்பரிமாணம் : நூல்வழிப்பயணம் 2

அன்பாதவன்

உயிர்வதை, நான் இன்னும் சந்திக்கவே இல்லை, கல்பூக்கும் காலம்

“ஒரு கவிஞர் எழுதும் விஷயங்கள், முன் வைக்கும் கேள்விகள் பெரும்பாலும் அவருடையதாகவே இருக்குமென்றாலும் அப்படியாக மட்டுமே இருக்குமென்று சொல்ல முடியாது ; அதற்கான தேவையுமில்லை, ஆனாலும் ஒரு கவிஞருடைய கவிதையில் கவிதை சொல்லியும் தொடர்புடையவர்களாகவும் மாறிவிடுவதே அந்த பரிவதிர்வே ஒரு கவிதையை நமக்கு நெருங்கியதாக்குகிறது என்று தோன்றுகிறது – என்பது கவிஞர் லதா ராமகிருஷ்ணன் கருத்து. புதுச்சுவை தந்த மூன்று நூல்களின் பறவைப்பார்வையே முப்பரிமாணம்.

பரிமாணம் 1 : உயிர்வதை //இல்லோடு சிவா

 “கவிதை எழுதுவது மட்டுமல்ல; தான் எழுதும் கவிதை யாருக்காக எழுதப்படவேண்டும் என்பதில் தீவிர ஈடுபாடும் தெளிவும் கொண்டவனே கவிஞன். அதே நேரத்தில் கவிதையின் ஊற்றுக்கண் எங்கே உண்டு என்பதுவும் கவிஞனுக்குத் தெரிய வேண்டிய காரணிகளுள் ஒன்று” – எனப் பின்னுரையில் குறிப்பிடும் பேரா. செ.இரவீந்திரன் அவர்களின் சொற்களிலுள்ள சூட்சுமம் உணர்ந்து தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘உயிர்வதை’ நூலை வாசகவீதிக்கு வளைந்தளித்திருக்கிறார் ‘இல்லோடு சிவா’.

 சிவராஜ் எனும் தமிழ் படிக்கும் மாணவனாக, தனது முதல் தொகுப்பான ‘மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’ நூலை உருவாக்கியவர் இன்று கல்லூரியில் தமிழ் பயிற்றுவிப்பராக உயர்ந்திருப்பது வளர்ச்சியன்றி வேறென்ன!

 உயிர்வதை – தொகுப்பில் அகமும் புறமும் கலந்து நெய்த 90 கவிதைகள்; கவிமொழியோ வாசகனுக்கு வாகான எளிமை; உள்ளடக்கங்களில் பல கவிதைகளிலும் புதுமை – என வாசிப்பவரின் கவனம் ஈர்த்திருப்பது இல்லோடு சிவா-வின் வெற்றி.

 யுத்தங்கள் சூழ்ந்த, பெருகிவிட்ட இன்றைய சூழலில் ஒரு தனிமனிதன் என்ன செய்ய இயலும்?  இல்லோடு சிவா வழிகாட்டுகிறார்:

 ‘இங்கிருந்து நீளும் உன் கைகள்
எந்தப் போரை நிறுத்தும்…?
இங்கிருந்து நீளும் உன் கைகள்
யாரின் துயர் துடைக்கும் ?
யோசனையில் ஆழ்வதை விடுத்து – உன்
சிறுநீரில் தத்தளிக்கும்
சிற்றெறும்பைக் காப்பாற்று.” (பக்.80)

கலைஞர்களும், கலைகளும் ஏன் ஆட்சியார்களும், சராசரிக்குடிகளும் அறம் நழுவி வாழ்கையில் என்ன நிகழும்? சிவா-வின் எச்சரிக்கை வரிகளிவை :

‘தலைவன் பொய்த்தான்
தலைவி பொய்த்தாள்
மழை பொய்த்தது’ (ப.92) –

அறம்தான் மழையென உணராதவர் உள்ளவரை வறட்சிதான் நம் வாழ்வு!

 பூக்களைச்சேகரித்து விளையாடும் வனச்சிறுமி வாழ்வியல் சூழலுக்காக பதஞ்சலி கடையொன்றில் வேலைக்கு சேரும மனைவையையும் நிகழ்வையும் கலந்து நெய்த கவிதையொன்று, இழப்பின் வலி சொல்லும் நற்கவிதையாய் மிளிர்கிறது.

 சிறுநீர் உபாதை என்பது இருபாலார்க்கும் பொது என்பினும், ஒரு ஆண் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் ஒதுங்கி உபாதை தனித்துக் கொள்ள உதவும் சமூகச்சூழல், ஒரு பெண்ணின் உபாதைகளைப் புறக்கணிக்கிறது;  உடல் சிறையாகிறது அவளுக்கு! ‘பொண்ணாப் பொறந்தா எல்லாத்தையும் பொறுத்துதான் போவணும்‘- எனும் சனாதனத்தின் மீது பொழிகிறது ப. 34-இல் உள்ள மூதாட்டியின் மூத்திரம்.

‘குறை பாடலைக் கரையும் குயில்
நிறை பாடலைக் கூவும் காகம்
தலையைப் பிய்த்துக்கொள்ளும் வனம்’ (ப.28) –

முரண்படும் இசை/ஓசைகள், தாம் சமகால வாழ்வின் அடையாளங்கள் என்றானபின் வாசகனுக்கு கிடைக்கிறதோர் புத்தொளி! அது இசையா… ஓசையா….?

‘சிதறுண்ட சதைகள்
கூட்டிக் கட்டி எஞ்சிய
கணக்கும் சரி செய்யப்பட்டது
பிதுங்கிய விழி
தனியே செந்நீர் சொரிய
பூட்ஸ் கால்களின் மிதிபடலோடு
அரசு மரியாதை’ (பக். 21)

துயருறு காட்சியொன்றின் வழியே அரச பயங்கர வாதத்தின் கோரமுகம் அகன்ற திசையாய் விரிய, புலப்படாத புதிய செய்திகள் புரிகின்றன வாசகனுக்கு. பொதுவாக புறம் சார்ந்த கவிதைகள் எழுத மனத்திடம் வேண்டும், தைரியத்துணிவு வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக சமூக நடப்புகள் மீதான கவனம் வேண்டும்; சமூக மாற்றம் குறித்த அக்கறை வேண்டும். இல்லோடு சிவா – என்கிற கவிஞனிடம் இவை யாவுமே உள்ளது சிறப்பு! நேசமிக்க காதல் கவிதைகள் பல உண்டு தொகுப்பில் ஆனால் அவை குறித்து தனியே பேசப்பட வேண்டும். அதனால்தான் அகமொதுக்கி புறம் பேச விழைகிறேன்.

 தமிழ்ச் சூழலில் தற்காலக் கவிதைகளின் செல்நெறி – வாசகர்களும், விமர்சகர்களும் அறிந்ததுதான். இல்லோடு சிவா மக்களின் பக்கம் நிற்கிறார் என்பது மறுக்கவியலா உண்மை.

 முடிந்த முடிவுகள் எதனையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை என்பதையும் எல்லா உண்மைகளையும், குறிப்பாக அரசியல் உண்மைகள் மாறும் தன்மை கொண்டவை என்பதையும் மக்கள் புரிந்துகொள்கிற போது, மற்றவர்களை நோக்கிய தங்களை நோக்கிய வஞ்சப்புகழ்ச்சி இரக்கத்துக்கும் இடம் கிடைக்கும். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தேவை இதுதான் இரக்கத்தின் மறு உயிர்ப்பு” – என்பார் மெக்சிகோ கவிஞர் ஆக்டோவியா பாஸ்.

 ‘குளத்தில் சிறுகல்லெறி
எழும்பட்டும்
கடலின் வேலை’ – (பக். 78)

சிவாவின் சமூகச் செய்தி இதுதான்! ஆத்மா நாம் சொன்னது போலவே, இல்லோடு சிவாவும் அடர்ந்த நம்பிக்கையோடு சொல்வதிதுதான்; ‘நாளை நமதே!’

******

 பரிமாணம் 2 : அழிந்த கதை நினைத்துத் துடிக்கும் மனம்//‘நான் இன்னும் சந்திக்கவே இல்லை’

 கடவுளைப் பார்த்ததில்லை! தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் எனச் சொல்லக் கேள்வி! கலியமூர்த்தியும் கடவுள் போலத்தான்! காலையில் மயிலாடுதுறை, மாலையில் நாகையில் பேருரை! மறுநாள் நாகர்கோவில், இராசிபுரமென, திசைகளில் பறக்கும் கவிதை வானம்பாடி, கோ. கலியமூர்த்தி-யின் புதிய கவிதை தொகுப்பு ‘நான் இன்னும் சந்திக்கவே இல்லை’

 விடுதலையை முழங்கும் கவிதைகள் அறிவுசார்ந்தும், தர்க்கப் பூர்வமாகவும் சிந்திக்கவும் செய்யும் என்பதற்கு கலியமூர்த்தி-யின் கவிதைகளே சாட்சி.

 ‘பாகனைத் தான் முதலில்
சூறையாடுகிறது
காடு நினைவு வந்த யானை’ (ப.10)

‘நினைவில் காடுள்ள மிருகம்’ என்று புகழ்பெற்ற மலையாளக் கவிதையின் வரி. ‘சூறையாடுகிறது’ எனும் சொல்லில் தான் உயிர்த்திருக்கிறது. கலிய மூர்த்தியின் அரசியல்.. மேலும் கவிஞன் யார் பக்கம் நிற்கிறான் என்பதும் தெளிந்து விடுகிறது.

 மிருகத்துக்கே நினைவில் காடு இருக்குமாயின், மனிதனுக்கு, அதுவும் ஒரு படைப்பாளிக்கு ஞாபகத் தொகுப்புகள் இருக்காதா….?

 கலிய மூர்த்தி வாக்குமூலம் அளிக்கிறார் :

‘பால்ய நினைவுகள், வாலிபப்பருவத்து வலிகள், பரவசங்கள், பிறகு லௌகீகம் மேலோங்கிய நடு மதியம் என…. அலைகளில், அலைக் கழியும் துரும்பாக மனம்’ அத்தகைய துரும்புகளின் தொடர் பயணம் தான் இத்தொகுப்பு.

‘விஞ்ஞானத்தால் வீழ்த்தப்பட்ட
கடைசித் தலைமுறை உழுகுடி நான்
தேசியத்தால் சூறையாடப்பட்ட
செம்மொழித்தாயின் புதல்வன் நான்…

நீர்மையை நிலங்களைத் தொலைத்த பிறகும்
கதறும் நதியின் குரல் கேளாமல்
போத்திலைத் திறந்து பருகும் உலக அடிமை நான்’ (ப. 32/ 33)

மேற்சொன்ன ‘நான்’களில் குற்றவுணர்வோடு புலம்புவது கவிஞன் மட்டுந்தானா…..?  நீங்கள், நான், நாமில்லையா….?  வாசிப்பவர் மனசாட்சியை உலுக்கும் வரிகள் இவையெனில்,

 ‘கரையும் மணலும் கரையோர நாணற்புதர்களும் துள்ளும் மீன்கள் நெளியும் பாம்புகள் யாவும் சேர்ந்தது தான் நதி.

 நானறிந்த நதியை நீயறிந்து கொள்வதற்குள் உறிஞ்சித் தீர்த்து விட்டது காலம். இப்போது நீ பார்க்கும் நதி சுடுகாடு’ (ப.11)

எனச் சட்டென்று சூழலியல் அக்கறையோடு கவனப்படுத்த ஏலுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓடிக் கொண்டேயிருக்கிறது அனுபவ நதி! சாதாரணன், தனது அனுபவங்களைப் புகைப்படமாய், டைரிக் குறிப்பாய் தனக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள, படைப்பாளியோ தனது அனுபவக் கூழாங்கல்லைச் செழுமை சேர்த்து பிறரோடு படைப்பாகப் பகிர்ந்து கொள்கிறான். அத்தகைய பகிர்தலின் நிகழ்வில் தனிமனித அனுபவம் சமூக மனிதனின் அனுபவமாய் மடை மாறுகிறது.

‘பாலங்களின் மேல் ஓடிக்கொண்டிருந்தன
பாட்டில்களில் கேன்களில்
நதி சுமந்த வாகனங்கள்
கசிந்த விழியை யாரும் பார்க்கும் முன்பு
துடைத்துக் கொண்டது நதி’ (ப. 77)

சூழலியல் குறித்து இன்றைக்கு படைப்புகளில் பேசவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுவிட்டோம்.

 சமீபத்திய சென்னைப் பெருமழையில் (திசம்பர் 2023) நீர்வழியில் தண்ணீர் தடத்தைத் தடை செய்த, நெகிழிக் குப்பைகளை வீசியவர் யார்…? நாம் தாமே! பருவமழையின் மீது பழிபோடுவது எவ்வகை நியாயம்?

 அந்த வலிதான் கலியமூர்த்திக்கு கவிதையாகிறது.

‘பால்யத்து மகிழ்ச்சிகள் பறிபோன தலைமுறை நாம்
பால்யமே பறிபோன தலைமுறை நம் சந்ததிகள்’ (ப.21)

எனும் வரிகளில் பொறுப்பான குடிமகனின்,  குரலைப் பதிவு செய்வது கலியமூர்த்தியின் சிறப்பு.

 “கூர் மழுங்கிய அரிவாளைக் கையிலேந்தி
பசித்த முனியசாமி
மூர்ச்சித்த நடுப்பகலில்
தோப்புகளைத் தின்ற காளவாய்கள் புகைகின்றன’ (ப.81)

ஆயுதம் மறந்தால் ஆண்டவனுக்கும் பரிதாபகதி போலும்!

 ‘கடலின் பெருந்துயரம்
 உப்பாகி விட்டது’ (ப.72)

 ‘திணை திரிந்த எம் நிலத்தில்
 மழை ஒரு அதிசயம்’ (ப. 70)

சூழலியல் அக்கறையுடன் கலிய மூர்த்தி-யின் இத்தொகுப்பை வாசிக்கையில்

 ‘அழிந்த கதை நினைத்தால்
 இப்போதும் மனம் துடிக்கும்’

***

பரிமாணம் 3: கல் பூக்கும் காலம் – சக்தி அருளானந்தம்

 கவிதைகளை வரிகளால் அளவிட இயலாது என்பது நாடுமெல்லாம் அறிந்தது தான்.

 பல வரிகைள் கொண்ட பெருங் கவிதையோ அன்றி வரிகளில் செதுக்கப்படும் குறுங்கவிதைகளோ, அந்தக் கவிதையின் வரிகளில் மின்னல் ஒளிர்கிறதா….? நுண் வரிகள், நுண் சொற்கள் நம்முள் நுழைகிறதா என்பதே முக்கியம்.

 சக்தி அருளானந்தம், தன்  ‘கல் பூக்கும் காலம்’ – தொகுப்பில் அதிக வரி விதிக்கவில்லை.

 சின்னஞ்சிறு வரிகள், ஒரு பொருண்மையாக கூழாங்கல் பின்னணி. இவற்றோடு வாசகனுக்கு சக்தி வழங்குவது புதிய அனுபவம், இஃதோர் புது உலகம்.

 கல்லில் கவி வடிப்பதும் நம் மரபுதான்;  மல்லையும், எல்லோராவும், கழுகு மலையும், எலிபெண்டா குகைகளும், பாதாமி குகைகளும் கல் கவிதைகளின் சில வரிகள்.

 பாறைகளில் ஓவியம் தீட்டுவது பிறிதொரு வகையெனில், அஜந்தாவும், கீழ்வாலையும், செத்தவரையும் கல்லோவியங்களுக்கான சாட்சியங்கள்.

 சக்தி, தன் கவிதைகளுக்காக பெரும் பாறைகளைத் தேடி பிரயத்தனப்படவில்லை. கைப்பிடிக்குள் அடங்கி விடும் கூழாங்கல்லில் குறுஞ்சிற்பங்கள் செதுக்கியிருப்பதே இந்நூலின் சிறப்பு.

 ‘தேய்ந்து தேய்ந்து

 வடிவம் கொண்ட கூழாங்கல்

 மெல்ல மெல்ல வளர்கிறது

 கவிதையாக’ (ப. 32)

நான்கு வரிகளில் ஒரு இயக்கமும், மாற்றத்தின் மாய யதார்த்தமும் ‘நச்’. சென சொல்லப்படுகிறது ஒரு புறமெனில்,

 ‘உள்ளொடுங்கி உயிர்ப்படங்கி

 கிடந்த காலம் முடிந்து

 ஒளிர்ந்ததன் தவம் கை கூட

 இப்போது

 கல் பூக்கும் காலம்’ (ப. 38)

என்னும் வரிகளில் அகலிகையின் குரல் கேட்கிறதல்லவா….! இந்த வரிகள் பெண் குரலாகவும், பெண்ணியக் குரலாகவும் ஒலிப்பது கூழாங்கல்லின் சிறப்பா.. அன்றி சக்தியின் கை வண்ணமா…?

பிறிதொரு கவிதையின் மன்றாடலிது :

 ‘கை விடப் பட்ட கூழாங்கற்களிடம்

 சொல்வதற்கு கதைகளும்

 கொஞ்சம் கண்ணீரும் இருக்கிறது’ (ப. 43)

இந்த வரிகளில் பேசுவது கூழாங்கல் தான் என்று நம்புவர்கள் மிக அப்பாவிகள். சக்திக்கு தன்/தம் வலியை அரசியலை எப்படிச் சொல்ல வேண்டும் என்பது புரிந்திருக்கிறது.

“நீர் எத்தனை முயன்றும்

உட்புக அனுமதியாது

அத்தனை பிடிவாதம்

அந்த கூழாங்கல்லுக்கு’ (ப. 45)

இந்தக் கவிதைத் பேசுவது பெண்ணியமன்றி வேறென்ன?

‘நீர்’ எனும் சொல்லில் அர்த்த அடர்த்தி எனில் ‘பிடிவாதம்’ எனும் சொல்லுக்கு மாற்றாக ‘உறுதி’ என்றிருப்பின் கூழாங்கல்லின் மன்னிக்கவும் கவிதையின் கனம் கூடியிருக்கும்.

‘ஜென்’ மனநிலையில் செதுக்கப்பட்ட ஒரு கவிதை :

‘புத்தரின் வசீகரத்துக்குக்
கொஞ்சமும் குறைவில்லை
அழகிய கூழாங்கல்’ (ப. 52)

சக்திக்கு சிவலிங்கமும் ஒன்று தான் ; செக்கும் ஒன்று தான்!

கல் பறக்குமா….? சக்திக்குண்டு சக்தி!

‘சிறகுகள் இல்லாத வண்ணத்துப் பூச்சிகள்’ (ப. 19)

எனப் புதியப் படிமத்தால் பட்டாம்பூச்சியாய் மாற்றி விடும் மாயம் தெரிந்தவருக்கு

‘உங்களில் பாவம் செய்யாதவர்கள்

அவள் மீது முதலில் கல்லெறியுங்கள்

இயேசு சொன்னதைக் கேட்டு

கீழே விழுந்தது கூழாங்கல்’

எனக்  கூழாங்கல்லுக்குள்ளும் குற்ற உணர்வைக் கடத்த ஏலுகிறது.

“ஒரு பொருள் குறித்து எழுத நேர்கையில் வரும் சிக்கல் என்னவென்றால் ஓர் இருபது கவிதைகள் கூர்மையாய் வெளிப்பட்டு விடும், பிறகு, கவிதைகளைத் தேடி நாம் அலைய நேரிடும்”

எனப் பின்னுரையில் பழ.புகழேந்தி குறிப்பிடுவது உண்மைதான் எனினும். வாமனக் கல்லைக் கொண்டு விஸ்வரூப தரிசனம் காட்டி, வெற்றியும் பெற்றிருக்கிறார் சக்தி அருளானந்தம்

 கூழாங்கற்களுக்கும் தனிச் சுவையுண்டு; வாசியுங்கள்; உணர்வீர்கள்.

One response to “முப்பரிமாணம் : நூல்வழிப்பயணம் 2 அன்பாதவன்”

  1. இல்லோடு சிவா ( SIVARAJ.C ) Avatar
    இல்லோடு சிவா ( SIVARAJ.C )

    http://www.potraamarai.com
    பொற்றாமரை மின் ஆய்விதழில் எழுத்தாளர் கவிஞர் அன்பாதவன் முப்பரிமாணம் என்ற பொருண்மையில் மூன்று கவிதை நூல்கள் பற்றிய மதிப்புரையை வழங்கியுள்ளார். அதில் என்னுடைய கவிதை நூலான உயிர்வதை நூல்குறித்த அற்புதமான பார்வையை வாசிப்பை முன் வைத்துள்ளார். படைப்பாளனின் அகவெளியை கண்டடைந்து அதனை ஆத்மார்த்தமாய் பகிர்ந்துள்ளார். மிகவும் மனதிற்கு நெருக்கமாகவும் நெகிழ்வாகவும் உனர்கின்றேன். உயிர் நேயமும் மனித நேயமும் ஒரு படைப்பாளனின் மேலான அறமாக இருக்க முடியும் என்பதை ஆழமாக உணர்கிறவன் நான்,. அதையே என் எழுத்திலும் படைப்பிலும் வெளிப்படுவதாக கருதுகின்றேன். படைப்பாளனின் சமூக நோக்கை அகவெளியை அற்புதமாக பதிவு செய்துள்ளார். இதே போன்று கோ.கலியமூர்த்தி அவர்களின் நாம் இன்னும் சந்திக்கவே இல்லை என்ற கவிதைத் தொகுப்பு குறித்தும் சக்தி அருளானந்தம் அவர்களின் கல் பூக்கும் காலம் கவிதைத் தொகுப்பு குறித்தும் சிறப்பாக பதிவி செய்துள்ளார். பொற்றாமரை மின் இதழில் அற்புதமான படைப்புகளும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இதழ் குழுவினருக்கும் எழுத்தாளர்களுக்கும் மனம் நிறந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். அனைவரும் வாசிக்கவும்… படைப்பாள்னின் சமூக நோக்கை சூழலியல் குறித்த அறச்சிந்த்னையை ததுவார்த்த மன நிலையை முப்பரிமாணத்தில் கவிஞர் எழுத்தாளர் அன்பாதவன் அழகாக பதிவு செய்துள்ளார். நன்றியும் பேரன்பும் தோழர்.

    பேரன்புடன்

    இல்லோடு சிவா

    Like

Leave a comment

Trending