நா. முத்துக்குமார் பாடல்களில் இலக்கியத் தாக்கம் (காதல் பொருண்மையில்)

அ. இஸ்மாயில்

முன்னுரை

தமிழ் இலக்கியத்தில் காதல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.  பண்டைக்  காலமக்கள் காதலைப் புனிதமாகப் போற்றினர்.  காதல் என்னும் இயக்க உணர்ச்சி கவிஞர்களின் கற்பனை ஊற்றுக் கண்ணைத் திறந்து விடும் தன்மை உடையது.  கண்ணதாசன்  முதல்  நா.முத்துக்குமார்  வரை  காதலை பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். எடுத்துக்காட்டாக சங்க  இலக்கிய வரிகள்  வைரமுத்துவின் திரைப்படப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.  ‘இருவர்’  படத்தில் வரும்  ”நறுமுகையே  நறுமுகையே”  என்ற பாடல் குறுந்தொகையில் வரும்

“யாயும் ஞாயும், யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும், எம்முறைக் கேளிர்?
யானும் நீயும், எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”. 

(செம்புலப்பெயல்நீரார்,குறுந்தொகை-40, குறிஞ்சித் திணை)

என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.

“யாயும் ஞாயும் யாராகியரோ

நெஞ்சு நேர்ந்ததென்ன?

யானும் நீயும் எவ்வழி அறிதும்

உறவு சேர்ந்ததென்ன?

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை

நெஞ்சம் கலந்ததென்ன                                (படம் ; இருவர்)

என நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமோ? எனக் கவலை கொண்டகாதலியைத்  தேற்ற காதலன் பாடியதாக வரும்.

நா முத்துக்குமாரின் காதல் படல்கள்

சங்க இலக்கியகங்களுல் காதலில் பெரும்பாலும் தலைவனும் தலைவியும் தமது உள்ளக் கருத்தை தோழியின் மூலமாக எடுத்துரைப்பதாகவும் பாங்கர் கூட்டம், செவிலியர் தாய் போன்ற உறவாகவும் அமையும். இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் நேருக்கு நேர் சந்தித்து தந்தம் எண்ணங்களை பரிமாறிக் கொள்கின்றனர்.  காதலில் இன்பம் காண்பதும் பிரிவில் வேதனை அடைந்து புலம்புவதும் களவு, காதல், கைக்கிளை, பெருந்திணை, குறியீட்டு, உடன்போக்கு நிகழ்ந்ததாகவும் பாடல் பொருள்களாகின்றன இதில் கவிஞர் நா.முத்துக்கமாரின் காதல் பாடல்கள் எத்தன்மையில் படைத்துள்ளார் என்பதை காணலாம்

சங்க இலக்கியக் குறுந்தொகைப் பாடலின் கருத்தை அடிபடையாக வைத்துக் கொண்டு கவிஞர் நா.முத்துக்குமார் அவரது பாடலில் வரிகளாக்கி தருகின்றார் . அது

“யார் அவனோ
அவனோ யார் அவனோ
அவனோ யார் அவனோ
அவனோ அவனோ
என்ன மறந்தேன்
எதற்கு மறந்தேன் என்னை
கேட்டேனே உன்னை நினைக்க

ஏன் என்னை மறந்தேன்

 நான் என்னை மறந்தேன்

                        கண் திறந்தும் பார்க்க மறந்தேன்

 தாயையும் தந்தையும் தானே மறந்தேன்”   (படம் ; இவன் வேற மாதிரி)

என்று தலைவிக்கு தலைவன் பற்றிய ஒரு தகவலும் தெரியாது ஆனாலும் தலைவன் மீது கொண்ட காதலின் காரணமாக தலைவனின் நினைவில் தன் நிலைமையை விவரிப்பதாக அமைகின்றது.

மேலும்,

எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்காக கவிஞர் எழுதிய

“உன் பேரே தெரியாது.. உன்னை கூப்பிட முடியாது..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..

அந்த பேரை அறியாது.. அட யாரும் இங்கேது..
அதை ஒருமுறை சொன்னாலே.. தூக்கம் வாராது..”

என்ற பாடல் பொருண்மையும் யார் என்று தெரியாத தலைவனின் நினைவில் தலைவி தன் காதலை விவரிப்பதாக அமைக்கப் பெற்றுள்ளது.

குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ                    

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறிஎயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”     – (பா எண்: 2)

என்னும் பாடல் தலைவன் தலைவி கூந்தலில் அமர்ந்துள்ள வண்டை நோக்கிப் பேசுகிறான் “அழகிய சிறகுகளையுடைய வண்டே. நீ அறிந்துள்ள பூக்களுள் இவளது கூந்தல் போலச் சிறந்த நறுமணமுள்ள பூக்களும் உண்டோ? என. இக்குறுந்தொகைப் பாடலின் பொருண்மையினை வைதுக்கொண்டு கவிஞர்

“தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?” (படம்; சேதுபதி)

என தலையனையிடம் தலைவன் தன் தலைவியின் கூந்தலின் மனம் அவள் வைக்கும் தலையனையில் உள்ள பூவில் உள்ளனவா என கேட்பதுபோல் அமைக்கின்றார்.

கவிஞர், சங்க இலக்கியம் மட்டும் அல்லாமல் திருக்குறள், பக்தி  இலக்கியம் முதலியவற்றில் உள்ள வரிகளைத் தனது பாடல்வரிகளில் பயன்படுத்தியுள்ளார்.  உண்மைக்காதலுக்கு சாதி, மதம், தெரிவதில்லை.  உண்மைக் காதலின் புனிதத்தை, தன்மையை,  இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.

“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது”.                                                                                                                           (காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல் – 1092)

என்னும் வள்ளுவ கூற்றினை கவிஞர்

“கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைச் சாரல் வீசுதடி”          (படம்; சேதுபதி)

என்னும் பாடல் வரிகளில் “என்னை அறியாமல் என் மேல் நோக்குகின்ற இவளது அருகிய நோக்கமானது, காம உறவிலே சரிபாகம்  என வள்ளுவ மொழியோடு இனங்கி மழையை காமத்தோடு(காதலோடு) ஒப்பீடு செய்து காட்டுகின்றார்.

மேலும்  வள்ளுவரின்

“குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தால் போல நகும்”.

                                      (காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல் – 1095)

என்ற குறளை வைத்து கவிஞர் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ என்ற படத்திற்காக எழுதிய

“சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே ஹே..!
விழியோடு விழி பேச, விறலொடு விரல் பேச,
அடடா வேறு என்ன பேச….”                      (நீ தானே என் பொன்வசந்தம்’)

என்னும் பாடல் வரிகள் “என்னையே குறிப்பாக கொண்டு பார்த்தல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் மகிழ்வாள் என்று வள்ளுவம் குறிப்பிட கவிஞனோ  தலைவியின் காதல் பார்வை தலைவனுக்கு மகிழ்வினைத் தருகின்றது என மாற்றுகின்றார்.

  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’   பல மேடைகளில் பேச்சாளர்கள் பலர் இந்த ஒரு வரியை மட்டும் கூறிவிட்டு இதற்குப் பொருளும் கூறுவார்கள்; அதாவது உலக மாந்தர்கள் யாவரும் நம்முடைய சகோதரர்களே; எல்லா ஊர்களும் நம்முடையதே என்று அழுத்தம் கொடுத்து சமத்துவம், சகோதரத்துவம் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  கணியன் பூங்குன்றன் என்ற புலவர் கூறிவிட்டார் என்று விளக்கம் கூறுவார்கள். இக்கருத்தினை பாடல் வரிகளாக கவிஞர் நா. முத்துக்குமார் ‘அயன்’ என்னும் திரைப்படத்தில் இவ்வாறு

‘இதுவரை நெஞ்சிலிருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம்வரை போய் வருவோம்

அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும் வா வேற
என்ன வேண்டும் வேண்டும்

என்ற பாடல் மூலமாக கணியன் பூங்குன்றனரின்

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே;”              (புறநானூறு 192) 

என்னும் புறநானூற்றுப் பாடலின் பொருண்மையினை தற்காலத்திற்கு ஏற்றவாறு கருப்பொருள் மாறாது அப்பாடல் வாயிலாக வெளிக்காட்டுகின்றார்.

முடிவுரை

தனக்கென ஒரு கொள்கை, வழிமுறை, இலக்கு ஆகியவற்றோடு பயணித்தவர் கவிஞன் நா. முத்துக்குமார். அவரின் திரைப்பயணத்தில் அவர் படைத்த பாடல்களில் மிகுதியானவை காதல் பாடல்களாகும். அப்பாடல்களில் தமிழ் இலக்கியத்தின் தாக்கம் பெற்ற பாடல்கள் சில வற்றை எடுத்துக் கொண்டு அவரின் படைப்பாக்க திறனை மதிப்பீடு செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்டநூல்கள்

  1. புறநானூறு  தெளிவுரை, புலியூர்க்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை 600014
  2. திருக்குறள் தெளிவுரை, முனிசாமி வீ., வானதி பதிப்பகம் 
  3. பன்முக நோக்கில் குறுந்தொகை, மோகன் இரா., வானதி பதிப்பகம்
  4. ஆயிரம் பாடல்கள், வைரமுத்து, PURE CINEMA BOOKS AND PRINDERS

இணையம்

******* *****  ******  *****  ******  *****  ****  ******  ******  ******  ******  *****  ******   *******

2 responses to “நா. முத்துக்குமார் பாடல்களில் இலக்கியத் தாக்கம் (காதல் பொருண்மையில்)”

  1. சிறப்பாக இருந்தது

    Like

  2. நல்ல தகவல்

    Like

Leave a comment

Trending