மழை – கவிதைகள் இரண்டு
மு. ஶ்ரீதர்
**1**
திடீரென்று வந்து
‘அப்பா இன்னைக்கு மழை வருமா’
என்பான்
என் குழந்தை.
சின்ன புன்முறுவலோடு
‘அவனுக்குப் பிடித்த மழை வரும்’
என்பேன்…
வரப்போகும் மழையில்
மெல்ல…
நனையத் தொடங்குவான்!
அவன் மழைக்குள்
என் குடையை
ஒருபோதும் விரிப்பதில்லை…
**2**
வாசலில் தேங்கிய
மழைநீரை…
என்ன செய்தும்
வெளியேற்ற முடியவில்லை…
ஒரே ஒரு
கப்பல் செய்து
அதைக் கடலாக்கியது
குழந்தை…!

Leave a comment