முபாரக் கவிதைகள்
1
எல்லாச் சுவர்களிலும்
நிரம்பி வழிகிறது
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி
யாருக்காக அழுவது எனத்
தீர்மானிப்பதற்குள்
புதிதாய் முளைத்துவிடுகிறது…ஒரு மரணம்!
2
சிலுவையில்
அறையப்படுவதென்பது
வேறொன்றுமில்லை…
தாங்கமுடியா வலியொன்றை
சுமந்து புன்னகைப்பதுதான்!
3
மழையை நேசிப்பவர்கள்
கரைந்து
கொண்டிருக்கிறார்கள்…
தனக்கான குடிசையை
இழுத்துப் போன புயலில்!
**
4
புன்னகையோடு மட்டும்
பார்த்துப் பழகிய
சிறுவன் இறந்த பிறகு
அதிகமான தைரியம்
தேவைப்படுகிறது…
அவன் விளையாடி மகிழ்ந்த
வீதியைக் கடப்பதற்கு!
5
எனக்கான வலிகளை
கவிதையாக்குகிறேன்
யாரோ ஒருவருக்கு
ஆறுதலாக்குகிறது …
கண்ணுக்குத் தெரியாத காலம்!
**
6
வானம் எழுதிய
கவிதைகள்
இன்னும் சற்று நேரத்தில்
ஒய்ந்து விடும் …
அதன் பிறகு
நாம் காகிதத்தில் கவிதை எழுதலாம்!
7
திடீர் கடவுள்கள்
ஒவ்வொரு நாளும்
உருவாகிக் கொண்டே
இருக்கிறார்கள்…
மனிதர்களைக் காணத்தான்
பல நூறு மைல்கள்
கடக்க வேண்டியதாக இருக்கிறது!
8
நீ
பேசும் மொழிகள் புரியவில்லை…
எனக்கு,
அழகாக இருக்கிறது எனக் கொண்டாடுகிறது
உலகம்,
புரியாமல் இருப்பவையே
அதிகம் கொண்டாடப்படுகின்றன!
**
9
அப்பாவை
நினைவுபடுத்திக் கொண்டே
இருக்கிறது…
அவர் நட்டு வைத்த மரமொன்று,
காலமாகிப் பல காலமான பிறகும்!
**
10
‘மழைன்னா என்னப்பா’
என கேட்ட மகளிடம்
‘வானம் தன் கஷ்டம் தாங்கமுடியாம அழுகுதும்மா’
என சொல்லியிருந்தேன்,
என்றோ ஒரு நாள்
ஓயாத அடைமழை!
வீட்டுக்கும் வாசலுக்குமென நடந்து கொண்டிருந்தவள்,
‘என்னப்பா மழைக்கு கஷ்டம்
அதிகமாயிடுச்சாப்பா
ரொம்ப அழுகுதே,
அதுக்கு ஆறுதல் சொல்லி அழுகைய நிறுத்துங்கப்பா
பாவமா இருக்குது’ என சொல்லிக்கொண்டிருக்கிறாள்… சோகமான முகத்துடன் !
11
படிக்கின்றோமோ இல்லையோ
ஒரு விருப்பக் குறியீடோடு கடந்து கொண்டிருக்கிறோம்…
ஒவ்வொரு கவிதையையும்,
இறந்தவனை RIP என்ற
ஒற்றை வார்த்தையில் கடப்பதைப் போல்!
**
12
மழையோ புயலோ
தவறாமல் வந்து விடுகிறது…
அம்மாவைப் பார்க்க
ஊருக்குப் போகும்போதெல்லாம்,
தேவதையைப் பார்க்கப் போவதென்பது
அத்துணை சுலபமில்லை!
மு.முபாரக்
கெ.கல்லுப்பட்டி
தேனி மாவட்டம்
8148395936

Leave a reply to அகமது கனி Cancel reply