பாட்டொன்று கேட்டேன் : 11
நிழலும் மிதிக்கும் கொடுந் துயர்க் காலம்
ஜி.சிவகுமார்

தாய் அரசாண்ட காலமென்று ஒன்றிருந்தது.குடும்பத்தின் உச்சியில் பெண்கள் அமர்ந்திருந்த காலம் அது.வேட்டையாடுவதிலிருந்து உடல் உறவு வரை பெண் தலைமையேற்று ஆதிக்கம் செலுத்திய காலம்.விவசாயம் மனிதனின் முக்கியத் தொழிலாக மாறிய காலத்திலிருந்துதான் பெண் என்பவள் ஒரு உடைமைப் பொருளாக மாற்றப்பட்டு வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
குடும்பம் என்கிற அமைப்பு முழுக்க முழுக்க ஆணாதிக்கமான ஒன்றுதான்.அது நீண்ட காலமாக நிலைத்திருக்கக் காரணம் பெண்கள்,இதுதான் தங்கள் தலைவிதி என்று சுய சமாதானம் செய்து கொண்டார்கள். கல்லானாலும் கணவன்,புல்லானாலும் புருஷன். அடிக்கிற கைதான் அணைக்கும்இப்படிப்பட்ட அரு மொழிகள் இயல்பாயிருந்த காலம்.கணவனுக்குப் பின் உறங்கி.முன் எழுவதை பல பெண்களே பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை.வேலைக்குப் போய் சம்பாதிக்கவில்லை.
பெண்ணுக்கான இயல்பான பாலியல் உரிமைகளை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.கற்பு என்பது பெண்பால் வார்த்தையாகத்தான் இருந்தது.ஒரு பெண், வரையறுக்கப்பட்டிருந்த கோட்டைத் தாண்டினால் அவளைக் கேவலப்படுத்திய மனிதர்கள்,ஆம்பளைன்னா நாலு சேத்துல கால வைக்கத்தான் செய்வான்.காலைக் கழுவிட்டு போகத்தான் செய்வான்னு இயல்பாகக் கடந்து சென்றார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், தங்களின் உரிமைகளையும்,பலத்தையும் அறியாமல் ஒரு கோவில் யானையைப் போல் குடும்பத்திற்குள் கட்டுண்டிருந்தார்கள்.
அது அந்தக் காலம்.இப்போது பெண்கள்,கல்வியறிவு பெற்று வேலைகளுக்குச் சென்று பொருளாதார சுதந்திரம் அடைந்து,வெளி உலக அனுபவங்கள் பெற்ற பின்,தங்களது நியாயமான கேள்விகளால்,குடும்ப அமைப்பின் அஸ்திவாரத்தை அசைத்துக் கொண்டிருப்பதும்,பல்வேறு காரணங்களால்,ஆண்கள் அதை ஒத்துக் கொள்வதும் இந்தக் காலம்.
நாம் பார்க்கப் போகிற காலம்,இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை.1970களில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான நிகழ்ந்த மனப் போராட்டத்தை வார்த்தைகளில் வடித்திருப்பார் கவியரசர்.
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற சூரியகாந்தி திரைப்படத்தின் பாடல்தான் அது.
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு,ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்கிற தன் வரலாற்றுப் பாடலைப் போல,வெகு சில பாடல் காட்சிகளில்தான் கண்ணதாசன் திரையில் தோன்றித் தானே பாடுவது போல் நடித்திருக்கிறார்.இந்தப் பாடலிலும் அவரது உடல் அசைவுகள் அத்தனை இயல்பாக இருக்கின்றன.
ஒரு திரைப்பாடல் எப்படித் துவங்குகிறது பாருங்கள்.பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா?
காஷ்யப முனிவரின் இரு மனைவிகளில் ஒருவரான வினதாவின் மகனான கருடனுக்கும்,மற்றொரு மனைவியான காத்ருவின் பிள்ளைகளான பாம்புகளுக்கும் ஏற்பட்ட பகையை புராணங்கள் விவரிக்கின்றன.அது ஒரு புறம் இருக்க,கருடனைக் கண்டால் அச்சத்தில் நெளிந்தோடுகிற பாம்பு,கருடனைப் பார்த்து என்ன மாமு,சவுக்யமான்னு கேட்பது எத்தனை ஆச்சர்யம்.காரணம்,அது இருக்குமிடம் சர்வ வல்லமை படைத்த பரமசிவனின் கழுத்தில்.என்ன அழகான கற்பனை கவிஞருக்கு.அதிகாரம் படைத்தவரின் அருகிலிருக்கும் ஆணவத்தில் ஆடும் ஏதாவதொரு மனிதன் உடனடியாக உங்கள் நினைவுக்கு வருகிறார்தானே?
சிரித்தபடி கருடன் சொல்லும் பதிலைக் கவனியுங்கள்.
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே.
பரமசிவன் கழுத்து உனக்கு எவ்வளவு காலம் சாஸ்வதமோ,அவ்வளவு காலத்திற்கு உன் சவுக்யமும் நீடித்திருக்கும் என்பது எத்தனை அழகான பதில்.
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
ஒரு மனிதன் தன்னிலை இழக்கும் போது அவனை அதுவரை கொண்டாடிய மனிதர்கள் எவ்வளவு கேவலப்படுத்துவார்கள் என்கிற கருத்தைச் சொல்லும் இந்த வரிகளை,மதிக்கும்,மிதிக்கும் என்று எந்தக் கவிஞராலும் எழுதி விட முடியும்.ஆனால்,நடக்கையில்,நம் காலடியில் கிடக்கிற நிழலும் கூட மிதிக்கும் என்று எழுத கண்ணதாசனால் மட்டும்தான் முடியும்.
இந்த வரிகளை மேடையில் கண்ணதாசன் பாடும் போது மேடையின் கீழே மனக் கசப்பால் கிட்டத்தட்டப் பிரிந்து விட்ட கணவனும்,மனைவியும் தற்செயலாக அருகருகே இருக்கைகளில் அமர்ந்திருக்கிறார்கள்.இந்த வரிகள் தனக்கெனவே எழுதப்பட்டதாக கணவன் ஆமோதிக்கிறான்.
மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று
மானமுள்ள மனிதனுக்கு
அவ்வை சொன்னது
என்ற வரிகள் நம் அனைவருக்குமானதே என்றாலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள கணவன் அந்த வரிகளோடு தன்னை மிக நெருக்கமாகப் பொருத்திக் கொள்கிறான்.
கணவன்,மனைவி உறவென்பது பரஸ்பர புரிதல்,விட்டுக் கொடுத்தல்,அன்புப் பரிமாற்றம் இவற்றால் ஆனது.இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் வரும் போது இருவரில் ஒருவர் அமைதியாக இருந்து,அந்த சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்த பின் மற்றவரிடம் பொறுமையாகப் பேசினாலே பிரச்சனைகள் எளிதாகத் தீர்ந்து விடும்.இதற்கு மாறாக இருவரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சிக்கி வார்த்தைகளை இறைக்கும் போதுதான் சாதாரண பிரச்சனை பூதாகரமாகி வெடிக்கிறது.
இந்த வரிகளையும் பாருங்கள்.
வண்டி ஓடச் சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும்.
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்?
கலைஞர் கருணாநிதி வாழ்க்கையை,பாடம் வழங்குகிற ஓடம் என்று எழுதினார். கண்ணதாசன்,வாழ்க்கையை வண்டி என்கிறார். கணவன், மனைவி இருவரிடையே உயர்வு தாழ்வு இருந்தால் வாழ்க்கை எப்படி இனிமையாக இருக்கும் என்று அவர் எழுப்புகிற கேள்வியில் எத்தனை ஆழம்.
எளிமையான குடும்பம்.குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்குச் சென்ற மனைவி கணவனை விட அதிகமாகச் சம்பாதிக்கிறாள்.கணவனின் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதால் கணவனின் குடும்பமும் அவளைக் கொண்டாடுகிறது.ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் கணவனின் மன அழுத்தத்தை இது கூடுதலாக்குகிறது.துயரில் உழலும் கணவனின் மனக் குமுறல்களாக வரும் இந்த வரிகளைப் பாருங்கள்.
நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே
நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன்
நீ வளர்ந்ததாலே
இந்த வரிகளைக் கேட்கிற,பாடலைப் பார்க்கிற யாரும் ஒரு நிமிடம் தங்கள் வாழ்வையும் நினைத்துப் பார்த்து ஏக்கப் பெருமூச்செரியவோ, மகிழவோ செய்வார்கள்தானே?
அருகருகே அமர்ந்திருக்கும் அண்ணலும் நோக்குகிறார்.அவளும் நோக்குகிறாள்.ஆனால் இருவரும் இணைந்து நோக்குவதில்லை. கசந்த தம்பதியினராக முத்துராமனும், ஜெயலலிதாவும் சிறப்பாகச் செய்திருப்பார்கள்.
மேடைக் கச்சேரியில் கண்ணதாசன் பாடுவதான காட்சி என்பதால் இசைக் குழுவினரை அவர்கள் இசைக் கருவிகள் இசைப்பதாகக் காட்சிப்படுத்தி மக்களுக்கு ஒரு நல் அனுபவத்தைத் தந்திருக்கிறார்கள். சில காட்சிகளில் பாடல் காட்சியில் இசைக்கப்படாத இசைக் கருவிகளையும் வாசிப்பதும் பார்ப்பதற்கு வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
அது அவ்வை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
அது சிறுமை என்பது
அதில் அர்த்தம் உள்ளது
இது கணவன் சொன்னது
இதில் அர்த்தம் உள்ளது
இப்படி.ஒவ்வொரு சரணத்தையும் கண்ணதாசன் முடிப்பதைக் கவனித்தீர்களா?அதில் அர்த்தம் உள்ளது.
இப்படி உணர்ச்சிகள் கொந்தளிக்கும் எத்தனை எத்தனையோ பாடல்களை கண்ணதாசன் நமக்குத் தந்து சென்றிருக்கிறார்.கண்ணனை நினைக்காத நாளில்லையே என்று கண்ணதாசன் பாடினார்.நாம் இப்படிப் பாடுகிறோம்.கண்ணதாசனை நினைக்காத நாளில்லையே.

Leave a reply to Muruganandam Gangadharan Cancel reply