கவனக்குவிப்பு என்னும் மனத்தசை
முனைவர் கு.பத்மநாபன்,
இணைப்பேராசிரியர்,
தழிழ்மொழி மற்றும் மொழிப்பெயர்ப்பியல் துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம்.


இணையத்தில் உலவிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் தட்டுப்பட்ட deep work என்ற சொல் ஒரு கவிதை போல மனதில் மின்னியது. தொடர்ந்து தேட ஜார்ஜியா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் Cal Newport என்பவர் Deep work rules for focus in the destructed world என்ற புத்தகம் எழுதியிருப்பதாகத் தெரியவந்தது. புத்தகம் தமிழிலும் கிடைக்கிறது.
கால் நியூபோர்ட் இன்றைய அறிவுசார் பணிச் சமூகம் சந்திக்கும் உலகளாவிய சிக்கல் ஒன்றை ஆராய்கிறார். நாம் எல்லோரும் ஏதோ ஒரு வேலையில் முனைப்பாக இருப்பது போல் தான் தெரிகிறது. ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்குள் நிறைவு தோன்றுவதில்லை. இது ஏன்? இந்தக் கேள்விதான் புத்தகத்தின் அடி நாதம்.
நூலாசிரியர் நாம் மேற்கொள்ளும் பணிகளை Shallow work, Deep work என இரண்டாக வகைப்படுத்துகிறார். இவற்றை நாம் முக்கியமற்ற பணி, முக்கியமான பணி என்று எளிமைப்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக முக்கியமற்ற பணிகள் நம் மீது சுமத்தப்படுகின்றன. முக்கியமான பணிகளைச் செய்ய நமது மனம் தொடர்ந்து ஆசைப்படுகிறது. ஆனால் முக்கியமற்ற பணிகள் முக்கியமான பணிகளின் நேரத்தை விழுங்கி விடுகின்றன. விளைவாக நமக்குள் ஏமாற்றமும் நிராசையும் தொடர்ந்து காணப்படுகிறது. இதுதான் சிக்கல். இந்தச் சிக்கலை எப்படி எதிர்கொள்வது? என்பதைப் புத்தகம் விளக்குகிறது.
கால் நியூபோர்ட் எழுதிய இந்தப் புத்தகம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது.
முதல் பகுதி முக்கியமான சிறந்த பணி ஒன்றை மேற்கொள்வதன் இன்றியமையாமையை வற்புறுத்துகிறது.
அமெரிக்காவில் வாள் ஒன்றை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யும் ஒருவரை இந்தப் புத்தகத்தில் காணலாம். இருபத்தோராம் நூற்றாண்டில் யாரும் வாளைப் பயன்படுத்திச் சண்டையிடப் போடுவதில்லை. இது அதனைச் செய்பவருக்கும் தெரியும். என்றாலும், அவர் அது பற்றிக் கவலைப்படுவதில்லை. அவருக்கு அந்தப் பணியில் மகிழ்வும் நிறைவும் கிடைக்கின்றன. அதற்காகவே அவர் அதனை மேற்கொள்கிறார். நாமும் நமக்கு முக்கியமானதாகத் தோன்றும் சிறந்த பணியில் பயன் மதிப்பு கருதாமல் ஈடுபட வேண்டும் என்று நூலின் முதல் பகுதி விளக்குகிறது.
இதற்குப் பெரும்பாலும் தடையாக இருப்பது கவனச் சிதறல் தான். ஒரு பல்பொருள் அங்காடியில் பணம் செலுத்த வரிசையில் நின்று கொண்டிருக்கிறோம். ஐந்து நிமிடம் காத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குள் நாம் நம்முடைய அலைபேசியை எடுத்து சமூக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம். இந்தப் பழக்கம் நமக்கு இருந்தால் நாம் கவனச் சிதறல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று கால் நியூபோர்ட் கூறுகிறார். இந்தக் கவனச் சிதறலிலிருந்து எப்படி வெளிவருவது? கவனக்குவிப்பின் உதவியால் நாம் விரும்பும் முக்கியமான பணியில் தொடர்ந்து எப்படி நம்மை மறந்து ஈடுபடுவது என்று தெரிந்து கொள்ள நூலின் இரண்டாவது பகுதியை வாசிக்க வேண்டும்.
இரண்டாவது பகுதி செயல்முறைப் பகுதி. நமக்கான முதன்மைப் பணியை எவ்வாறு மேற்கொள்வது என்று இந்தப் பகுதியில் நூலாசிரியர் விளக்குகிறார்.
ஒரு சிறந்த பணியை மேற்கொள்ள நமக்கு உதவியாக இருக்கும் அணுகுமுறை எது என்று நாம் முதலில் கண்டறிய வேண்டும். தங்கள் முதன்மையான பணியில் மூழ்கி இருப்பவர்களை கால் நியூபோர்ட் பலவாறாக விளக்குகிறார்.
துறவிகளைப் போல உலகத் தொடர்புகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு முதன்மைப் பணியில் மட்டும் ஈடுபடுபவர்கள் முதல் வகை.
நாடாறு மாதம் காடாறு மாதம் என்பது போல் ஒரு குறிப்பிட்ட காலம் முதன்மைப்பணி மற்ற நேரங்களில் முக்கியமற்ற வேலைகள் என்று இருப்பவர்கள் இரண்டாவது வகை
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தங்கள் முதன்மைப் பணியில் மூழ்குபவர்கள் மூன்றாம் வகை
நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்தி அறிக்கைகள் எழுதும் பத்திரிக்கையாளன் போல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் தங்கள் கனவுத் திட்டத்தில் மூழ்கிடும் நான்காம் வகை.
ஒவ்வொரு வகையிலும் அதற்குரிய நன்மையும் உண்டு, சவால்களும் உண்டு.
அடுத்து நாம் முதன்மைப் பணியை மேற்கொள்ளத் துணைபுரியும் வேறு சில ஆலோசனைகள் புத்தகத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
• முதன்மைப் பணியில் விரும்பி ஈடுபடும்போது பணி செய்யும் இடத்தை அடிக்கடி மாற்ற வேண்டாம்.
• பணி செய்யும் நேரத்தை பெரும்பாலும் மாற்ற வேண்டாம்.
• ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை முதன்மைப் பணியில் மூழ்குவது நல்லது.
• ஒருமுறை பணி செய்ய அமரும்போது அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்ன விளைவுகளை எதிர்பார்க்கிறோம் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். அந்த விளைவை அடையும் வரை பணியை நிறுத்த வேண்டாம்.
• பணியில் வரும் இடையூறுகளை முதலிலேயே திட்டமிட்டு எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.
• நமது முதன்மையான பணியை அதில் நாம் மூழ்குவதை ஒரு கொண்டாட்டமாக அமைத்துக் கொள்ளலாம். பணி நேரம் முடிந்த பிறகு ஓய்வையும் கொண்டாட வேண்டும். பணி செய்யும் நேரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஓய்வு நேரமும் முக்கியம்.
இப்படிப்பட்ட ஆலோசனைகள் நூலெங்கும் விரவியுள்ளன. எத்தனையோ புத்தகங்கள். இந்தப் புத்தகம் படிக்க இதன் ஆசிரியர் மீது மட்டும் நம்பிக்கைவர புத்தகத்தில் அமைந்த சில வரிகள் காரணமாக இருக்கின்றன.
“2014 வரை என்னிடம் அலைபேசி இல்லை. எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது தான் என் மனைவியின் வற்புறுத்தலால் நான் அலைபேசி வாங்கிக் கொண்டேன்.” இப்படிச் சொல்பவர் ஒரு பேராசிரியர். அவர் பணிபுரிவது கணினி அறிவியல் துறையில்.
Google scholar என்ற தேடுபொறி நமது அறிவுலகப் பங்களிப்பை மதிப்பிடுகிறது. இந்த உலகில் நம்முடைய உச்சபட்சப் பங்களிப்புக்கு 40 மதிப்பெண்கள் கிடைக்கும். Call new port இந்த புத்தகம் எழுதும்போது 21 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். இந்தச் செய்திகளெல்லாம் நூலில் உள்ளன. நூலாசிரியரின் இத்தகைய வரிகள் அவர் மீதான ஒரு நம்பகத்தன்மையை எனக்குள் ஏற்படுத்தின. அதனால்தான் நான் இந்த நூலைப் படித்து இதில் உள்ள ஆலோசனைகளைப் பரிசீலிக்க விரும்பினேன்.
(Deep work என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை எங்கோ பார்த்திருப்பதாக மனம் அரற்றிக் கொண்டே இருந்தது. யோசித்தால் எதுவும் தோன்றவில்லை. எதிர்பாராத தருணத்தில் சட்டென்று மின்னல் வெட்டியது. உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் திருக்குறளில் உள்ள ஆள்வினையுடைமை என்ற சொல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? )
உடலின் குறிப்பிட்ட தசைப்பகுதியை நாம் பயிற்சி செய்து உறுதிப்படுத்துவது போல கவனம் என்ற மனத்தசையைப் பயிற்சி செய்து உறுதிப்படுத்த முடியும் என்று உறுதியாகச் சொல்கிறது Cal Newport எழுதியுள்ள Deep work rules for focus in the destructed world என்ற புத்தகம். இந்தப் புத்தகம் குமாரசாமி என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நன்றாகவே வந்திருக்கிறது. மொழிபெயர்ப்பில் ஆங்காங்கிருக்கும் குறைபாடுகளை விவாதிக்க இந்த அறிமுகக் கட்டுரையில் இடமில்லை.
நண்பர்களே இந்தப் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது.
துணைநூற்பட்டியல்
- Deep Work:Rules for Focused Success in a Distracted World, Call Newport, Kindle Edition. 2016.
- கருமமே கண்ணாக! கவனச்சிதறலுக்கு உள்ளான ஓர் உலகில் ஒருமித்த கவனத்துடன் வெற்றி பெறுவதற்கான விதிமுறைகள், தமிழ் PSV குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2021.
- திருக்குறள் (பரிமேலழகர் உரை), திருவள்ளுவர், கவிதா வெளியீடு, 2013.

Leave a reply to Dr.S.Fathima Cancel reply