நூற்றொடர்

உலகத்தமிழாராய்ச்சிநிறுவன வெளியீடு, 1996

தமிழ்க் காட்சி நெறியியல் – பகுதி 1 – முன்னுரை

பேராசிரியர் நிர்மல் செல்வமணி

மெய்ப்பொருளியலைப் (philosophy) பண்டைத் தமிழர் ஆசறு காட்சி, மாசறு காட்சி, ஒத்த காட்சி என்று பலவகையாகக் குறித்தனர். ‘ஆசறு’, ‘மாசறு’, ‘ஒத்த’ போன்ற அடைகள் இன்றி இந்நூலில் ‘காட்சியியல்’ என்ற சொல்லே பயன்படுத்தப்படும். அவ்வாறு குறிக்கப்பெறும் இடங்களில் எல்லாம் ‘மெய்ப்பொருளியல்’ என்றே அச்சொல் பொருள் உணர்த்தும். இச்சொல் தமிழில் மிகத் தொன்மை வாய்ந்தது; தொல்காப்பியக் காலத்திற்கு முன்னரேயே தமிழில் வழக்குப் பெற்றது. திருக்குறள் சொல்லான ‘மெய்ப்பொருள்’ என்பதைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாகையால் இச்சொல் மீண்டும் வழக்கிற்கு வருதல் வேண்டும். நெடுங்காலம் வழக்கில் இல்லாத நல்லதொரு துறைச்சொல்லை இனங்கண்டு, பொருள் உணர்த்தித் தனியொரு துறை வகுப்பதே இந்நூலின் நோக்கம்.

தமிழ்க் காட்சியியலைப் (மெய்ப்பொருளியலைப்) பற்றிப் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. இவை, மேலை நாட்டு மெய்ப்பொருளியல் சிந்தனையைச் சார்ந்தவை, சாராதவை என இரு வகைப்படும். தமிழ்க் காட்சியியலை மானுடவாதம், பொருள்முதல் வாதம் (மார்க்சியம்) போன்ற கோட்பாடுகளின் துணைகொண்டு விளக்கமுற்படுபவை முதல்வகையன எனலாம். சமயக்கோட்பாடாகக் (குறிப்பாக, சைவமாகக்) காண்பவை பின்வகையன எனலாம்.

மேலைநாட்டுக் கோட்பாடுகளைத் தமிழ் மரபிற் புகுத்துதல் எவ்வாறு பொருந்தாதோ, அவ்வாறே, ஒரு குறித்த சமயத்தின் கொள்கைகளைத் தமிழ்க் காட்சியியல் என்பதும் பொருந்தாததே. தமிழ் மரபினை நாம் அறிந்த அளவில் மிகச் சிறந்த முறையில் பேணிவந்த திணைக் குமுகாயங்களில் ஐவேறு வகைச் சமயங்கள் நிலவின. அவற்றுள் ஒரு குறித்த சமயக்கோட்பாட்டினைத் தமிழ்க் காட்சியியல் என்பது நெறியாகாது. மேலும், காட்சியியலைச் சமயம் என்பதும் ஏற்புடையதாகாது.

தமிழ் மரபுவழித் தமிழ்க் காட்சியியலை அமைப்பதேன்?
இதன் விடையைச் சற்று விளக்கமாகக் கூறுதல் வேண்டும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே தன்மையுடையதாய் இயற்கை (nature; நிலம், உயிரினங்கள்) அமையவில்லை. மலை, புல்வெளி, ஆறு, சுரம், கடற்கரை என்ற வேறுபட்ட நிலவகைகளுக்கு ஏற்றவாறு ஆங்காங்கே உயிரினங்கள் வேறுபடுகின்றன. குறித்த ஒரு நிலப்பகுதியாம் மலையிற் கூட ஒரே வகையான மரமோ, பறவையோ, விலங்கோ இருத்தல் இயலாது. இயற்கையாக அங்குக் காணப்படும் பல்லினக் கூட்டு வாழ்க்கையே இயற்கை விதி. இயற்கையும், மனித ஆக்கமான செயற்கையும் (culture) ஒன்றோடு ஒன்று மிக நெருங்கிய உறவின ஆதலால், இவ்விதி செயற்கைக்கும் பொருந்துவதே.

மொழி, அறிவியல் (விஞ்ஞானம்), கலை, சமயம், காட்சி என்ற செயற்கைக் கூறுபாடுகள் எல்லாம் இயற்கைக் கூறுபாடுகளான நிலம், உயிரினங்கள் என்பவற்றால் மாற்றம் அடைவன. இதனாலேயே, மலைவாழ் மக்களின் பண்பாடு கடற்கரையோரின் பண்பாட்டினின்று வேறுபட்டுள்ளது. இவ்வேறுபாடு இயல்பானதே.

பண்பாட்டு வேறுபாட்டை மதியாதார் தன்னலத்திற்காகவோ அல்லது நிலைபேறற்ற வசதி இன்பம் கருதியோ பிற நிலத்தாரை அடிமைப்படுத்துகின்றார்; அயற்பண்பாட்டைப் புகுத்துகின்றார். இனி, அயற்பண்பாட்டைத் தாமாக விரும்பித் தழுவுவாரும் உளர். அவ்வாறு தழுவுதல் தமது பண்பாட்டையே சீர்குலைத்தற்கும் ஏதுவாகும்.

ஒரு குறித்த நிலத்தவர் தம் பண்பாட்டைக் கைவிடுவதற்கோ, முற்றிலுமாக மாற்றுதற்கோ பிறிதொரு பண்பாடு ஏதுவாக இருப்பின், ஆங்கு நிகழ்வது அழிவேயன்றி வேறன்று. மேற்சொன்ன மாற்றத்தைப் பண்பாட்டுக் கடன்கோடல் எனவியலாது. ஏனெனில், கடனால் தம் பண்பாடு ஆக்கமும் வளமும் பெறுமே ஒழிய மடியாது.

வேறுபாடே வளமை, ஒன்றுபாடோ வறுமை என்ற வளமை விதி திணையுலக விதி, இதனை அறியார் போலிப் பொதுமை பேசுவார். அதாவது, மனிதன் விலங்குகள் போல் அல்லாமல் இயற்கையைக் கடந்து நிற்கும் இயல்பு உடையவன் என்றும், அவ்வியல்பே அவனை விலங்கினின்று வேறுபடுத்துவது என்றும், அதனால் அவன் ஓரிடத்திற்கும், ஒரு நாட்டிற்கும். ஒரு பண்பாட்டிற்கும் கட்டுப்படுதல் பொருந்தாது என்றும் அவன் ஓர் உலகக் குடிமகன் என்றும் அனைத்துலகும் அவனது வீடு என்றும் பலர் இன்று கருத்துரைப்பர். இக்கருத்து தோன்றச் சில காரணங்கள்: ஒன்று, ‘எஞ்சா மண் நசை’; பிறன் மனை கவர்தல் போன்று, பிறன் பண்பாடு கவர்தல் எனல் தகும். மற்றொன்று, நனவினைக் காட்டிலும் கனவிற்கு அதிகச் சிறப்புத் தருதல். இன்னுமொன்று, குமுகாயத்தினையும், அதன் மரபினையும் காட்டிலும் தனி மனிதன் முக்கியமானவன் என்ற தன்னலக் கருத்து.

பண்பாட்டு வேறுபாடுகளே இயல்பானவை ஆதலால், உலகத்தார் அனைவரும் ஒரே மொழியைப் (எ-டு.: எசு பராண்டோ) பேசவேண்டும் என்பதோ, ஒரு பண்பாட்டினரின் ‘அறிவியலை’யே (எ.டு.: மேலையரின் ‘அறிவியலை’யே, அதாவது விஞ்ஞானத்தையே) பயன்கொள்ளவேண்டும் என்பதோ, ஒரு கவிதைக் கோட்பாட்டையே (எ.டு.: புதுக்கவிதைக் கோட் பாட்டையே) அல்லது ஓர் இசைவகையையே (எ.டு.: மேலை இசையையே) பயன்கொள்ளவேண்டும் என்பதோ. ஒரு சமயத்தையே (எ.டு.: கிருத்துவத்தையே. ஏனெனில் “அதுவே மெய்ச் சமயம்” என்பதால்) தழுவ வேண்டும் என்பதோ, ஒரு பண்பாட்டினரின் (எ.டு.: கிரேக்கரின்) ‘காட்சியியலையே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதோ முறையன்று. அது. ஆதிக்க அடக்குமுறை.

ஒரு பண்பாட்டிற்கு ஊறு நேராத வண்ணம் பிறிதொரு பண்பாட்டைப் பயன் கொள்ளுதல் சாலும் எனினும், நடைமுறையில் உலகின் பல்வேறு நாடுகளில் அயற்பண்பாடே ஆட்சியேறிய நிலையுள்ளது.

பண்பாடுகளின் மரபினை ஏன் போற்றவேண்டும்? இவற்றை வல்லார் சிலர் தோற்றுவிக்க இயலாதோ? இத்தகைய நோக்கத்துடன் உலகத்தார் அனைவருக்கும் பொதுவான பண்பாட்டுக் கூறுகளாம் மொழி, சமயம் போன்றவற்றைப் படைக்கவும் அறிஞர் சிலர் முயன்றுள்ளனர் எசுபராண்டோ என்ற மொழியும், காட்சியர் இராதாகிருட்டிணன் கனவு கண்ட பொதுச் சமயமும் (universal religion) மரபுப் பேறு உடையன அல்லவாதலால் அவை எம்மண்ணிலும் காலுன்றவில்லை.

இனி. மரபான பிறநாட்டுப் பண்பாடும் ஒரு நாட்டினருக்கு உகந்ததன்று. எடுத்துக்காட்டாக, கிரேக்கக் காட்சியியலை உலகப் பொதுமை வாய்ந்தது போலக் கருதி ஆங்கிலேயரும். ஐரோப்பியரும் தத்தம் காட்சியியலின் வரலாற்று மூலம் என்று காட்டுகின்றனர். இது, தத்தம் நாடுகளில் உள்ள மரபு வழிக் குடிகளின் பண்பாட்டை மறைப்பதற்கும், புறக்கணிப்பதற்கும் ஆளும் குலத்தவர் கையாளுகின்ற ஓர் உத்தி எனலாம். அவ்வாறே, தமிழ்க் காட்சியியலிலும் தன் அடிப்படைகளைக் கிரேக்கக் காட்சியியலினின்று பெறுவது ஏற்புடையதன்று.

மேலும் தமிழ் மரபு காக்கும் தொல்காப்பிய மரபியலுள் தொல்காப்பியர் இத்துறை இலக்கணத்தை வைத்துச் சென்றமையாலும், தமிழ் மரபுவழி இத்துறையை மீட்டுருவாக்கம் செய்யவேண்டியதாயிற்று.

மரபான தமிழ்க் காட்சியியல் யாது? இக்கேள்விக்கு விடை காண முயன்ற மரபுவழிச் சிந்தனையாளர் சைவ சித்தாந்தமே தமிழ்க் காட்சியியல் என்று உரைத்தனர். இக்கருத்து ஏன் பொருந்தாது என்பதை முன்னரே கூறினோம்.

தமிழ்க் காட்சியியலை மட்டும் எடுத்தோதும் தொன்மையான தனி நூல் எதுவும் இதுவரை நமக்குக் கிட்டாததால், பல நூல்களில் பரவி விரவியுள்ள துறைச் செய்திகளை இனங் கண்டு தொகுத்து விளக்குவதே இந்நூல் கையாளும் நெறி. இத்துறைக்கான தொன்மையான மூலங்களில் வளம் மிக்கது தொல்காப்பியமே. தமிழிசைக்குச் சிலப்பதிகாரம் போல, இத் துறைக்குத் தொல்காப்பியம் அமைகின்றது. காட்சி, காண்டிகை (syllogism), உத்தி போன்ற அடிப்படைத் துறைச் சொல்களும். இத்துறை நெறியியலின் எலும்புச் சட்டகமான முப்பத்திரு உத்தி வகைகளும் ஒல்காப் புகழ் தொல்காப்பியத்துள்ளேயே மௌன நிலையில் மறைந்திருந்தன, இன்று இம்மீட்டுருவாக்க நூலின் வழி அவை மீண்டும் பேசத் தொடங்கியுள்ளன என்பதும் மிகையோ?

தமிழ்க் காட்சியியலுக்கொரு தனிநூல் கிட்டாத நிலையில், இத்துறையின் உள்துறைகளை இந்நூல் வகுத்துக் காட்ட வேண்டியதாயிற்று. மேலைக் காட்சியியல் பகுப்புகளான ‘அறிவியல்’ (இங்கு, விஞ்ஞானத்தைக் குறியாது; epistemo-logy), உண்மையியல் (அதாவது, ‘உள்ளமை இயல்’; ontology), மறைபொருளியல் (metaphysics); தர்க்கவியல் (logic), அறவியல் (ethics), கலையியல் (aesthetics) என்பவற்றை அடியொற்றாது காட்சி என்ற சொல்லிலின்றே உள்துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இப்பகுப்புகள் முடிந்த முடிவானவை அல்ல, செம்மையுறுமாயின் நன்றே.

இனி, தமிழ்க் காட்சியியலுக்கும் இந்தியக் காட்சியியலுக்கும் உள்ள உறவினையும் நாம் அறிதல் வேண்டும். இந்தியப் பண்பாட்டுப் பெருமரத்தின் ஒரு கிளையான இந்திய ஆரிய மரபையே, அம்மரபுக் காட்சியியலையே இதுகாறும் இந்தியக் காட்சியியல் என்பது போல அறிஞர் எழுதி வந்துள்ளனர். பிற மரபுகளான திராவிடம், திபெத்திய பர்மீயம், ஆசுதிரிய ஆசியம் போன்றவை புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இம்மரபுகளுள் ஒன்றான திராவிடத்தின் மைய இடத்தை வகிக்கும் தமிழ்க் காட்சியியலை இந்திய ஆரியக் காட்சியியலுடன் இணைத்துக் காணுதல் வேண்டும்.

இந்திய ஆரியக் காட்சியியலில் முக்கிய இடம் பெறும் ‘தர்ஷன்’ என்ற சொல்லும், நியாய சாத்திரத்தின் அடிப்படையான ‘நியாய’ (syllogism) என்பதும், காட்சியர் வாதாடிய அவையான “பரிஷத்’ என்பதும் தமிழ்க் காட்சியியலுடன் பெரிதும் தொடர்புள்ளவை. ‘தர்ஷன்’ என்ற சொல் உணர்த்தும் பொருளின் மூலமான ‘காட்சி’ பற்றிய மிகத் தொன்மையான குறிப்புகளும்’ ‘நியாய’ என்ற ‘காண்டிகை’யின் தொன்மையான இலக்கணமும், அவை(சபை)களில் காட்சியர் வாதாடியபோது, தம் காட்சியியற் கோட்பாடுகளை முன்வைத்த போது பயன்கொண்ட உத்திகளின் இலக்கணமும் தொல்காப்பியத்துள்ளேயே முதன் முதலில் கூறப்பட்டுள்ளன.

இத் தொன்மரபு பின்னர்க் கழக இலக்கியங்களிலும், பிற்காலத் தமிழ் இலக்கியங்களிலும் தொடர்கிறது. மேலும் காட்சி, காண்டிகை, உரை, அவை என்பவை எல்லாம் திராவிடச் சொல்களாய் இருப்பதாலும், தமிழ்க் காட்சியியலினின்றே இந்திய ஆரியக் காட்சியியல் இவற்றைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிட வேண்டியது. எனவே, இந்தியக் காட்சியியலின் வரலாற்றைச் செம்மையுற வரைதற்கும் இந்நூல் துணை செய்யும்.

இனி, இன்றைய தமிழகத்தில் இந்நூலின் இடம் யாது எனக் காண்போம்.

அனைத்துக் குமுகாயங்களும் எப்பொழுதுமே புத்தாக்கம் (Modernisation) & மரபாக்கம் (traditionization) என்ற இரு முரணான எதிர்த்திசைகளில் ஈர்க்கப்படுகின்றன. இன்றைய தமிழ்க் குமுகாயமும் இவ்வீர்ப்பிற்கு விலக்கன்று.

இன்று தமிழகம் காணும் புத்தாக்கம் ஆங்கிலேயரின் ஆட்சியின் போது தொழிற் புரட்சியாக இங்கு அறிமுகமாகியது. அது, இன்று புதிய பொருளாதாரக் கொள்கைத் திட்டங்கள் என்ற அளவிற்குப் படிமுறை வளர்ச்சி கண்டு தமிழ்நாட்டின் முதல், கரு, உரிப்பொருள் என்ற அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளது. மேலையரின் புதிய சிந்தனையும், கொள்கைகளும் இம்மாற்றத்திற்குத் துணை புரிந்துள்ளன. முதலாளித்துவத்தைப் புரக்கும் புராட்டசுதாந்து கிருத்துவமும்; உலகமயமாக்குதலும் (globalisation), பொதுமையாக்கமும் (Universalisation); மார்க்சியமும் புத்தாக்கத்தினை ஊக்குவித்துள்ளன. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த கல்விமுறையும், இன்று சிறப்பிடம் பெறும் தொழிற் கல்வியும் புத்தாக்கத்திற்குத் துணை போவனவே.

புத்தாக்கத்தின் அடிப்படை நோக்கம் பொருளைப் பெருக்குதலே. இதனை ‘வளர்ச்சி’ (development) என்பர். இன்று குமுகாய வளர்ச்சி என்பது நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொருள் வளர்ச்சியையே குறிக்கும். அறவளர்ச்சி’ யையோ, இன்ப வளர்ச்சியையோ குறிக்காது. வளர்ச்சி என்பது பொதுவாக உயிர்களுக்கே பொருந்தும் என்பதையும் அது குமுகாயத்தைக் குறிக்கையில் எவ்வாறு குழப்பத்தைத் தோற்றுவிக்கின்றது என்பதையும் மேலைநாட்டு அறிஞர். விளக்கியுள்ளனர். அறம், பொருள், இன்ப நெறி நின்று. இயற்கையோடு இயைந்து வாழ்வதே குமுகாயக் குறிக்கோள் எனின் வளர்ச்சி அத்தகையதன்று.

இன்று, பெருந்தொழில் மயமாக்குதலே வளர்ச்சிக்கு வழி என்ற நிலை உண்மையாலும், அவ்வழி இயற்கையை அழித்தே அமைக்கப் பெறவியலும் ஆதலாலும், வளர்ச்சி அல்லது பொருட்பெருக்கம் ஒரு குமுகாயத்தின் நற்குறிக்கோள் ஆகாது. எடுத்துக்காட்டாக. இரும்பு, உருக்கு மற்றும் அணுவாற்றல் துறைசார்ந்த பெருந் தொழில்களும், நெகிழ்மம் (plastic), தாள், மின்னாற்றல், மருந்துப் பொருட்கள், போக்குவரத்து ஊர்திகள், தொலைத்தொடர்பு என நமது அன்றாட வரழ்க்கையை அமைக்கும் அத்தனை தொழில் நுட்ப வினை வகையும் இயற்கையை அழித்தே நிகழ்வன; சிறுபான்மையரை அழித்தே பெருகுவன. மேலும், “இயற்கையோடு இயைந்த (eco-friendly) வளர்ச்சி” காணவியலும் வாதிகளும், வணிகரும் ஆணையிட்டாலும், அவர் கூற்று போலியானது; நடைமுறையில் இயலாதது. இன்று, வளர்ச்சி சார்ந்த புத்தாக்கத்தை அறிஞர் பலரும் நாடிச் செல்லுவதால், இப்புத்தாக்கம் தமிழகத்தில் பெருஞ்செல்வாக்குப் பெற்று வருகின்றது.

இனி, புத்தாகத்திற்கு வித்திட்ட மேலையரே மரபாக்கத்திற்கும் துணை நின்றுள்ளனர் என்பது வரலாற்று விந்தை. 1875இல் பேராயர் கால்டுவெல் வெளியிட்ட திராவிட மொழியாய்வு நூலும், அந்நூல்வழித் தொடர்ந்த தமிழ்மொழி ஆய்வுகளும், திராவிட இயக்கமும், திராவிடக் கட்சியும், தனித் தமிழ் இயக்கமும், தமிழிசை இயக்கமும், சித்த மருத்துவ ஆய்வும் திராவிடக் கட்டடக் கலை போன்ற தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டு ஆய்வுகளும், உலகத் தமிழாய்வு மன்றமும், தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் வளர்ச்சித் துறையும், ஆதி திராவிடர் நல மேம்பாட்டுத் துறையும், பழங்குடியினர் நலத்துறையும், பல்வேறு சாதி அமைப்புகளும், காதி கிராமோதயமும், மரபாக்க வினைவகையே.

மரபாக்க, வினைவகையுள் தலையாயது ‘சுற்றுச் சூழல்’ இயக்கம். சுற்றுச் சூழலுக்கு ஊறு நிகழ்ந்தால் மரபுகளும் கேடுறும் என்பதால் அதனைப் பேணுதல் வேண்டும். பெருந்தொழில்கள் அனைத்தும் சூழலை அழிப்பனவே ஆதலால், சூழல் இயக்கம் பெருந்தொழில் மயமாக்குதலுக்கு எதிரானது என அறிக.

மற்றொரு மரபாக்கக் குரல் பெண்ணுரிமை பற்றியது. இதுவும் மேலையரின் தகவுகளைச் சார்ந்தே தோன்றியுள்ளது எனினும் சாதி அமைப்பிற்கு முற்பட்ட திணைக் குமுகாயம் பெண்ணுரிமை பேணியதே என்பதால் தமிழ் மரபு பெண்ணுரிமைக்கு எதிரானது அன்று.

இனி, புத்தாக்கத்தால் சில நன்மைகளும் விளையலாம். எடுத்துக்காட்டாக, சாதி ஒழிப்பு, அச்சுக்கலை அறிமுகம், அகராதி தொகுத்தல், பிற செய்தி தொகுத்தல், ஆங்கில மொழிப் பயிற்சி, குடியாட்சி போன்றன. இத்தகைய நன்மைகள் ஒருபுறம் இருப்பினும், வளர்ச்சிக் கோட்பாட்டையே புத்தாக்கம் அடிப்படையாகக் கொண்டிருத்தலால் புத்தாக்கம் முற்றிலும் நன்மை பயப்பதன்று.

அவ்வாறே, மரபுகளுக்குள்ளும் சில போலிகள் இருத்தல் கூடும். எடுத்துக்காட்டாக, சாதி. இது இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருந்தாலும், களைய வேண்டியதே.

சில குமுகாய நிகழ்வுகள் புத்தாக்கம், மரபாக்கம் என்ற இரு தன்மையும் உடையவாய் இருத்தல் கூடும். அவற்றில் நன்மரபுக் கூறுகளையே இன்றைய தமிழகம் வலுப்படுத்தல் வேண்டும். கா. சிவத்தம்பி கூறுவதற்கு இணங்க, தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுத்துப் புதுத் தொழில் நுட்பத்தை வளர்த்தால் தமிழ்ப் பண்பாடு அழிந்து ஒழியுமே அன்றி மீட்டுருவாகாது.
நற்புத்தாக்கமும் மரபு வழியே மட்டும் சாலும் என்பதே நற்காட்சியரின் துணிவு. ஆதலாலும், உலகின் அத்தனை நற்புதுமைகளும் அவ்வாறே விளைந்திருப்பதாலும், மரபை அழிப்பவர் ‘யான் எனது’ எனும் செருக்கினால் குமுகாயத்தையே அழிக்கின்றார் எனலாம், மரபு என்னும் பெருமரத்தின் கிளைகளே இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலமும். எனவே, இறப்பாம் பழைமையும், நிகழ்வாம் நடப்பும், எதிர்வாம் புதுமையும் அதன்பாற்பட்டனவே. இதனை அறியாதாரே அதனை அழிக்க முற்படுவர்.

இதுகாறும் கூறியதன்படி, மரபாக்கமே இன்றைய தமிழகத்திற்கு உடனடித் தேவை என்பதால் அத்திசைச் செலவில் இந்நூலும் ஓர் அடி எடுத்து வைப்பதாகும். மறைந்து போன தமிழ் நூல்களையும் பிற பண்பாட்டுத் தடயங்களையும் தமிழ்க் குமுகாயம் தேடிக் கொண்டிருக்கையில் கண்ட ஒரு தொல்பொருளாக மட்டும் இந்நூல் அமையலாகாது. இன்றைய தமிழ்க் காட்சியர் மெய்ப்பொருளைக் காண்பதற்கும் மரபுத் தமிழ்க் காட்சி நெறியை அறிந்துகொள்ளவும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளவும். நூல் அமைத்தற்கும், வாதாட்டு நிகழ்த்தற்கும், இந்நூல் துணை செய்யும் எனக் கருதலாம். மேலும், புதுச் சிந்தனையும், விளங்காப் பொருளிற்கு விளக்கமும் மலர வான் விளக்காகும் என்று கருதுவோம்.

இந்நூல் இருபெரும் பகுதிகளை உடையது. முதற்பகுதியாம் தமிழ்க் காட்சியியல் என்பது இத்துறைபற்றி வெளிவந்துள்ள நூல்களின், கட்டுரைகளின் மையக் கருத்தை எடுத்துரைப்பது. இந்நூல்கள் மரபான தமிழ்க் காட்சியியலை இனங்காணவில்லை என்பதையும், அம்மரபுத் துறையை வகுக்கும் அணுகுமுறை யாது என்பதையும் விளக்குவது, காட்சி என்ற மரபுச் சொல்லை அறிமுகம் செய்து, தமிழ்க் காட்சியியலின் இயல்புகளையும் எடுத்துக்காட்டி, இத்துறையின் உள்துறைகளைக் காட்சி என்ற சொல்லினின்றே வகுப்பது.

இரண்டாம் பகுதி நெறியியல் பற்றியது. இது உணர்தல், அறிதல், உள்ளுதல் என்ற நிலைகளில் நிகழும் காண்வினை பற்றியும், சூத்திரம், காண்டிகை, உரை என்ற காட்சி நூல் வகைகளையும், நூற்குற்றங்களையும், காட்சி நூல் குறிக்கும் பொருளை அறிதல் எவ்வாறு என்பதையும், நூல் அளவைகளையும், காட்சி நூல் அமைப்பினையும், பிறன் கோளை மறுத்துத் தன் துணிபை உரைக்கும் காட்சி நுவல் மரபினையும், விளக்குவது. காண்நெறியின் அடிப்படை ‘தொல்காப்பிய மரபியல் கூறும் காட்சித்துறை உத்திகளே என்பது எவருக்கும் தெற்றென விளங்கும்.

இந்நூலாக்கத்திற்குத் துணை புரிந்தோர் பலர். அவர் அனைவரின் பெயரையும் இங்குக் குறிப்பிடுவது இயலாது என்பதால் பெயர் சுட்டப்பெறாதோர் பொறுத்தருள வேண்டுகிறேன்.

இந்நூலினை அறக்கட்டளைச் சொற்பொழிவாக நிகழ்த்த வாய்ப்பளித்த உலகத் தமிழ் ஆராய்ச்சி முன்னாள் இயக்குநர் (பொறுப்பு) முனைவர் அன்னி தாமசு அவர்கட்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவுப் பொறுப்பாளர் முனைவர் சிவகாமி அவர்களுக்கும், அதனை நூலாக்குவதற்கு வளக்க மளித்த இயக்குநர் முனைவர் இராமர் இளங்கோ அவர்கட்கும், அவ்வாராய்ச்சி நிறுவனத்தின் அறிஞர் பிறருக்கும், அலுவலர்க்கும் எனது உளங்கனிந்த நன்றி.

எனது தமிழாசான், தமிழிசையியற் சிகரம் முனைவர் வீ.ப.கா. சுந்தரனார்; ‘தொல்காப்பிய’த்தை முதன்முதலில் எனக்குப் பாடம் சொன்ன நற்றமிழாசிரியர் முனைவர் தி.நடராசனார் ஆகியோரைச் சிரந்தாழ்த்திச் சிந்தையில் நிறுத்துகின்றேன்.

இந்நூலிற்கு அடித்தளம் இட்ட ஆங்கிலக் கட்டுரைகளை உருவாக்குவதற்கு வாய்ப்பளித்த திருவனந்தபுரத்து அனைத்துலகத் திராவிட மொழியியல் பள்ளி 1987ஆம் ஆணடில் நடத்திய காட்சியியல் கருத்தரங்கமும், இந்தியக் காட்சியியல் மாநாட்டினர் 1990ஆம் ஆண்டு மதுரையில் கூட்டிய கருத்தரங்கமும் காரணிகளாய் அமைந்தன. அக்கருத்தரங்கப் பொறுப்பாளர்க்கும் எனது நன்றி உரித்தாகுக.

மேலைக் காட்சியியல் நூல்களைப் பள்ளிப் பருவத்திலேயே படிப்பதற்கு உரிய வாய்ப்பினையும் தென்னிசைப் பயிற்சியையும் இல்லத்திலேயே அமைத்துத்தந்த என் தந்தை தாயாருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

அவ்வப்போது என்னுடன் இப்பொருள் பற்றிக் கலந்து உரையாடி உதவும் புலவர் பாரதிபுத்திரன் அவர்கட்கும் நன்றி.

இனி, பலகால் என்னுடன் இவ்வாய்வினைப் பற்றிக் கருத்துத் தெரிவித்து ஊக்குவித்து உழை நிற்கும் என் துணைவி ருக்மணிக்கும், இவ்வாய்வினால் நான் தம்முடன் விளையாட இயலாதபோது அதனால் மனங்கவன்று என்னை மருட்டா மக்கள் பாடினி, மாதினிக்கும் நன்றி.

இந்நூலின் குறை என்னையும், நிறை இறையையும், பிறரையும் சாரும்.

வாழிய தமிழ்க் காட்சியியல் மரபு !

One response to “தமிழ்க் காட்சி நெறியியல் – நிர்மல் செல்வமணி (பகுதி 1- முன்னுரை)”

  1. அகமது கனி Avatar
    அகமது கனி

    ’காட்சி’ என்றால் Appearance, Scene என்பதாக மட்டுமே அறிந்திருந்தோம். ஆனால், அச்சொல் நெடுங்காலத்திற்கு முன் ஆழ்ந்த பொருளில் கையாளப்பட்டு வந்ததை அறிய முடிகிறது. நெடுங்காலம் வழக்கில் இல்லாத அந்த நல்லதொரு துறைச்சொல்லை இனங்கண்டு, தனியொரு துறை காண நூல் வகுத்திருக்கிறார் நூலாசிரியர்… மொழியியல், சமூகவியல் சார்ந்த நிறைய ஆங்கில, தமிழ்ச் சொற்கள் இம் முன்னுரையிலே நமக்கு அறிமுகமாகின்றன. அவற்றை நன்முறையில் உள்வாங்கி இச் செறிவான நூலை படிக்கத் தொடங்குவோம்.

    Like

Leave a reply to அகமது கனி Cancel reply

Trending