நவீன ஓவியர்களைக் கவரும்
இந்திய ஓவிய மரபுகள்

முன்னுரை :
மரபில் வேரூன்றி, நவீனத்துவத்தில் கிளை விரித்தல்

ஷாராஜ்

ஓவியக் கலை ரசனை, விமர்சனம், ஓவியங்களுக்கான சந்தை, பிரபல ஓவியர்களின் கலையும் வாழ்வும் முதலான நூல்களாயினும் சரி; ஓவியம் வரைதல், குறிப்பிட்ட ஊடகங்களில் வரையக் கற்றுக்கொள்தல் ஆகியவற்றுக்கான கற்பிப்பு நூல்களாயினும் சரி – தமிழில் தேவையான நூல்கள் இல்லாதது குறை. ஆங்கிலத்தில் இவை ஏராளமாக உள்ளன. ஆங்கில நூல்கள் சர்வதேசச் சந்தை கொண்டவை என்பதால் பல்வேறு துறைகளிலும் இப்படியான நூல்கள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றின் விலைகள் நம்மால் வாங்க இயலாத அளவுக்கு ஆயிரக் கணக்கான இந்திய ரூபாய் மதிப்பில் இருக்கக் கூடும். என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை இலவச மின்னூல்களாகவே கிடைக்கின்றன. நேரம் ஒதுக்கித் தேடினால் சிறந்த நூல்களைத் தேவைக்கு அதிகமாகவே அள்ளிக்கொள்ள முடியும்.
நவீன தாந்த்ரீக ஓவியன் என்ற முறையில், 2012 முதலாக தாந்த்ரீகம் தொடர்பான விரிவான அறிதலுக்காக தாந்த்ரீகம், யோகம், தியானம், ஆன்மிகம், மெய்ஞானம், உடற்கூறு, மானுடவியல், மதங்கள், அமானுஷ்ய ஆற்றல் பயில்வு, மீயறி ஆய்வியல் (மெடாபிசிக்ஸ்), மாந்தரீகம், வெவ்வேறு மதங்களின் யோக – மெய்ஞான – அமானுஷ்ய ஆற்றல் வழமைகள் உட்பட சுமார் 15-க்கு மேற்பட்ட துறைகளில் நான் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. தமிழில் இதற்கு வாய்ப்பே இல்லை. ஆங்கில இலவச மின்னூல்கள்தான் கைகொடுத்தன.
அப்போது சில ஆண்டுகளாக நான் தரவிறக்கி வைத்த நூல்கள் ஒரு டிஜிட்டல் நூலகம் என்கிற அளவுக்கு இருந்தது. வேறு வேலை எதுவும் செய்யாமல் அவற்றை வாசிப்பது என்றாலே குறைந்தது 20 – 30 ஆண்டுகள் ஆகலாம். அப்போது இணையத் தொடர்புக்குத் தனிக் கட்டணம், அதுவும் பெருங்கொள்ளை விலை. நானோ வறுமைக்கோட்டுக்கு 37.5 கி.மீ. கீழே பாதாள உலகில் வசித்துக்கொண்டிருந்தேன். எனவே, இணைய இணைப்பு எடுக்கிறபோது ‘வெகாறி’யோடு நூல்களையும், ஓவியங்களையும் தரவிறக்கி சேகரித்துக்கொள்ள வேண்டியிருந்தது. பிற்பாடு இணையக் கட்டணம் அதிரடியாக சல்லிசாகிவிட்டதால், இனி இப்படி சேகரித்து வைக்க வேண்டிய அவசியமில்லை, வேண்டும்போது தரவிறக்கிக்கொள்ளலாம் என, மின்னூல் சேகரிப்பைப் பெருமளவு குறைத்துக்கொண்டேன். கணினியில் இடப் பற்றாக்குறை காரணமாக, சேகரித்து வைத்திருந்தவற்றிலும் அத்தியாவசியமல்லாதவற்றை அழித்துவிட்டேன்.
இப்போதும் தமிழில் ஓவியத்துறை தொடர்பான நூல்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். நுண்கலை ஓவியம், நவீன ஓவியம் என்று மட்டுமன்றி மரபு ஓவியம், தொழிற்துறை ஓவியம், இல்லஸ்ட்ரேஷன் எனப்படும் பத்திரிகை ஓவியங்கள், கேலிச் சித்திரங்கள், காமிக்ஸ் படங்கள், டிஜிட்டல் ஓவியம் உட்படப் பல வகையான ஓவியங்கள் வழக்கத்தில் இருப்பினும், அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளவோ, கற்கவோ நூல்கள் இல்லை. அரிதாக மிகச் சில நூல்கள் இருக்கலாம். அவை போதுமான அளவு தரத்துடன், தகவல்களுடன், ஆழ்ந்த கண்ணோட்டங்களுடன், ஆய்வுடன் உள்ளனவா என்பதும் கேள்விக்குறி.

முன்பு தமிழ் இலக்கியத் தரப்பிலிருந்து தேனுகா, வெங்கட் சாமிநாதன், இந்திரன் போன்ற மூத்த ஓவிய விமர்சகர்கள் நவீன ஓவியம் குறித்து குறிப்பிடத்தக்க விமர்சன நூல்கள் சிலவற்றை எழுதியுள்ளனர். மேற்கத்திய ஓவியம், நவீன ஓவியம் தொடர்பாக முன்பும் சமீப காலங்களிலும் நல்ல ஓரிரு நூல்கள் இலக்கியத் தரப்பிலிருந்து வந்துள்ளன. ஆனால், பிற துறைகளோடு ஒப்பிடுகையில் இவற்றின் எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பம். ஆகவேதான் ‘கிட்டத்தட்ட இல்லை’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டதும் குறிப்பிடப்படாததுமாக பல்வேறு வகை ஓவியங்கள் நம் பயன்பாட்டில் உள்ளன. இவை எல்லாவற்றையும் பற்றி நூல்கள் தேவையா எனில், இல்லை. வெறுமனே தொழில் ரீதியாக மட்டும் உள்ள ஓவியங்கள் பற்றிய நூல்கள் பொது வாசகர்களுக்கு அவசியமில்லை. அவர்களுக்கு அவற்றால் எந்தப் பலனும் கிடையாது. ஆனால், கலை ரீதியான நுண்கலை ஓவியங்கள், நவீன ஓவியங்கள், நம் பண்பாட்டோடு இணைந்துள்ளதும் நமது நாட்டின் வளமான பாரம்பரியப் பொக்கிஷங்களாக உள்ளதுமான மரபு ஓவியங்கள் ஆகியவை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம், அவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்களாவது. காரணம், இவற்றில் கலை, சமூகம், வாழ்வியல், வரலாறு, அரசியல் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பதிவாகியுள்ளதுதான்.
அந்த வகையில், நானும் ஒரு நுண்கலை ஓவியன், நவீன ஓவியன் என்ற முறையில், இந்திய நவீன ஓவியம், இந்திய மரபு ஓவியங்கள், உலக நவீன ஓவியங்கள் தொடர்பாக நூல்கள் எழுத வேண்டும் என்பது எனது நீண்ட கால விருப்பம். துறை சார்ந்த பங்களிப்பாக இது இருக்கும். அது மட்டுமன்றி, ஓவியம் தொடர்பாக ஓவியர் அல்லாதவர்கள் எழுதுவதைவிட, ஓவியர்கள் எழுதினால் ரசனை, கலைக்கூறுகள், தொழில்நுட்பங்கள், புரிதல் ஆகியவற்றில் கூடுதலான ஆழமும் விரிவும் அமைய வாய்ப்பு உண்டு. அதனாலேயே என்னை ஓவியங்கள் தொடர்பான நூல்களை எழுதுமாறு ஓரிரு நண்பர்கள் கடந்த சில வருடங்களாகவே சொல்லிக்கொண்டும் இருந்தனர். இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. எனது மானசீக ஓவிய குருநாதர்களான பாப்லோ பிக்காஸோ, ஹென்றி மத்தீஸ், எஃப்.என்.சௌஸா ஆகியோரின் வாழ்வும் கலையும் பற்றித் தனித்தனியான மூன்று நூல்கள் எழுதியுள்ளேன். அதோடு சேர்த்து, இந்திய மரபு ஓவியங்கள் குறித்த எனது நூலும் வரவேண்டும் என்பதற்காக இதையும் எழுதுகிறேன்.


ஒரு நவீன ஓவியர் மரபு ஓவியம் குறித்து எழுதுவதா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். பொதுவாக நுண்கலைத் தரப்பில், மரபு ஓவியங்கள் தாழ்வான கலை என்றும், அவை கலையல்ல, கைவினைகளே என்றும் கருதப்படுகிறது. நுண்கலைப் பார்வையில் அது சரியானதுதான். அறிந்தோ அறியாமலோ நம்மில் பலரின் பார்வைகளும் மேற்கத்திய சிந்தனை முறைகளால் தாக்கம் பெற்றதாக இருக்கும். தவிர, நுண்கலைத் தரப்பினர் எளிய கலைகளையோ, நாட்டார் கலைகளையோ, கைவினைகளையோ, ஜனரஞ்சக வியாபாரக் கலைகளையோ மதிக்கவும் மாட்டார்கள். ஆனால், அந்தக் கண்ணோட்டங்களுக்கு அப்பால், வேறு விஷயங்கள் நமக்கு மரபிலிருந்து தேவைப்படுகின்றன.
மரபு ஓவியங்கள், நாட்டார் சிற்பங்கள் ஆகியவை நம் மண்ணில் முளைத்தவை. நம் மக்களிடமிருந்தும், நம் முன்னோர்களின் வாழ்விலிருந்தும் வந்தவை. அவர்களின் வாழ்வியல், சமய நம்பிக்கைகள், சடங்குகள், ஆன்மிகம், பண்பாடு, பாரம்பரியம், வரலாறு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களும் அதில் ரத்த ஓட்டமாகக் கலந்துள்ளன. அவற்றிலிருந்து நுண்கலைத் தரப்பினர் ‘உயர் கலை’யை எடுக்க முடியாது. ஆனால், நம் மண்ணை, நம் அடையாளங்களை, நமக்கான பிரதேசத்தன்மையை எடுத்துக்கொள்ள முடியும். நவீன ஓவியர்களுக்கு இது மிக முக்கியம்.
மரபு ஓவியங்கள் கைவினைகள்தான். அவற்றுக்கு நுண்கலைக்கு உரிய கலைச்சிறப்பு, உயர் மதிப்பு, உச்ச விலை ஆகியவை கிடையாதுதான். ஆனால், அவை அதனளவில் மதிக்கப்பட வேண்டியவை. அவை மரபார்ந்தவை என்கிற காரணத்துக்காக மட்டும் அல்ல. அப்படிச் செய்தால் அது அர்த்தமற்றது. அது தேவையில்லை. மரபுக் கலை அல்லது கைவினை என்பதற்கு அப்பால் அதில் குறிப்பிடத்தக்க கலைச் சிறப்புகள் இருக்க வேண்டியது மிக முக்கியம். அப்படி உள்ளவற்றை மட்டுமே நான் மதிக்கிறேன். இது தவிர அவற்றில், ஒவ்வொரு மரபுக்கும் வெவ்வேறு விதமான தனிச் சிறப்புகள், பண்புகள், முக்கியத்துவங்கள் இருக்கும். அஜந்தா, எல்லோரா ஓவியங்களில் செவ்வியல்தன்மை, ஆன்மிகத்தன்மை, தியானத்தன்மை ஆகியவை முக்கியமானவை. மதுபானி, சந்தாலி / ஜடோபாட்டியா போன்ற மரபு ஓவியங்கள் சடங்கு, அன்றாட வாழ்வியல் பயன் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை. மற்ற பல மரபுகள் நமது நாட்டின் மதங்கள், வரலாறு, அரசியல், சமூகம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்தவை.
இதன் காரணமாக நுண்கலை ஓவியர்களிலும், நவீன ஓவியர்களிலும் சிலர் மரபு ஓவியங்களை அதற்குரிய மதிப்போடு பார்ப்பது வழக்கம். இன்னமும் சொல்லப்போனால், மரபை மதிப்பவர்களில் எதார்த்த ஓவியர்களைக் காட்டிலும் நவீன ஓவியர்கள்தான் அதை முழுமையாகவும் ஆழமாகவும் அணுகுகின்றனர்.
இந்தியாவில் நவீன ஓவியம் காலூன்றியதிலிருந்து இன்றுவரை, இந்திய நவீன ஓவியர்களிடையே இரு விதமான போக்குகள் நிலவுகின்றன. ஒரு தரப்பு, இந்திய ஓவிய மரபுகளைப் புறக்கணித்துவிட்டு மேற்கத்திய நவீன ஓவிய இஸங்களை, கோட்பாடுகளை, அழகியலை, அப்படியே பின்பற்றுவது. இன்னொரு தரப்பு, இந்திய மரபு ஓவியங்களிலிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, மேற்கத்திய நவீன ஓவிய இஸங்களையும் கலந்து, இந்திய நவீன ஓவியம் என்பதற்கு உரிய பிரதேசத்தன்மை அடையாளத்தைக் கொண்டிருப்பது.
மரபை உள்வாங்கிக்கொண்டவர்களாக இந்திய அளவில் ஜாமினி ராய், நந்தலால் போஸ், எஃப்.என்.சௌஸா உள்ளிட்ட முன்னோடிகள் முதல் சமகாலத்தவர்களில் ஒருவரான பரேஷ் மெய்த்தி வரை ஏராளமான மேதைகள் உள்ளனர். தமிழக நவீன ஓவியர்களில் கே.எம். ஆதிமூலம், எம்.சேனாதிபதி, ஜி.ராமன் போன்றவர்களும் அப்படியே.
இங்கே மட்டுமல்ல; நவீனத்துவம் உருவான மேற்கத்திய நாடுகளிலேயே, அவற்றை உருவாக்கிய முன்னோடி மேதைகளிலேயே, மரபுகளை உள்வாங்கிக்கொண்டவர்கள் பலர் உள்ளனர். இதில் சிலர் தங்களின் மரபிலிருந்து அல்லாமல், அன்னிய மரபுகளிலிருந்து சுவீகாரம் செய்துகொண்டனர். அதில் அதிமுக்கியமானவர் பிக்காஸோ. அவர் ஆஃப்ரிக்க மரபுச் சிற்பங்கள் மற்றும் முகமூடிகளின் வலுவான தாக்கத்தில்தான் கனசதுரவியலையே (Cubism)உருவாக்கினார். காகெய்ன் எகிப்திய மரபு ஓவியங்களில் கவரப்பட்டு, அவற்றின் தாக்கத்தில் சில ஓவியங்களை வரைந்துள்ளார். வான்கோ ஜப்பானிய அச்சு ஓவியங்களால் கவரப்பட்டு சில பிரதியெடுப்புகளைச் செய்துள்ளார். எனினும் இந்த மூவரும் மேற்கூறப்பட்ட மரபுகளைத் தொடர்ந்து கைக்கொள்ளவோ, தமது நிரந்தர அடையாளமாக ஆக்கிக்கொள்ளவோ இல்லை. அவ்வாறு செய்திருந்தால் அது பொருத்தமானதாகவும் இராது. காரணம், அது அவர்களின் சொந்த மரபு அல்ல என்பதுதான்.


இது ஒருபுறம் இருக்க, நவீன கலை – இலக்கியங்களில் மரபின் முக்கியத்துவம் குறித்து, இலக்கியத்தில் அறிமுகமாகிக்கொண்டிருந்த பதின்ம வயது இறுதிகளிலேயே எனக்கு அறிதலும் உணர்தலும் வாய்த்துவிட்டது. மதிப்பிற்குரிய நமது மூத்த இலக்கியவாதிகள், விமர்சகர்கள் சிலர், ‘மரபில் வேரூன்றி நவீனத்துவத்தில் கிளைவிரிப்பது’ என்னும் வாசகத்தோடு, இந்த இரு தரப்பின் ஒருங்கிணைப்பை வலியுறுத்தினர். இலக்கியத்திலும் கலைகளிலும் அந்த வகையில் கணிசமானவர்கள் உள்ளனர்.
மரபுகள் நவீனத்துவத்தை உள்வாங்கிக்கொள்ளுமா, அது தேவையா என்பது கேள்விக்குரியது. ஆனால், நவீனத்துவம் மரபை உள்வாங்கிக்கொள்வது தேவை அல்லது நல்லது என்பதே எனது தரப்பு. எனக்கு மரபு முக்கியம்; நான் இந்திய மரபில் வேரூன்றி சர்வதேச நவீனத்துவத்தில் கிளை விரிக்க விரும்புகிறேன். ஆகவே, இந்திய மரபு ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து பார்த்தும், ரசித்தும், அவற்றிலிருந்து கற்றுக்கொண்டும் வருகிறேன். இவற்றை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த நூலை எழுதுகிறேன்.
இந்திய மரபு ஓவியங்களின் சிறப்புகள் பற்றிக் கூறுவதும், அவற்றின் கலைச் சிறப்புகளைப் பாராட்டுவதும், அவற்றின் பழமையைப் போற்றுவதும் மட்டும் எனது நோக்கம் அல்ல. நான் ஒரு நவீன ஓவியன் என்ற முறையில், எனக்குப் பிடித்தமான இந்திய ஓவிய மரபுகள் எத்தகைய கலைக்கூறுகளைக் கொண்டுள்ளன என்பதை, ஓவிய ஆர்வலர்கள் மற்றும் ஓவிய மாணவர்களுக்குத் தெரிவிப்பதும்தான்.
இந்தியா முழுக்க எண்ணற்ற ஓவிய மரபுகள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை சுமார் 20 க்குச் சமீபமாக இருக்கும். அவை அதனதன் அளவில் முக்கியமானவை, தனிச்சிறப்புகள் கொண்டவை. அவற்றைக் குறித்த தகவல்களும், அவற்றின் வரலாறும், அந்த ஓவியங்களின் படிமங்களும் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன.
இந்தியாவின் கலை வரலாற்றில் தங்களின் கலைச் சிறப்பு, வரலாற்று முக்கியத்துவம் மற்றும் நீடித்த தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் 10 முக்கியமான ஓவிய மரபுகளை, அவை எந்த மாநிலம் அல்லது பிரதேசங்களைச் சேர்ந்தவை, அவற்றின் தனிச்சிறப்புகள் என்ன என்கிற குறிப்புகளோடு இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

  1. அஜந்தா சுவர் ஓவியங்கள் – மகாராஷ்டிரா. கி.பி. 2ஆம் நூற்றாண்டு. செவ்வியல் ஓவியப் பாரம்பரியத்தின் உச்சம்; திரவமான வடிவங்கள் மற்றும் புத்தர், போதிசத்வர்கள் மற்றும் பிறரின் அமைதியான கருணை வெளிப்பாடுகள்.
  2. முகலாய சிற்றோவியங்கள் – வட இந்தியா (டெல்லி, ஆக்ரா, லாகூர்). பாரசீக நுட்பத்துடன் உருவான யதார்த்தமான உருவப்படங்கள், நுணுக்கமான வரலாற்றுப் பதிவு மற்றும் அரசவைக் காட்சிகள்.
  3. ராஜஸ்தானி சிற்றோவியங்கள் – ராஜஸ்தான் (மேவார், கிஷன் கர்). பிரகாசமான வண்ணங்கள் மற்றும் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டுடன் ராதா-கிருஷ்ணரின் காதல் கதைகள், பக்தி உணர்வைச் சித்தரித்தல்.
  4. பஹாரி சிற்றோவியங்கள் – இமாச்சலப் பிரதேசம் / ஜம்மு (காங்க்ரா, பஸோலி). இயற்கையின் ரம்மியமான சூழலில் மென்மையான, நுட்பமான கோடுகளுடன், ஆழமான தெய்வீகக் காதலைப் படம்பிடித்தல்.
  5. தஞ்சாவூர் ஓவியங்கள் – தமிழ்நாடு. தங்க இழைகள், கண்ணாடி, விலைமதிப்பான கற்களின் முப்பரிமாணப் பயன்பாட்டால் இந்து தெய்வங்களை கம்பீரமாகவும் ஆடம்பரமாகவும் சித்தரித்தல்.
  6. கேரளா சுவர் ஓவியங்கள் – கேரளா. அடர்த்தியான நிறங்கள், நிழல் ஒளி பயன்பாடு ஆகியவற்றுடன் தெய்வங்களின் பிரம்மாண்டமான, நாடகத்தன்மை வாய்ந்த சித்தரிப்பு.
  7. தங்கா ஓவியங்கள் – இமயமலைப் பிராந்தியம் (லடாக், சிக்கிம்). பௌத்தத் தெய்வங்கள், புனிதர்கள், மண்டலங்கள் ஆகியவற்றை வரையறுக்கப்பட்ட குறியீடுகளுடன், தியானத்திற்கான காட்சிக் கருவியாகத் துல்லியமாகக் காட்சிப்படுத்துதல்.
  8. பட்டச்சித்ரா ஓவியங்கள் – ஒடிசா / மேற்கு வங்காளம். துணியில் வரையப்படும் சுருள் ஓவியங்கள், ஜகந்நாதர் புராணக் கதைகள், நாட்டுப்புறக் கதைகளின் தொடர்ச்சியான காட்சி வடிவம்.
  9. வார்லி ஓவியங்கள் – மகாராஷ்டிரா. எளிய வடிவியல் வடிவங்கள் (முக்கோணங்கள், வட்டங்கள்) மூலம் மனிதர்கள், விலங்குகள், அன்றாட வாழ்க்கை, சடங்குகள், சமூக நடனங்களைச் சித்தரிக்கும் பழங்குடிக் கலை.
  10. மதுபானி ஓவியங்கள் – பீகார் (மிதிலைப் பகுதி). பிரகாசமான வண்ணங்கள், தனித்துவமான எளிய வடிவங்கள், சிக்கலான வரைகலைக் கோடுகள் ஆகியவற்றால் புராணக் கதைகள், தெய்வங்கள், பெண்கள், வாழ்க்கை , இயற்கை ஆகியவற்றை வரைதல்.
    இந்த மரபுகள், இந்தியாவின் கலை, ஆன்மீகம் மற்றும் சமூக வாழ்வின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பவை.
    இந்த நூலில் கலை அம்சங்களின் சிறப்புகளால் என்னைக் கவர்ந்த, எனக்குப் பிடித்தமான, எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிற, நானும் பின்பற்ற விரும்புகிற, சில அம்சங்களை உள்வாங்கி சுவீகரித்துக்கொள்கிற இந்திய ஓவிய மரபுகள் பற்றி மட்டும், ஒவ்வொரு மரபையும் தனித்தனி அத்தியாயங்களாக எழுதியுள்ளேன். அதில் மேலே குறிப்பிடப்பட்ட சில மரபுகளும், அப்பட்டியலில் இல்லாத சில மரபுகளும் கலந்திருக்கும். மரபை உள்வாங்கும் நவீன ஓவியக் கண்ணோட்டத்தில் இருப்பதால் இவை மரபில் அக்கறையும், மதிப்பும் உள்ள நவீன ஓவிய மாணவர்களுக்கும், என் போன்ற சுய கற்பிப்பு ஓவியர்களுக்கும் பயன்படும்.
    பொது வாசகர்கள், கலைத் தரப்பினர் எல்லோருமே வாசிக்கும்படியான தன்மையில் இந்த நூலின் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கலை நுட்பங்கள் பற்றிய விளக்கங்களைக் கடினமற்ற நடையில், அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைத்துள்ளேன்.
    இந்த அணுகுமுறை, இந்நூலை கலை வரலாற்றுத் தகவல் களஞ்சியமாக மட்டுமல்லாமல், மரபார்ந்த நவீன ஓவியப் படைப்புக்கான உத்வேக மூலமாகவும் அமையும் என நம்புகிறேன்.

ஷாராஜ்,
பொள்ளாச்சி.
அலைபேசி: 98432 64062
மின்னஞ்சல்: shahrajscape@gmail.com

One response to “நவீன ஓவியர்களைக் கவரும் இந்திய ஓவிய மரபுகள் – முன்னுரை : ஷாராஜ்”

  1. அகமது கனி Avatar
    அகமது கனி

    எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்ட – செறிவும் ஆழமும் மிக்க கட்டுரை!

    Like

Leave a reply to அகமது கனி Cancel reply

Trending