கௌதம்புத்தர் வரலாற்றுப் புதினம் அறிமுகம் – முனைவர் க.ஜெயபாலன்
—-
“கௌதம புத்தர் அல்லது அஞ்ஞான
இருளகற்ற வந்த மெய்ஞ்ஞான ஜோதி”-1921
அரிய தமிழ் வரலாற்று நாவல்.
அன்பிற்கினிய பியதஸ்ஸி மூலம் பெறப்பட்ட இந்த நூல் எழுதியது யார் என்று அறிய முடியவில்லை, தகவல்கள் அறிந்தவர்கள் தரலாம். ஆ.மாதவையா எழுதி இருக்கலாம் என்று உள்ளுணர்வு எண்ணுகிறது. பரிதிமாற் கலைஞர் எழுதியுள்ளார் என்று ஒரு இணையதளம் கூறுகின்றது.விரைவில் இதை மறு பதிப்பு செய்யலாம்.
சங்க கால மன்னர்கள்,சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், சேரர்கள் குறித்து வரலாற்று நாவல்கள் தமிழில் நிறைய உண்டு. நாயக்கர்கள், ஐரோப்பியர்கள், முகலாய மன்னர்கள் குறித்தும் தமிழில் புதினங்கள் உண்டு.பௌத்தம், ஜைனம் குறித்தும் வரலாற்று நாவல்கள் பல வெளிவந்துள்ளன. 1921 ஆம் ஆண்டிலேயே இந்த நூல் வெளிவந்தது என்று பார்க்கும் பொழுது தமிழ் வரலாற்றுப் புதினங்களில் முதன்மையானதாக புத்தரைப் பற்றிய ஒரு நூல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகிறது. ஆனால் இந்த நூலைக் குறித்து தமிழ்ப் புதின வரலாறுகளை எழுதியவர்களோ அல்லது வேறு எந்த இலக்கிய வரலாறுகளோ எந்தச் செய்தியையும் இதுவரை தரவில்லை என்பதுதான் ஆச்சரியமான ஒன்று.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பௌத்தம், இந்தியாவின் தொன்மைமிக்க வரலாறுகள், தமிழ் மொழியின் மாண்புகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள் தொல்லியல் அகழ்வாய்வுகள் இன்னும் பற்பல உண்மையான வரலாறுகள் மறைக்கப்படுகின்றன என்பதை விடவும் 100 ஆண்டுகளுக்கு முந்தைய பல்வேறு வரலாறுகள் கூட, மூச்சு ஊடகங்கள் வெளிவந்து பலருக்கும் அறிவுத்தகவல்கள் சென்று சேர்ந்த பிறகும் கூட அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குத் தெரியாமல் நிறைய மறைக்கப்பட்டுள்ளன என்பது வியக்கத்தக்கதாக உள்ளது.
2014 ஆவது ஆண்டில் பௌத்த தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல்,அறிமுக அளவில் எம்மால் எழுதப்பட்ட பிறகு பத்துக்கு மேற்பட்ட புத்தர் பற்றிய புதிய நூல்கள், அசோகர் பற்றி பல நூல்கள் கிடைத்துள்ளன. இ.நா.அய்யாக்கண்ணு புலவர், ஏ.பி.பெரியசாமி புலவர், இன்னும் இலங்கையைச் சார்ந்த சில நூலாசிரியர்கள் எழுதிய நூல்களையும் அறிய முடிந்தது. விரைவில் பௌத்த இலக்கிய வரலாறு மறு பதிப்பு செய்யப்படும் பொழுது இத்தகு நூல்கள் பலவற்றைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டிய தேவை உள்ளது.
—–
பின்குறிப்பு :
அண்மையில் பொற்றாமரை இதழ் ஆசிரியரும் சென்னைப் புதுக்கல்லூரித் தமிழ்த்துறை துணைப்பேராசிரியருமான முனைவர் கு.சுந்தரமூர்த்தி புலனம்வழியாக ஒரு குறிப்பினை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தக் குறிப்பினை எழுதியவர் நந்தனம் கல்லூரித் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் க.ஜெயபாலன். அதுதான் மேலே தரப்பட்டிருக்கிறது.
இந்தக் குறிப்பினைப் படித்தவுடன் நண்பர் கு.சுந்தரமூர்த்தியுடனும் க.ஜெயபாலன் ஐயாவிடமும் பேசினேன். இந்தப் புதினத்தை தமிழிணையப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்த்திருந்தேன். இதனைப் பொற்றாமரை இதழில் தொடராக வெளியிடலாம் என்ற என் எண்ணத்தைத் தெரிவித்தவுடன் ஜெயபாலன் ஐயா மகிழ்வுடன் ஒத்துக்கொண்டார். ஐயாவுக்கு பொற்றாமரை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1921இல் வெளிவந்த புதினம் என்பதால் காப்புரிமைச் சிக்கல் இல்லை எனவும் தெரிந்துகொண்டேன்.
இந்த இதழிலிருந்து இந்தப் புதினம் இதழுக்கு ஒரு அத்தியாயம் என்னும் அளவில் தொடர்ந்து பொற்றாமரை இதழில் தொடராக வெளிவரவுள்ளது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதினத்தின் ஆசிரியர் பெயரை எவரேனும் அறிந்திருப்பின் தெரிவிக்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
கவிதா மணாளன்
முதன்மையாசிரியர்
(கௌதம புத்தர் புதினத்தொடரின் முதல் அத்தியாயத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்.)

Leave a comment